அவியல் @ விமர்சனம்

aviyal 888

குறும்படங்களை வணிக ரீதியான திரையரங்குகள் மூலம் வெகு ஜன மக்களிடம் கொண்டு போவதை ,  தவமாகக் கொண்டிருக்கும்  ஹை டெக் பகீரதன் கார்த்திக் சுப்புராஜின்,  இரண்டாவது முயற்சி இந்த அவியல் 

அல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோஹித் ஷர்மா , லோகேஷ் கனகராஜ், குரு சமரன் என்ற ஐந்து இயக்குனர்கள் இயக்கிய ஐந்து குறும்படங்களை,
 தனது ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தொகுத்து ஒரு படமாக திரைக்கு அனுப்பி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் . 
பாபி சிம்ஹா , நிவின் பாலி போன்ற புகழ் பெற்ற நடிகர்களும் விஷால் சந்திர சேகர் போன்ற வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இசை அமைப்பாளர்களும் பணியாற்றிய படங்கள் இதில் உண்டு . 
இந்த படங்களை அணில் கிருஷ்ணன் என்பவர் வரிசைப்படுத்தி தொகுத்து இருக்கிறார் . 
அவியல் ருசி எப்படி ? பார்க்கலாம் . 
aviyal 4
என்ஜினீயரிங் படித்து விட்டு வேலைக்குப் போகாமல்  சினிமா டைரக்ஷன் மீது ஆசைப்பட்டு , அதில் முழுக்க ஈடுபட முடியாமல சோம்பேறித்தனமாகத்  திரியும் ஒருவனை ,
டீக்கடையில் உட்கார்ந்து திட்டுவது போல வருகிறது முதல் (சிறு) குறும்படம் . 
பேசிக் கொண்டுப்பவனுக்கு டீ கொடுத்துப் போகிறவனின்  ரியாக்ஷன் , அவன் கொண்டு வரும் டீ கிளாஸ்களின் எண்ணிக்கை , எந்த விதமான கவுண்ட்டரும் இல்லாமல் வெகு நேரம் போகும் ஷாட்கள்….
இவற்றின்  மூலம் கொஞ்ச நேரத்திலேயே நடப்பது அட்சர சுத்தமாக புரிந்து விடுவதால் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவே . எனினும் வசனம்  அவ்வளவு சிறப்பாக இருந்தது . நடித்தவரும் நன்றாக நடித்து இருந்தார் .
25 வயதில் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ready for mission பெண்ணுக்கு பத்து வயசுப் பையன் துணை மாப்பிள்ளையாக மாலை போடுவது போல,
அவியல் படத்தில் இது ஜஸ்ட் ஒரு லுல்லல்லாயி குறும்படம்தான் என்பதால் ,  அடுத்த படம் பற்றிப் பேசலாம் .
சுருதி பேதம் 
——————-
aviyal 6
பைக் ஓட்டுவது பாதுகாப்பு இல்லை என்று சொன்ன  காதலியையும் மீறி ஒரு இளம் காதலன் பைக் வாங்க , அதனால் கோபத்தில் அவனைப் புறக்கணிக்கிறாள் அவன் காதலி
. எனவே காதலியை பைக்கில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும் என்ற அவனது கனவு பட்டுப் போகிறது .
அந்த நேரம் பார்த்து அவனது அம்மா  ஊரில் இருந்து வரும் தனது தங்கையை அதாவது அவனது சித்தியை,  பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பைக்கில் ஏற்றி வரச் சொல்கிறார் .
அழகான தன் காதலி உட்கார  வேண்டிய தனது புது பைக்கின் பின் சீட்டில்  ஒரு கிழவி உட்கார  வேண்டி ஆகி விட்டதே என்ற எரிச்சலில்  அவனும் பைக்கை எடுத்துக் கொண்டு போகிறான் .
சித்திக்காகக் காத்திருக்கும் போது ஓர் அழகான இளம் பெண்ணைப் பார்க்கிறான் . ‘இந்த மாதிரி பொண்ணு லவ்வரா கிடைச்சா , இவளை பைக்ல வச்சு சுத்தினா எப்படி இருக்கும்?’ என்று ஏங்குகிறான் .
