காட்டுத்தனமான ‘குற்றம் கடிதல்’

IMG_0877

இன்னும் திரையரங்குக்கே வரவில்லை. அதற்குள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றதோடு , இந்தியன் பனோரமா, ஜிம்பாப்வே உலகப் பட விழா, மும்பை உலகப் பட விழா, பெங்களூர் உலகப் பட விழா என்ற பல களங்களில் கம்பீரமாகக் கலக்கிக் கொண்டிருக்கிறது குற்றம் கடிதல் திரைப்படம் .

ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் வழங்க , கிறிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன் தயாரிக்க, புதுமுகங்கள்  சாய் ராஜ்குமார், ராதிகா,  பாவல் நவகீதன், மாஸ்டர் அஜய்  ஆகியோர் நடிப்பில் பிரம்மா என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் இந்தப் படம்,  எவ்வளவு சிறப்பான படம் என்பது , இப்படி வெளிவரும் முன்னரே விருதுகளைக் குவிப்பதில் இருந்தே புரிகிறது .

DSC_0085

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பல படங்களையும் பார்த்து நான் களைத்துப் போயிருந்த வேளையில்,  இறுதிநாள் நிகழ்ச்சி முடிந்த நிலையில் இந்தப் படம் திரையிடப்பட இருந்தது .

களைப்பு காரணமாக , படம் ரிலீஸ் ஆகும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி நான் அரங்கை விட்டு வெளியே வர, எதிர்ப்பட்ட தயாரிப்பாளர் ஜெ சதீஷ் குமார் , ”படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று அன்புக் கட்டளை இட்ட காரணத்தால்,  வசமாக சிக்கிக் கொண்ட உணர்வோடுதான்  ,அரங்கில் மீண்டும் போய் அமர்ந்தேன்.

பத்து நிமிடத்துக்குள் படம் கவராவிட்டால் , அப்போதே அதை போன் மூலம் சதீஷ்குமாருக்கு சொல்லிவிட்டு,  வீட்டுக்குப் போய் விடுவதில் உறுதியாக இருந்தேன் .

IMG_0795ஆனால் படம் துவங்கிய  மூன்றாவது நிமிடம் , எல்லாக் களைப்பும் அயற்சியும் போய், நான் அவ்வளவு  பிரஷ்ஷாக ஆனேன் . பத்தாவது நிமிடம் மானசீகமாக திரைக்குள் நுழைந்து இணைந்து , இயைந்து ….அப்படியே  கதை மாந்தர்களோடு கலந்து….

குற்றல் கடிதல் ஒரு அற்புதப் படம் !

படம் முடித்து வெளியே வரும்போது, ஒரு ஓரத்தில், என்ன மாதிரியான கருத்துகள் வருமோ என்ற உணர்வில் தயங்கி நின்று கொண்டிருந்தத இயக்குனர் பிரம்மாவை , கனத்த இதயத்தோடு கரகரத்த குரலோடு கட்டிப் பிடித்துப் பாராட்டினேன் . அநேகமாக அவரது திரைக்குழு மற்றும் திரைப்பட விழாவுக்கு படம் பார்த்த நபர்களுக்கு அப்பால் அந்தப் படத்தை பாராட்டிய முதல் வெளி மனிதன் நானாகத்தான் இருப்பேன் .

DSC_0087

பொதுவுடைமை மற்றும் தமிழின உணர்வு இவைகளைக் கொண்டு வாழ்கிற — நல்லாசிரியருக்கான தேசிய விருது பெற்ற ஒரு தமிழ் ஆசிரியரின் மகனான இயக்குனர் பிரம்மா…

Copy of DSC_0071

மக்களுடன் நின்று மக்கள் வழியே மக்களைப் பார்க்கும் கோணத்தில் மிக சிறப்பாக இயக்கி இருக்கும் படம் இது .

தவறு செய்பவரின் குற்றத்தை கடிந்து கொள்ளும்போது சில சமயம் அப்படிக் கடிந்து கொள்வதே குற்றமாகிறது . அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கடமையின் அங்கமாகவே அப்படிக் கடிந்து கொண்ட கனிவான உள்ளத்தின் கதி என்ன? என்பதே இந்தப் படம் . 

புதுமுகங்கள் , புதிய தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து கொடுத்திருக்கும்…

IMG_0663பக்குவமான இந்தப் படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் ராம், கார்த்திக் சுப்புராஜ், மகிழ் திருமேனி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .

மூன்று மாதம் முன்பே நான் பார்த்து விட்ட படம் என்னும்போதும் படத்தின் முன்னோட்டம்,  இதுவரை பார்த்திராத ஒரு படத்தின் பாடல்கள் போல சிறப்பாக இருந்தது. பாடல்களும் அப்ப்ப்ப்பப்ப்ப்படி ஈர்த்தது .

நிகழ்ச்சியில் பேசிய ராம்

IMG_0827” குற்றம் கடிதல் படம் ஓர் ஆதி வனம் போன்றது . ஆதி வனம் என்றால் மனிதர்கள் நுழையாத வனம் . அங்கே எந்த நெற்பயிரையும் விளைவிப்பதற்காக  நதிகள் ஓடுவதில்லை . எந்த மேசையையும் உருவாக மரங்கள் வளர்வதில்லை . பூக்களின் தேன் முழுக்க வண்டுகளுக்கே உரியது . அப்படித்தான் இந்தப் படம் . இதன் நோக்கம் அவார்டு வாங்குவது அல்ல . இது மக்களுக்கான படம் . அவார்டு என்பது அவர்கள் கொடுத்தது . எந்த பாசாங்கும் இல்லாத ஆதிவனம் போன்ற காட்டுத்தனமான படம் குற்றம் கடிதல் ” என்றார் .

கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது

IMG_0833

” நான் எனது ஜிகிர்தண்டா படத்தை விருதுகளுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தபோது எல்லோரும் இந்த குற்றம் கடிதல் படம் பற்றி மட்டுமே பேசினார்கள் . அப்படி என்ன பெரிய படம் இது என்ற கேள்வியோடுதான் படம் பார்த்தேன் . நெகிழ்ந்து போனேன் . ரிலீஸ் ஆகும்போது இந்தப் படத்தை மீண்டும் பார்க்கக் காத்திருக்கிறேன் ” என்றார் .

IMG_0836படக் குழுவினரை , சரத்குமார் வாழ்த்திப் பேசிய பிறகு . சிறப்புரை ஆற்றிய பாரதிராஜா ” நான் எனது படங்களில் நிஜமாக சொல்ல விரும்பிய விஷயங்களை எல்லாம் பூடகமாக – இடைப்பட்ட நிலையில்  — ஒரு மாதிரி ‘வயா மீடியா’ வாகத்தான் சொல்லி இருக்கிறேன். காரணம் நிழல்கள் படத்துக்கு ஏற்பட்ட தோல்வி! அது மட்டும் வெற்றி பெற்று இருந்தால் என் பாதையே மாறி இருக்கும் . ஆனால் நான் செய்ய முடியாமல் போனதை இந்தப் படத்தில் பிரம்மா செய்திருக்கிறார் .

IMG_0862

நான் பல சாதாரண முகங்களை எல்லாம் நடிக்க வைத்து இருக்கிறேன் . ஆனாலும் மேக்கப் போட்டு சில சினிமா விசயங்களை செய்து விடுவேன் . ஆனால் இந்தப் படத்தில் கேரக்டருக்கு பொருத்தமான முகங்களை எளிய முகங்களை புழுதியில் இருந்து கண்டு பிடித்து கொஞ்சமும் மேக்கப் போடாமல் இயல்பாக அந்தந்தக் கேரக்டர்களில் வாழ விட்டு .. அதில் இந்தப் படத்தின் இயக்குனர் பிரம்மா என்னையும் மிஞ்சி விட்டார் .

இந்தப் படத்தில் நடித்திருக்கும் புதுமுகம் ராதிகாவை நான் இந்தியாவின் மிகச் சிறந்த மூன்று நடிகைகளில் ஒருவராக சொல்வேன் . குற்றம் கடிதல் என்ற பெயர் முதற்கொண்டு,  எதிலும் சமரசம் ஆகாத முழுமையான படம் இது ” என்றார் .

IMG_0761இப்படி ஒரு அற்புதமான குழுவை படத்தை இனங்கண்டு அதை தயாரித்த  கிரிஸ் பிக்சர்ஸ் கிறிஸ்டி சிலுவப்பனை பாராட்டிய ஜெ எஸ் கே சதீஷ் குமார்

IMG_0677

“அவார்டு படம் என்ற உடன் மெதுவாக நகர்கிற பொறுமை இழக்க செய்கிற படம் இது என்று யாரும் என்ன வேண்டாம் . பரபரப்பான விறுவிறுப்பான உணர்வுப் பூர்வமான படம் இது ” என்றார்.

உண்மை !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →