மனிதன் ஒரு சமூக விலங்கு (மென் ஈஸ் எ சோஷியல் அனிமல் ) என்றார் அரிஸ்டாட்டில். நகரமோ கிராமமோ மனிதன் கூட்டமாகத்தான வாழ வேண்டி இருக்கிறது. எனவே இதற்கேற்றபடி “நமக்கு அருகாமையில் உள்ளவர்களோடு நட்பாக இருக்க வேண்டும். ஈகோவினால் அனைவரிடமும் பகையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. நம் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை நேசிக்கணும்” என்ற கருத்தை வலியுறுத்தி வரும் படம்தான் என்.கிருபாகரன் தயாரிக்கும் அழகிய பாண்டிபுரம் . (எங்கங்க … பக்கத்து வீட்டுப் பொண்ணை நேசிச்சா பிரச்னை பெருசாத்தானே ஆவுது )
மேற்சொன்ன விஷயதத்தோடு காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகும் இந்தப் படத்தை தாய் மண் புரடக்ஷன்ஸ் சார்பில் ந.கிருபாகரன் தயாரிக்க , பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ந.ராயன் இயக்குகிறார் .
படத்தின் நாயகனாக ஈழத்தைச் சேர்ந்த இளங்கோ என்ற இளைஞர் சினிமாவுக்கென்றே முறையாக நடனம் மற்றும் சண்டைப் பயிற்சி பெற்று கதாநாயகனாக அறிமுகமாகிறார் . (படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர்தான் தாய்மண் என்ற பெயரை நிறுவனத்துக்கு வைத்தவராம்) . கானகம் எதிர்விசை போன்ற படங்களில் நடித்த அஞ்சனா கீர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பரத்வாஜின் கிளர்ச்சியூட்டும் இசையில் “ஓரக் கண்ணாலே உத்து உத்து பாத்து ” என்ற பாடலுக்கு ரிஷா என்ற நடிகையும் “கட்டழகி நானப்பா .. கொட்டிவச்ச தேனப்பா…”என்ற பாட்டுக்கு இந்தி நடிகை ஆக்னசும் ஹீரோ இளங்கோவுடன் சேர்ந்து கிளுகிளுப்பாட்டம் ஆட…. கொடைக்கானல் , தேனி, காரைக்குடி பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் பாடல்களை அழகாகப் புகுத்தி அசத்தி இருக்கிறார்களாம் .
கதாநாயகன் இளங்கோவின் வீடும் கதாநாயகி அஞ்சனா கீர்த்தியின் வீடும் எதிர் எதிர் வீடுகள் மட்டுமல்ல . எதிரிகளாக மோதிக் கொண்டு இருக்கும் இரண்டு குடும்பத்தினரின் வீடுகள். இந்நிலையில் கதாநாயகிக்கு கதாநாயகன் மீது காதல் வருகிறது.
கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாரை கவர்ச்சி ஆட்டக்காரி (இந்தி நடிகை ஆக்னஸ் ) வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நாயகன் அங்கே அவளோடு சேர்ந்து ஒரு கும்மாங்குத்தாட்டம் போட்டு ஆடிப் பாடி விட்டு “இதான் நீங்க பாக்க வந்த பொண்ணு . ஒகே வா ?”’ என்று கேட்க, மாப்பிள்ளை வீட்டார் பின்னங்கால் பிடறிபட ஓடுகிறார்கள்.
அதேபோல கதாநாயகனின் தந்தையாக நடிக்கும் எம் எஸ் பாஸ்கர் ஊர்த் திருவிழாவில் ஆட இன்னொரு கவர்ச்சி ஆட்டக்காரியை (நடிகை நிஷா ) அழைத்து வர , அவளையும் மயக்கி புதுமுகம் இளங்கோ டமால் டமால் டப்பாகுத்து ஆடிப் பாட , நிஷாவை அழைத்து வந்தவர்களே நிஷாவை துரத்தி விடுகிறார்கள். நாயகனை மாப்பிள்ளை பார்க்க வர இருந்த பெண் வீட்டுக்கு இது தெரிந்து அதுவும் புட்டுக்குது.