அடுத்த சில நொடிகளில் தெரிகிறது அவள்தான் உண்மையான சித்தி என்று .  வீட்டுக்கு அழைத்து வருகிறான்.
அப்பா அம்மாவின் திருமணம் அம்மாவின் குடும்பத்துக்கு பிடிக்காமல் போனதால் உறவு விடுபட்டுப் போய் விட்டது என்பது,  அவனுக்கு ippothu  சொல்லப்படுகிறது .  
தவிர  தாத்தாவுக்கு அம்மா  நாலாவது மகள் ; இந்த சித்தி ஒன்பதாவது மகள் என்பதும் , இந்த சித்தி பிறந்த ஒரே வருடத்தில் அவன் பிறந்த காரணத்தால்,
 ஒரு வயது மட்டுமே மூத்த பெண் அவனுக்கு சித்தி உறவாக ஆகி விட்ட விந்தையும்  விளக்கப்படுகிறது . 
அவனால் அவளை சித்தியாக பார்க்க முடியவில்லை .  மயக்கத்துடனேயே பார்க்கிறான் . அவளுடைய பேச்சு மற்றும் நடவடிகைகளும் அந்த மயக்கத்தை நியாயப்படுத்தும் விதமாகவே அவனுக்கு இருக்கின்றன . 
அவளை கல்யாணம் செய்தது கொள்ளும் முடிவுக்கே அவன்  வருகிறான் . 
“சித்தியை எப்படிடா கல்யாணம் செய்து கொள்வது?” என்று கண்டிக்கும் நண்பனிடம் “இதே அவ பையனா இருந்து நான் பொண்ணா  இருந்தா தாய்மாமன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வைப்பீங்கள்ல?
aviyal 1
அப்போ  நான் பையன் அவ பொண்ணா இருக்கறதால மட்டும் சித்தின்னு மறுக்கறது என்ன நியாயம் ? அதுக்கு ஒரு நியாயம் ? இதுக்கு ஒரு நியாயமா/” என்று பொங்குகிறான் .
இந்த நிலையில் அந்த சித்தியின் …. அடச்சே ! அந்த காதலியின் பழைய பாய் ஃபிரண்ட் அவளை பிளாக் மெயில் செய்வதாகச்  சொல்லி அவள் ,அழுகிறாள் . 
வருங்கால கணவன் என்ற  பந்தாவில் அவளை அழைத்துக் கொண்டு அந்த ஃபாய் பிரண்டை கண்டிக்க , மேற்படி பைக்கில் போக , அங்கு நடக்கும் அதகள ரணகள கலகல கலாட்டாதான் மிச்சப் படம் . 
நமது ஊரைப் பொறுத்தவரை அம்மாவின் தங்கை  அன்னைக்கு சமம் , .ஆனால்  வடக்கில் பாபி எனப்படும் இந்த சித்தி உறவு ரொம்பவே ஜோவியல் மற்றும் சோஷியலானது . 
எனவே அதற்கேற்ப காதலனின் அப்பா இந்திக்காரர் என்று சொல்லி அதனால் அவனும் அவன் அம்மாவும் கூட வட இந்தியக் கலாசாரத்தில் ஊறியவர்கள் என்று காட்டுவது முதல் புத்திசாலித்தனம் .
என்றாலும் சித்தி என்று அறிந்த பின்னும் அவன் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுவது உறுத்தலாகவே இருக்கும் நிலையில்,
 தாய் மாமன் கல்யாண உறவை கேள்வியாக்கி சமாதானப்படுத்துகிறார்கள் . இது இரண்டாவது புத்திசாலித்தனம் 
ஆனால் அதன் பின்னர் கதையை கையாண்ட விதம் மிக மிக அருமை . 
படம் முடிந்த பின்னர் அவளை சித்தி என்ற கோணத்தில் எல்லோரும் பார்த்தால்கூட  அவள் செய்த எதுவுமே தப்பாக இல்லாமல் இருப்பது டைரக்டரின் வெற்றி . 
