லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரிக்க, விஷால் , ராஷி கன்னா, பார்த்திபன், கே எஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் வெங்கட் மோகன் இயக்கி இருக்கும் படம் அயோக்யா . ஜுனியர் என் டி ஆர் நடிப்பில் பூரி ஜெகநாத் இயக்கி 2015 இல் வெளிவந்த டெம்பர் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் . எப்படி இருக்கிறது அயோக்யா ? பார்க்கலாம் .
அப்பா அம்மா தெரியாத அனாதையாக விவரம் தெரிய ஆரம்பித்து சிறுவயதிலேயே திருட்டுகள் செய்து போலீசில் சிக்கி , அங்கே போனால் போலீசார் தன்னை விட திருடனாக இருப்பதைப் பார்த்து, ‘போலீசாக ஆகி விட்டால் தடையே இல்லாமல் அதிகாரத்தோடு எல்லா திருட்டுத்தனங்களையும் செய்யலாம் போல இருக்கிறதே’ என்று முடிவு செய்து , திருடி போலி சான்றிதழ்கள் வாங்கி, போலீஸ் ஆகிறான் ஒருவன் ( விஷால்) .

சென்னையில் அமைச்சர் (சந்தானபாரதி ) ஆசியுடன் கடத்தல் உட்பட பல குற்றங்கள் செய்து வரும் தாதா ( பார்த்திபன்) , தனக்கு தோதாத ஒரு மோசமான இன்ஸ்பெக்டர் வேண்டும் என்று கேட்க, சென்னைக்கு வருகிறான் அந்த அயோக்ய போலீஸ் .
காந்தி ஜெயந்தி அன்று டியூட்டியில் சேர்ந்த உடனேயே தாதாவின் தம்பிகளான நான்கு பேரை தப்பிக்க விடுகிறான் . கடத்தப்பட்ட ஓர் இளம் பெண்ணின் அம்மா கொடுக்கும் புகாரை விசாரிக்காமல் புறக்கணிக்கிறான்.
பலருக்கு உதவி செய்யும் ஓர் முதியவருக்கு ( எம் எஸ் பாஸ்கர்) சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, அவருடைய பேத்தியை கடத்துவதாக மிரட்டி அநியாய விலைக்கு தாதாவுக்கு வாங்கிக் கொடுக்கிறான்.

இவனது செயல்கள் பிடிக்காமல் அதே நேரம் தடுக்கவும் முடியாமல் அவனோடு போராடுகிறார் நேர்மையான ஒரு ஹெட் கான்ஸ்டபிள் (கே எஸ் ரவிகுமார்) .இதற்கிடையில் ஒரு பெண்ணை (ராஷிகன்னா ) நல்லவன் போல நடித்து காதலிக்கிறான். அவளும் விரும்புகிறாள்.
இந்த நிலையில் இன்னொரு பெண்ணை (பூஜா தேவரியா) தாதா கொல்ல முயல, தாதாவின் மாற்றி இவனது காதலியை கொல்ல முயல்கின்றனர் . காதலியை காப்பாற்றி விட , அவளோ, ‘யாருக்காக மாற்றி என்னை கொல்ல முயன்றார்களோ அவளையும் காப்பாற்று ‘ என்கிறாள்.
வேறு வழியின்றி அவளைக் காப்பாற்ற செயல்பட்டு, என்ன ஏதென்று அறியும்போதுதான் , இதுவரை தான் அயோக்ய போலீஸ் அதிகாரியாக இருந்ததன் விளைவுகள் அவனுக்கு புரிகிறது .
மாறுகிறான் . விளைவாக தாதாவுக்கும் அவனுக்கும் மோதல் ஏற்படுகிறது .

