ரால்ஃப் புரடக்ஷன்ஸ் சார்பில் ரஃபேல் சல்தன்ஹா தயாரிக்க, அறிமுக நாயகன் ரிஜின், ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்த ஆஷ்ரிதா , பட்டிமன்றம் ராஜா ஆகியோர் நடிக்க, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்துக்கு இசை அமைத்த ரஜின் மகாதேவ் இசையில் தனி ஒருவன் படத்துக்கு படத்தொகுப்பு செய்த கோபி கிருஷ்ணாவின் படத் தொகுப்பில், ஜே.கே. கல்யாண்ராம் ஒளிப்பதிவில்….
இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளரான நாகராஜன் இயக்கி இருக்கும் படம் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’
”இந்தப் பாடலைப் பாடத்தான் அந்த மனிதரே பிறந்தாரோ என்று எண்ணும் அளவுக்கு, டி எம் சவுந்திராராஜன் பாடிய பக்திப் பாடல் ”அழகென்ற சொல்லுக்கு முருகா….”. அப்பேர்ப்பட்ட பக்திப் பாடலின் வரிகளை இப்படிப் பயன்படுத்தலாமா/” என்று கேட்டால் ” நான் அந்தப் பெயரை வைத்து தவறாக எதுவும் சொல்லவில்லை . காதலைதான் சொல்கிறேன் . முருகனே காதல் கடவுள்தானே ” என்கிறார் இயக்குனர் .
தொடர்ந்து,
”ஒருவன் ஒரு பெண்ணை மிக உண்மையாக காதலிக்கிறான். ஆனால் அவனது புறத் தோற்றம் அவனை அவளுக்கு கெட்டவனாகக் காட்டுகிறது . அவனால் பிரச்னைகள் வருமோ என்று பயப்படுகிறாள். எனவே அவனிடம் இருந்து தப்பிக்க முயல்கிறாள் . ஒரு நிலையில் அவன்தான் பாதுக்காப்பு என்று உணர்ந்து அவன் காதலை ஏற்கிறாளா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இதை நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறேன். நாயகனிடம் இருந்து தப்பிக்க நாயகி செய்யும் வித்தியாசமான முயற்சிகள்தான் படத்தின் வித்தியாச அம்சம். படத்தின் கெட்டவர்கள் என்று யாருமே இல்லை. இது முழுக்க முழுக்க சுவார்சயமான லவ் காமெடி படம் ” என்கிறார் நாகராஜன் .
இசையமைப்பாளர் ரஜின் மகாதேவ்
” பாடல்களில் வரிகள் கேட்கும் அளவுக்கு இருக்கவேண்டும் . அதே நேரம் இனிமையாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் என் நோக்கம் . இந்தப் படத்தில் நான் அதை செய்து விட்டதாக எல்லோரும் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது . எல்லோரும் கொண்டாடும் “தேவதையோட கொலுசுச் சத்தம்” அதற்கு ஓர் உதாரணம் .
”காயலான் கடை” என்று துவங்கும் பாடலும் அப்படியே . காயலான் கடை பாட்டை பாடியது மட்டும்தான் கானாபாலா. எல்லா பாடல்களான் நன்றாக வந்திருக்கிறது என்ற பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது ” என்கிறார் .
ஒளிப்பதிவாளர் ஜே.கே. கல்யாண்ராம் “
வட சென்னைப் பின்னணியில் மிக யதார்த்தமாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம் . நிச்சயம் எல்லோரும் ரசிக்கும்படமாக இதைக் கொண்டு வந்திருக்கிறோம் ” என்றார் .
“கதையை காட்சிகளை சூழலை மிக நன்றாக விளக்கி என்னை சிறப்பாக இயக்குனர் நடிக்க வைத்தார் . ஒளிப்பதிவாளர் என்னை மிக அழகாகக் காட்டி இருக்கிறார்”
என்று நாயகி ஆஷ்ரிதா சந்தோஷப்பட , நாயகன் ரிஜின் ” என்னை இந்தப் படத்துக்கு இயக்குனர் தேர்ந்தெடுக்கக் காரணம் என் கலர்தான். நான் இந்தப் படத்துக்குப் பொருத்தமான கருப்பு என்பதுதான்.
படம் பார்த்தபிறகு நிறைய நம்பிக்கை வந்திருக்கிறது ” என்கிறார் .
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பாடல்களை வெளியிட,
இயக்குனர் சுசீந்திரனும் இயக்குனர் திருவும் பெற்றுக் கொண்டனர் .
நிகழ்ச்சியில் பேசிய பட்டிமன்றம் ராஜா
“படத்தில் நான் கதாநாயகியின் அப்பாவாக வருகிறேன் . மிக நகைச்சுவையாக காட்சிகள் வந்திருக்கின்றன . இயக்குனர் நாகராஜன் காட்சிகளை சொல்லும் விதமும் அவரது தன்னம்பிக்கையும் அவர் மிகப் பெரிய இயக்குனராக வருவார் என்பதைக் காட்டுகிறது ” என்றார் .
இயக்குனர் திரு தன் பேச்சில்
” தஞ்சாவூர் பின்னணியில் மிக அருமையான கதைகள் வைத்திருக்கிறார் நாகராஜன் . ஆனால் முதல் படத்தை அவர் வட சென்னைப் பின்னணியில் எடுத்து இருப்பது அவர் இன்னொரு தளத்தில் பயணிக்க விரும்புவதைக் காட்டுகிறது . அவருக்கு வெற்றியை தரும் விஷயமாக அது இருக்கும் ” என்றார் .
சுசீந்தரன் பேசும்போது
” நாகராஜன் எனக்கு பல வருட நண்பர் . எனது பல படங்களில் பணியாற்றியவர். மிக சிறந்த திறமைசாலி . இந்தப் படத்தின் பாடல்காட்சிகளையும் முன்னோட்டத்தையும் பார்க்கும்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது தெரிகிறது . கண்டிப்பாக இந்தப் படம் வெற்றி பெறும்” என்றார் .
விஜயசேதுபதி பேசும்போது
” படத்தின் நாயகி ஆஷ்ரிதா எனது ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்தவர் . நல்ல திறமைசாலி . இந்தப் படத்தின் பாடல்களை பார்க்கும்போது நன்றாக வந்திருப்பது தெரிகிறது . வாழ்த்துகள் ” என்றார் .
படம் பற்றிப் பேசும் அனைவரும் தானாகப் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசுவது படத்தின் தயாரிப்பாளர் ரஃபேல் சல்தன்ஹாவைத்தான் .
அது சம்பிரதாயச் சடங்காக இல்லாமல் மனப்பூர்வமாக இருந்ததை உணர முடிந்தது .
“எனது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மங்களூர் ” என்று ஆரம்பிக்கும் ரஃபேல் சல்தன்ஹா “தமிழில் நான் படம் தயாரிக்க வந்த போது இந்தப் படக் குழுவில் உள்ள அனைவரும் எனக்கு கொடுத்த அன்பும் ஒத்துழைப்பும் சிறப்பானது.
படக் குழு மட்டுமல்ல சென்னையில் அனைவரும் அவ்வளவு அன்பாக இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் .
அன்பென்ற சொல்லுக்கு சென்னை ?
.