(அதுசரி ..  என்னை இப்படி பண்றியே கடவுளே . இரு . நானும் சீக்கிரம் மேல வருவேன்” என்ற வசனத்தின் தொடர்ச்சியாக வரும்,
 “வந்து உன்ன வச்சுக்கறேன் “என்ற வாக்கியத்துக்கு “i will take care of you ” அப்படின்னு ஆங்கில சப் டைட்டில் போட்டது யாருங்க?)
பொதுவாக பெண்கள் பக்குவம் மற்றும் கல்மிஷம் இல்லாத குணம் காரணத்தால் எதையுமே இயல்பாக எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் ,
ஆண்கள்  ஓவர் சிந்தனை மற்றும் பக்குவமின்மை காரணமாக தவறான முடிவுகள் எடுப்பார்கள் என்பதையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது  இந்தப் படம் .
difference but acceptable என்ற இன்றைய ரசிக மனோபாவத்துக்கு செம தீனி போடும்  இந்தப் படத்துக்குள் ஒரு வெற்றிகரமான நல்ல முழு நீள (நீல அல்ல ) கமர்ஷியல் தமிழ் சினிமா இருக்குது.
தம்பிகளா ! யோசிங்க .. யோசிங்க !
கதைப் போக்கு , கேரக்டர்கள் வடிவமைப்பு , இயக்கம் ,  ப்ளஸ் ஜனரஞ்சகம் என்று எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிற இந்தப் படம்தான் அவியலில் பெஸ்ட் பீஸ். 
களம் 
———
Aviyal Movie Stills
ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் டைரக்ஷன் வாய்ப்புக் கேட்டு இருக்கும்,  ஒரு மொட்டு விடும் இயக்குனன்,  அதற்காக நண்பர்களோடு சேர்ந்து ஒரு குறும்படத்தை இயக்கி ,
அதை ஒரு சிடியில் பதிவு செய்து கொண்டு போகிறான் . 
இன்னொரு பக்கம் . பிக்பாக்கெட் அடிக்கும் பலரை தனக்குக் கீழ் பணியமர்த்தி மெயின்டைன் செய்து பணம் பார்க்கும் ஒருவனிடம்  வேலை கேட்டு  வெளியூர் நபர் ஒருவன் வருகிறான் . 
வேலை கேட்கும் அவனிடம் , ”அதோ அந்த பையை அடிச்சுக் காட்டு . அடிச்சுட்டா எனக்குக் கீழ நீ வேலை செய்யலாம் . இல்லன்னா ஊருக்கே போய்டு” என்கிறான் . 
அவன் சுட்டிக் காட்டும் பையில் இருக்கிறது… தயாரிப்பாளருக்கான  சி டி . 
வேலைக்கு சேரும் வெறியில்  பிக்பாக்கெட் நபர் அந்த பையை அடித்துக் கொண்டு பொய் விடுகிறான் , எனவே இயக்குனருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போய் விடுகிறது . 
இயக்குனர் யூனிட் நபர்கள் மனம் நொந்து இருக்கும் நிலையில் பிக் பாக்கெட் அடித்தவன் மீண்டும் இவர்கள் பார்வையில் பட , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம். 
aviyal 88
இயல்பாக ஆரம்பித்து ஒரு நிலையில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி , லாபத்துக்கு முன்னாள் பாலிசியோ கவுரவமோ பெரிய விஷயம்  இல்லை என்று என்னும் நபர்களின் மன நிலையை சொல்லி —
சினிமா உலகில் இந்த மனநிலை கொண்டவர்கள்தான் அதிகம் என்பதை மறைமுகமாக  சொல்லி — எதிர்பாராத திருப்பத்துடன் இந்தப் படம் முடிகிறது . 
பிக்பாக்கெட்களுக்கு வேலை தரும் நபராக நடித்துள்ள  நபர் மிக சிறப்பாக கவனம் கவர்ந்தார் . இயக்குனராக நடித்தவரும் சிறப்பாக நடித்திருந்தார் ..