பாதிக்கப்பட்ட பெண் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட , அவன் என்ன செய்தான் ? அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த அயோக்யா.
படம் துவங்கி ஒரு நிலை வரை ‘என்னடா இது படத்தில் வரும் எல்லோருமே அயோக்கியர்கள் .. இதில் என்ன சுவாரசியம்? சிக்கிட்டமோ?’ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை . ஆனால் காதலியின் ஆசைக்காக நல்லது செய்ய துவங்கும் ஹீரோ அதைத் தொடர்ந்து, நல்லவனாக மாறும் போது படம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது .
விஷாலுக்கும் கே எஸ் ரவிக்குமாருக்கும் இடையில் நிகழும் உரையாடல்கள் சில இடங்களில் கவனிக்கவும் கைதட்டவும் வைக்கிறது . சில இடங்களில் படத்தில் பார்த்திபனே சொல்வது மாதிரி ‘ என்ன வசனம் டா இது. இதை எல்லாம் எழுதினது யாரு’ன்னு கேட்கவும் வைக்கிறது .

டெம்பரை விட திரைக்கதையில் மேம்பட்டிருக்கிறது அயோக்யா . தான் செய்த தவறுகளுக்கான தண்டனைகளை நாயகன் ஏற்கும் காட்சிகள் சிறப்பு . குறிப்பாக எம் எஸ் பாஸ்கர் கதாபாத்திரத்தை தன்னை அறையும்படி நாயகன் சொல்லும் காட்சி.
கார்த்திக்கின் ஒளிப்பதிவும் சாம் சி எஸ் சின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. சண்டைக்காட்சிகளில் அதிர அடிக்கிறார் ராம் லக்ஷ்மன் . கிளைமாக்சில் ரமணா வாசனை .
பண வெறி பிடித்த போலீஸ்காரனாக, டெம்பர் ஏறினால் என்ன செய்வது என்று தெரியாமல் கொந்தளிக்கும் நபராக , தயங்காமல் அராஜகம் செய்யும் இரக்கமற்ற நபராக அசத்துகிறார் விஷால் . ஆங்காங்கே கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தாலும், இதுவரை இல்லாத அழுத்தமான வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழிகள் .

புதைந்த நிலையில் இருந்து எழுந்து வரும் காட்சியில் அபாரமாக பங்களிப்பு செய்திருக்கிறார் விஷால் .தனக்கே உரிய பாணியில் பார்த்திபன். படத்தின் வசனத்தையே கலாய்த்து பதில் வசனம் பேசும் அந்த காட்சி கலகல
ராஷி கண்ணா அழகு. பூஜா தேவரியா செண்டிமெண்ட் செண்டு . கே எஸ் ரவிகுமார் இயல்பாக நடித்திருக்கிறார் . எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல நெகிழ வைக்கிறார் . அமைச்சராக வரும் சந்தான பாரதி சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் .
அவசரம் என்பது எப்போதுமே நிரபராதிகளுக்கு எதிரானது என்ற நிலை இறுதியில் உருவாவதன் மூலம் , படத்தின் கிளைமாக்சுக்கே எதிராக, அதாவது கிளைமாக்சின் நோக்கத்துக்கே எதிராக அதாவது படத்தின் அவசியத்துகே எதிராக மாறி அதன் மூலம் செம் சைடு கோல் விழுகிறதே . கவனிக்கவில்லையா இயக்குனர் வெங்கட் மோகன் ?

உண்மையை சொல்ல பூஜா தேவரியா கதாபாத்திரம் வரும்போது, உண்மையை சொல்ல வேண்டாம் என்று நாயகன் சொன்ன தகவல் வர, உண்மையைச் சொல்லாமலே அந்தப் பெண் போனாள் என்று கதையை முடித்து இருந்தால் அந்த சேம் சைடு கோல் இல்லாமல் போயிருக்கும். படம் இன்னும் கனமாக இருந்திருக்கும் அர்த்தமுள்ளதாகவும் இருந்திருக்கும் .
எனினும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற படத்தின் கருத்தும் , ஒரு குற்றவாளியின் திருந்திய மன சாட்சி பற்றி பேசும் விதமும் தரத் தராசிலும் படத்துக்கு எடை கூட்டித் தருகிறது .
அயோக்யா … அட யோக்யா !