விஷயம் தெரிந்த இரண்டு பேரின் வீட்டாரும் குடும்ப விரோதம் காரணமாக நாயகனுக்கும் நாயகிக்கும் வேறு வேறு துணையைக் கண்டுபிடித்து கல்யாணம் செய்து வைக்க முயல , அந்த முயற்சிகளை நாயகன் நாயகி இருவரும் முறியடிக்கிறார்கள் . அதில்தான் இருக்கிறது சில்ஃபான்ஸ் கில்மா (அர்த்தம் எல்லாம் யாரும் கேக்காதீங்க பாஸ் !)
இப்படி விசிலடிச்சான் குஞ்சு ரசிகர்களின் விழிகளை விரியவைக்கும் நோக்கத்தோடு நா.முத்துக் குமார் , பா.விஜய், விவேகா ஆகியோர் எழுதிய பாடல்களை வைத்து படத்தை முடித்து பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தி இருக்கிறார்கள் .
கலைப்புலி எஸ் தாணுவின் டைகர் ஆடியோ இந்தப் படத்தின் பாடல்களை வாங்கியிருக்க தாணுவும் அபிராமி ராம நாதனும் சேர்ந்து பாடல்களை வெளியிட்டனர் .
அபிராமி ராமநாதன் பேசும்போது” இது போன்ற படங்களின் இசையை டால்பி அட்மாஸ்பியர் , ஆரோ 3D, டி ட்டி எஸ் முறையில் அமைத்தால் நன்றாக இருக்கும் . அப்போதுதான் தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து சினிமாவை வித்தியாசப்படுத்திக் காண்பிக்க முடியும் . அதற்கு முயற்சிக்க வேண்டும் . இப்போது வரும் சின்னப்படங்களில் பத்துக்கு இரண்டு படங்கள் வெற்றிகரமாக ஓடுகிறது . அந்த இரண்டு படங்களில் ஒன்றாக இது இருக்கும் ” என்று வாழ்த்தினார்.
படத்தின் இயக்குனர் ராயனை தேவயானியின் கணவர் ராஜகுமாரனுக்கு முப்பது வருடங்களாக தெரியுமாம். “நான் சென்னை வந்த 1986ஆம் ஆண்டே அவன் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தான் . அப்புறம் எனது படத்தில் பணியாற்றினான் . முப்பது வருட போராட்டத்துக்கு பிறகு டைரக்டர் ஆகி இருக்கான் . ‘ ஒரு படம் முடிச்சிட்டு வா . உனக்கு படம் தரேன்னு இவன் கிட்ட அஜித் சார் சொல்லி இருக்கார் . அஜித் சொன்ன சொல் மாறமாட்டார் . அதனால இந்தப் படம் நூறு நாள் ஓடும் . ஓடாட்டியும் ஓட்டுவோம் . ஷீல்டு கொடுக்க அஜித்தை கூப்பிடுவோம் . அப்படியே அடுத்த படத்துக்கு நீ டைரக்டர் ஆயிடு “ என்று வாழ்த்தினார் ராஜ குமாரன் .
அதே போல ராஜகுமாரனுடனான காதல் காலம் முதற்கொண்டு ராயனை அறிந்த தேவயானியும் “ரொம்ப நல்லவர் ராயன் . எப்பவும் வடபழனி முருகன் கோவில்லேயே இருப்பாரு, அந்த முருகன்தான் இவருக்கு படம் கொடுத்து இருக்கான் .இவரு ஜெயிக்கணும் ” என்று வாழ்த்தினார் .
முருகனை முன்வைத்து தேவயானியே வாழ்த்திய பிறகு வெற்றியை அருள்வாள் வள்ளி.!