படக் குழுவும் பிக் பாக்கெட் குழுவும் ஒரு நிலையில் ஒரு களத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறது. தேவையான எல்லா கேரக்டர்களையும் அந்த இடத்துக்கே வர வைத்து ,
 அந்த இரவில் அங்கேயே படம் முடிவது போல எதாவது செய்து இருந்தால்  இன்னும் தெறிப்பாக இருந்திருக்கும் 
கண்ணீர் அஞ்சலி 
——————————–
avyal 1
செத்துப் போன மகனின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்கச் சொல்லி,  அவன் நண்பர்கள் இருவரிடம் கொடுத்து காரில் அனுப்புகிறார்கள் ஒரு அப்பாவி அல்லது காமெடி பீஸ் பெற்றோர் .
போகும் வழியில் அந்த நண்பர்கள் இருவரும் சரக்கடிக்க முடிவு பண்ணி அஸ்திக் கலயத்தோடு டாஸ்மாக்கில் நுழைகிறார்கள் . அங்கே எதிர்பாராதவிதமாக அஸ்திக் கலயம் கீழே விழுந்து உடைகிறது .
அப்போது அங்கே தண்ணி அடித்துக் கொண்டு இருக்கும் மலையாள சேட்டன் ஒருவர்  , உதவிக்கு வந்து ஒரு பீடியா சுயர் டப்பாவில் அஸ்தியை அள்ளிக் கொடுத்து உதவுகிறார் . 
உதவிய அவருக்கு பதில் உதவி செய்யும் விதமாக திண்டிவனத்துக்குப் போகும் அந்த சேட்டனையும் காரிலேயே  அழைத்து வருகின்றனர் . காரில் அவன் செய்யும் நச்சுகள் தாங்க முடியாமல்,
 வழியிலேயே இறக்கி விட்டு விட்டுப் போகின்றனர்.  கொஞ்ச நேரத்தில் காரை போலீஸ் வழி மறிக்கிறது. சந்தேகக் கேசில் இருவரையும் இன்ஸ்பெக்டர் விசாரிக்கும்போதுதான் ,
தாங்கள் சந்தித்த சேட்டன் , ஒரு வல்லிய கொக்கைன் போதைப் பொருள் கடத்துபவன் என்பது தெரிய வருகிறது . 
ஒரு வழியாக போலீசால் விடுவிக்கப்பட்டு போகும்போது , செத்துப் போன நண்பன் காருக்குள் உயிரோடு வருகிறான் .
”என் அஸ்தியை நீங்கள் கரைத்து விட்டால் நான் ஒரேயடியாக போய் விடுவேன் . அஸ்தியைக் கரைக்காமல் இருந்தால் உங்களுக்கு கோடீஸ்வரனாகும் வழி சொல்கிறேன் ”என்கிறான் .
அப்போதுதான் சேட்டன் தங்கள் காரில் இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் பவுடரை வைத்து விட்டுப் போய் விட்டது அவர்களுக்குள் தெரிகிறது . 
avyal 2
அந்த பொருள் எங்கே போய்ச் சேர வேண்டுமோ அந்த தெலுங்கு ரவுடி , பொருளை தவற  விட்ட மலையாள சேட்டனை வறுத்து எடுத்துக் கொண்டிருக்க ,
ஆவியாக வந்தவன் தன் நண்பர்கள் இருவரையும் அதே தெலுங்கு ரவுடியிடமே போதைப் பொருளை விற்க அழைத்துப் போகிறான் . அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த படம் 
ஒரு சாவு விசயத்தை எடுத்த எடுப்பிலேயே காமெடி ஆக்கும் வித்தையில் ஜஸ்ட் லைக் தட் ஜெயிக்கிறது இந்தப் படம் .
செத்துப் போன பையனின் அம்மாவை அவனது அப்பா ”அம்மா .. அஞ்சலிதேவி..” என்று அழைக்கும்போதே குபுக்  என்று சிரிப்பு வருகிறது நமக்கு . அஸ்திக் கலயம் டாஸ்மாக்கில் உடையும் வரை கூட செம செம …
ஆனால் அடுத்த கட்டமான கொக்கைன் போதைப் பொருள் விசாரணை என்ற ஏரியா வழக்கமான ஒன்றாகி விட்டது .
இப்படிப் போகாமல் அஸ்திக் கலையம் உடைந்த  நிலையில் இவர்கள் வேறு டப்பாவுக்கு மாற்ற அதுவும் ஒவ்வொன்றாக உடைகிறது .
ஒரு நிலையில் நண்பனே ஆவியாக வந்து “என் அஸ்தியை நீங்கள் கரைத்து விட்டால் நான் ஒரேயடியாக போய் விடுவேன் . அஸ்தியைக் கரைக்காமல் இருந்தால் உங்களுடனே இருந்து …”
— என்ற ரீதியில் வேறொரு கதைப் போக்கில்,  தொடந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் போயிருந்தால் …முற்றிலும் புதிய பாணிப் படமாக வந்திருக்கும் 
எலி 
———
aviyal 2
யோவ் அல்போன்ஸ் புத்திரா !
இந்தப் படத்தைப் பத்தி நான் எப்படின்னு சொல்லுவேன் ..? என்னன்னு சொல்லுவேன் ?
சரி விடு நீயாச்சு நானாச்சு பாத்துருவோம் . அதாவது 
ஒரு சுண்டெலியை வீழ்த்த அதிகார பலத்தோடு ஆணவமாக திட்டம் போடும் ஒரு பெருச்சாலியும் அதற்குத் துணையாக இருக்கும் சாக்கடை எலிகளும்,
ஒரு சின்ன முண்டும் எலியை தொந்தரவு செய்ததால் , சுடப்பட்டு செத்து விழும் கதைதான் இந்த எலி . 
ஒரு பழைய அடுக்குமாடிக் குடியிருப்பின் புழுதி படிந்த குடியிருப்பில் சரக்கு அடித்துக் கொண்டே கெத்தாக ஒரு கதை சொல்கிறார் ஒரு தாதா (பாபி சிம்ஹா)  
“ஒரு எலியை பூனை துரத்தியது” என்கிறார் . வேறு இடத்தில் ஓர் இளைஞனை (நிவின் பாலி)  ஒரு கும்பல் துரத்துகிறது .
இப்படி தாதா கதை சொல்லும் போது மேலே உள்ள ஃபிளாட்டில் மரச் சாமான் ஒன்று வேகமாக அசையும் ஒலி தொடர்ந்து காதடைக்கும்  அளவுக்குக் கேட்டு, கதை  சொல்ல விடாமல் தொந்தரவு செய்கிறது . 
தாதா டென்ஷன் ஆக , துணை தாதாக்களில் ஒருவன் வெளியே போய் ”என்னய்யா சத்தம் ? இனிமே சத்தம் கேட்டுதுன்னா வந்து சுட்டுக் கொன்னுடுவேன்” என்று மிரட்டி விட்டு வருகிறான் . 
கதையைத் தொடரும் தாதா “அப்போ ஒரு கருடன் அங்கு வர அதுக்கிட்ட எலி  எலி உதவி கேட்குது ” என்கிறார் . அங்கே பைக்கில் வரும் ஒருவனிடம் துரத்தப்படும் இளைஞன் உதவி கேட்க ,
அவனை ஏற்றிக் கொள்கிறான் பைக்கில் வந்தவன் . 
தாதா மீண்டும் கதை சொல்ல ஆரம்பிக்க,  மீண்டும் மேல் ஃபிளாட்டில் மரச் சாமான்கள் அசையும் பலத்த சத்தம் சத்தம். மீண்டும் தாதா டென்ஷன் ஆக, மீண்டும் துணை தாதா போய் “இனிமே சத்தம் கேட்டுதுன்னா வந்து நிஜமாவே சுட்டுக் கொன்னுடுவேன்”என்று மிரட்டி விட்டு வருகிறான் . 
