நவரசா பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீஜித் கே எஸ் , ஸ்ரீஜித் பிளஸ்சி தயாரிக்க, காளிதாஸ் ஜெயராம், நமீதா புரமோத், ரேபா மோனிகா ஜான், கருணாகரன் நடிப்பில் வினில் ஸ்காரியா வர்கீஸ் இயக்கி இருக்கும் படம் .
நண்பன் வீட்டுக்கு வந்து போகும் ஒரு பெண்ணும் ( நமீதா புரமோத்) அவளது கணவனும் காரில் திரும்பிப் போகையில் வழி மறிக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள் . கணவன் இறந்து போகிறான்.
தாக்கியது பெண் என்று சிலர் சொல்ல, அது பேய் என்கிறார்கள் சிலர். போலீஸ் ஒரு பக்கம் விசாரிக்க , உயிர் தப்பிய பெண்ணின் சகோதரன் (காளிதாஸ் ஜெயராம்) காரணம் தேடுகிறான் .
ரஜினி ரசிகையாக இருந்த ஒரு சிறுவன் பாலியல் மாற்றம் காரணமாக பெண்ணாக மாறி இருக்க, அவளை அந்தப் பெண் உதாசீனப்படுத்த , அதன் விளைவாக நடக்கும் சம்பவங்கள் என்று ஒரு கதை செய்து இருக்கிறார்கள் .
நமீதா பிரமோத் கண்ணீரில் ஊறும் மலர் போல அழகாக நடித்துள்ளார் . காளிதாஸ் ஜெயராம், ரேபா மோனிகா ஜான் ஆகியோர் இயல்பு .
ஆண், திருநங்கை, பெண் ஆகிய கெட்டப்களில் மிக அசத்தலாக நடித்து பிரம்மிக்க வைக்கிறார் பிரியங்கா சாய் . சபாஷ் விபச்சார புரோக்கர் கம் ஆட்டோ டிரைவராக வரும் கருணாகரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
விஷ்ணு வின் ஒளிப்பதிவு அருமை.
4 மியூசிக்கின் ஒளிப்பதிவு, தன்யா பாலகிருஷ்ணனின் ஆடை வடிவமைப்பு, ஆகியவை சிறப்பு
இத்தனை இருந்தும் கதை திரைக்கதை என்ற உயிர்ப் பகுதிதான் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு கந்தலாகிக் கிடக்கிறது , குடி போதையில் உளறியது, தூக்கத்தில் உளறியது , பயத்தில் உளறியது இவற்றை எல்லாம் இஷ்டத்துக்கு அடுக்கி பைண்டிங் பண்ணி ஷூட்டிங் போனது போல ஒரு திரைக்கதை . லாஜிக் இல்லை. தெளிவு இல்லை .
”அவிடே போ.. இல்லா… இல்லா.. இவிடே போ .. இல்லங்கேல் … எந்தயாலும் போய்க்கோ’ என்கிற மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட். .
அரை இருட்டு சிவப்பு சேலை , சைடு இடுப்பு இவை இருந்தால் படம் ஓடி விடும் என்று இவர்களாகவே முடிவு செய்து இருக்கிறார்கள்.
உளுந்தூர்பேட்டையில காற்றாலை எங்க இருக்கு? சிவாஜி தியேட்டர் எங்க இருக்கு? சும்மா போற போக்கில் புண்ணாக்கு மென்னுட்டு போறதா?
அப்புறம் ரஜினி பெயரை படத்துக்கு வைத்து , படத்துக்குள் அவரது பேனர்களைக் காட்டுவதால் எல்லாம் தமிழ் நாட்டில் படம் ஓடும் என்று இன்னுமா நம்பறீங்க சேட்டன்ஸ்? பூவர் பாய்ஸ் ! ( பயன்பாட்டுத் தொகை கேட்டு வக்கீல் நோட்டீஸ் வரலாம் . கவனம் )
தமிழில் படம் எடுத்தாலும் வம்படியாக ஏகப்பட்ட மலையாள முகங்களைக் கொண்டு வந்து கொட்டுவது… ” நீங்க கேரளாவா ? ரொம்ப அழகா இருக்கீங்க ?” என்ற வசனத்தின் மூலம் கேரளப் பெண்கள் மட்டும்தான் அழகு என்று தமிழ் நாட்டில் புரமோட் செய்வது…. ம்ம்.. ம்ம்.. தப்பில்ல தப்பில்ல…
ஆனா இதில் எல்லாம் கவனமாக இருந்தவர்கள் கொஞ்சம் நல்ல கதை திரைக்கதை, சரியான கதாபாத்திர வடிவமைப்பு டிசைனிங் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி இருக்கலாம் . ஒரு நல்ல தமிழ் எழுத்தாளரை வைத்து இருக்கலாம் .
அவள் பெயர் ரஜினி … ஆக மாட்டா மச்சினி !