கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ராஜேஷ் , மற்றும் ஃபாண்டம் எஃப் எக்ஸ் ஸ்டுடியோஸ் , ஆதி பிரம்மா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரக்குல் பிரீத்சிங் , இஷா கோபிகர், யோகி பாபு, சரத் கேல்கர் , கருணாகரன், பால சரவணன் ஆகியோர் நடிப்பில் ரவிக்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம்.
கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்வதால் நஷ்டப்பட்டு சென்னைக்கு வரும் ஒருவன்( சிவ கார்த்திகேயன்) , காதலியின் பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாட வைக்க காதலர்களுக்கு உதவும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் நடத்தும் நண்பர்கள் (யோகி பாபு , கருணாகரன், கோதண்டம் ) குழுவோடு ஐக்கியமாகிறான் .
ஒரு பக்கம் கதைக்கான காட்சிகள் , இன்னொரு பக்கம் குழந்தைகள் உட்பட எல்லா வயதிலும் இருக்கும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மற்றும் பண்டிகை மன நிலைக்கு ஏற்ற படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார் .
ஒரு நிலையில் கதை டெம்ப்ளேட்டில் சிக்கிக் கொள்கிறது . அயலான் என்ற கதாபாத்திரம் ஒன்றே போதும் என்று எண்ணி விட்டதால் , அதற்கேற்ற காட்சிகள் படத்தில் அமையாமல் , ஒரு நிலையில் கார்ட்டூன் படம் பார்க்கும் உணர்வு வருகிறது . ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்ததைக் குரல் கொடுக்க வைத்து இருக்கிறார்கள் . ஆனால் அது ரொம்ப தப்பான முடிவு .
ஏலியன் கேரக்டருக்கு சித்தார்த்தை டப்பிங் பேச வைக்கும் அந்த முடிவை எடுத்தபோது அதை ஒரு சிறப்பான முடிவு என்று படக் குழு நினைத்து இருக்கும். ஆனால் அதுதான் இல்லை .
மிருகங்கள் நடிக்கும் கார்ட்டூன் படங்களில் மிருகங்களுக்கு பிரபல ஹீரோ , ஹீரோயின் , வில்லன்களை குரல் கொடுக்க வைக்கும் பழக்கம் ஹாலிவுட் உட்பட எல்லா இடங்களிலும் உண்டு . லயன் மேன் போன்ற படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டபோது நமது பிரபல நடிகர்கள் அதற்கு குரல் கொடுத்தார்கள். நன்றாகவும் இருந்தது
ஆனால் அதே வால்ட் டிஸ்னி உள்ளிட்ட உலகளாவிய கார்ட்டூன் படங்களில் மனித உருவில் தோன்றும் கார்ட்டூன் கேரக்டர்களுக்கு பிரபல நடிகர்களை குரல் கொடுக்க வைக்க மாட்டார்கள் . வைத்தால் அயலானுக்கு நிகழ்ந்திருக்கும் ஆபத்துதான் நிகழும்.
என்ன ஆபத்து?
அயலான் படத்தில் அந்த ஏலியன் என்பது மனித வடிவில் சற்றே மாற்றங்களோடு இருக்கும் ஒரு கேரக்டர் . அதுவும் அதனுடைய கிரகத்தில் அதற்கு காதலி இருப்பதாகவும் , இந்த ஏலியன் வருகைக்கு அந்தக் காதலி காத்திருப்பதாகவும் எல்லாம் காட்டுகிறார்கள் . ஆக, அது ஒரு தனித்தன்மை வாய்ந்த, இன்னொரு மனிதன் போன்ற கேரக்டர்
சித்தார்த் என்பவர் எல்லோருக்கும் முகம் தெரிந்த ஒரு பிரபல நடிகர் .
ஏலியன் கேரக்டருக்கு அவர் குரல் கொடுக்கும்போது , அவரது முகமும் இமேஜும் தான் முந்திக் கொண்டு வெளிப்படுகிறதே தவிர, அந்த ஏலியன் என்ற கேரக்டரின் தனித்தன்மை அடி வாங்குகிறது .டைட்டில் கேரக்டர் பலவீனம் ஆகிறது .
இதனால்தான் உலக அளவில் கார்ட்டூன் படங்களில் வரும் மனித உருவ கதாபாத்திரங்களுக்கு பிரபல நடிக, நடிகையரைக் குரல் கொடுக்க வைக்க மாட்டார்கள் . கார்ட்டூன் படங்களுக்கே அவ்வளவு கவனம் தேவை எனில் அயலான் படத்துக்கு எவ்வளவு கவனமாக இருந்திருக்க வேண்டும்?
சரி… என்ன செய்திருக்க வேண்டும் ?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழு வருடமாக ஒரு குரல் வருகிறது … ஆனால் அவர் முகம் தெரியாது . அப்படி ஒரு முகமில்லாக் குரல் ஒன்றை – பொருத்தமான குரல் ஒன்றை – அந்த ஏலியன் கேரக்டருக்கு பயன்படுத்தி இருக்க வேண்டும் . அல்லது அப்படி ஒரு குரலைப் புதிதாகக் கண்டு பிடித்துப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
அப்போது அந்த ஏலியன் கேரக்டர் தனித்தன்மை வாய்ந்த கேரக்டராக ஜொலித்து இருக்கும் .
சில சமயம் இப்படித்தான் சிறப்பு என்று நினைத்து செய்யும் செயல்களால் சிராய்ப்பு ஏற்பட்டு விடும்