 
கதையைத் தொடரும் தாதா ” அது கருடன் என்பது அப்போ எலிக்கு தெரியாது .  அது ஒரு இடத்தில் இறக்கி விட்டுட்டுப் போயிடுச்சு . இப்போ அந்த எலி எங்க வருது தெரியுமா?” எனும்போது ,
அந்த இளைஞன் தாதா இருக்கும் ரூமுக்குள்ளேயே நுழைகிறான் . அப்போதுதான் இளைஞனைக் கொல்ல தாதா காத்திருப்பது உணர்த்தபடுகிறது .
aviyal 8888
தாதா துணை  தாதாக்கள் அனைவரும் அந்த இளைஞனுக்கு எதிராக துப்பாக்கியை உயர்த்த மீண்டும் மேல் மாடியில் மரச்சாமான் ஒன்று வேகமாக அசையும் ஒலி படு சத்தமாகக் கேட்கிறது . 
தாதா ரொம்ப கடுப்பாக , துணை தாதா துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சத்தம் வரும் பிளாட்டை நோக்கி வேகமாக போகிறான் . அடுத்த நொடி துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது . மரச்சாமான் அசைவு நிற்கிறது .
சுடப் போன துணை தாதாவுக்கு எல்லாரும் காத்திருக்க, உள்ளே வரும் ஒருவன் பெரிய துப்பாக்கியை வைத்து தாதா மற்றும் துணை தாதாக்களை சுட்டுக் கொன்று  தள்ளி விட்டுப் போகிறான் .  
போகும்போது ஒன்று சொல்லிவிட்டுப் போகிறான் . 
அதை இங்கே சொல்ல முடியாது . 
என்ன என்று புரிந்து கொள்ள வழி ….அடுத்த பத்தியை  மீண்டும் ஒரு முறை படிப்பதுதான் 
ஒரு சுண்டெலியை வீழ்த்த அதிகார பலத்தோடு ஆணவமாக திட்டம் போடும் ஒரு பெருச்சாலியும் அதற்குத் துணையாக இருக்கும் சாக்கடை எலிகளும் ஒரு  முண்டும் எலியை தொந்தரவு செய்ததால் ,
சுடப்பட்டு செத்து விழும் கதைதான் இந்த எலி 
ஆங்கிலத்தில் சகஜமாகப் புழங்கும் ஒரு வார்த்தை இரண்டு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தப்படுவதை வைத்து காட்சி அமைத்த விதம் நேர்த்தி. 
இதுதான் அவியல் படம் 
மொத்தப் படங்களுக்கும் படத்துக்கு என ஒரு புரோமோ பாடலை படம் முடிந்த பிறகு ரோல்லிங் டைட்டிலில் போடுகிறார்கள் . அதற்குப் பதில் எல்லோரையும் நடிக்க வைத்து ஒரு பாடலாக எடுத்து ,
படத்தின் ஆரம்பத்திலேயே வர வைத்து டைட்டில் போட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக திரைப்பட வாசனை கிடைத்து இருக்கும் . 
அப்புறம் …
 
சுருதி பேதம் , களம், கண்ணீர் அஞ்சலி என்று  இந்த படங்களை இதே வரிசையில் போட்டு  பாபி சிம்ஹா , நிவின் பாலி நடித்ததால் அந்த எலி  படத்தைக் கடைசியாகப் போட்டு படத்தை முடித்து இருக்கிறார்கள் .
ஆனால் எல்லோருக்கும் புரிய வாய்ப்பு இல்லாத எலி படம் கடைசியாக வருவது பைனல் டச் என்ற வகையில் பின்னடைவாகவே இருக்கிறது .
களம் , கண்ணீர் அஞ்சலி , எலி , சுருதி பேதம் என்ற வகையில் இந்தப் படங்களை வரிசைப்படுத்தி இருந்தால் படம் முடியும்போது வெகு ஜன ரசிகனை இன்னும் கொஞ்சம் ஈர்ப்பதாக இருந்திருக்கும் .
அவியல் .. வித்தியாச ருசிக் கூட்டு 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →