நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அந்தோணி திருநெல்வேலி தனது மெர்க்குரி நெட்வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க,
கருணாஸ், தம்பி ராமையா, ஆடுகளம் நரேன் , அகில், ஜான் விஜய், மெட்ராஸ் ரித்விகா, வினோதினி, மற்றும் கருணாசின் மகன் கென், யாழினி, சாணக்யா, ஆகிய குழ்நதை நட்சத்திரங்களும் கதாநாயகியாக புதுமுகம் கிரிஷா என்பவரும்நடிக்க,
கதை திரைக்கதை வசனம் எழுதி சார்லஸ் இயக்கி இருக்கும் படம் அழகு குட்டி செல்லம் .
செல்லக் குட்டி எவ்வளவு அழகு? பார்க்கலாம்
இலவசக் கல்வி அளிக்கும் பணியில் சிறந்து விளங்கும் கிறிஸ்தவ பள்ளி ஒன்றுக்கு உலகமயமாக்கல், அந்நியச் செலாவணி விவகாரங்கள் காரணமாக வெளிநாட்டில் இருந்து வரும் பணம் நின்று போய்விடுமோ என்ற சூழல் !
‘அப்படி ஆகி விட்டால் நாமும் தனியார் பள்ளிகள் போல கல்வியைப் பணத்துக்கு விற்க வேண்டிய நிலை வருமே’ என்று பதறுகிறார் அதன் முதல்வரான பாதிரியார் (சுரேஷ் )
கிறிஸ்துமஸ் அன்று பள்ளிக்கு வருகை தரும் கார்டினல் மனம் குளிரும்படி கிறிஸ்து பிறப்பு நாடகத்தை நடத்தி, அவர் பாராட்டும் வேளையில் பண உதவி தொடர்ந்து வேண்டும் என்ற கோரிக்கையை கார்டினலிடம் வைக்க வேண்டும் என்பது பாதிரியாரின் ஆசை.
பல்லாண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்படும் கிறிஸ்து பிறப்பு நாடகத்தை அப்படியே அதே வசனங்களுடன் சில வருடங்களாக நடத்தும் மாணவர் குழுவுக்கே இந்த வருடமும் வாய்ப்பு போகிறது . ஆனால் அதை வித்தியாசமாகவும் சிறப்பாகவும் புதுமையாகவும் நடத்த விரும்பும் ஜூனியர் மாணவர்கள் குழுவுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது .
வாய்ப்பு பெற்ற சீனியர் மாணவர் குழு ஒழுங்காக ரிகர்சல் கூட பார்க்காமல் பொழுதழிக்க, அதை அறியும் பாதிரியார் ‘நாடகமே வேண்டாம்’ என்ற முடிவுக்கு வருகிறார் . ஜூனியர் மாணவர் குழு தங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என்று மீண்டும் கேட்க, ‘புதுமையாக ஏதாவது செய்தால் வாய்ப்புத் தருகிறேன்’ என்கிறார் பாதிரியார் .
‘’இயேசு பிறக்கும் காட்சியில் பொம்மைக்குப் பதில் நிஜ குழந்தையையே குழந்தை ஏசுவாக காட்டுகிறோம்’’ என்று அவர்கள் சொல்ல , சம்மதிக்கிறார் பாதிரியார் .
புதிய நாடகக் குழுவில் ஐந்து பேர் .
ஒரு பையன் ஈழத் தமிழ்க் குடும்பத்தை சேர்ந்தவன். சிங்களக் காட்டுமிராண்டி ராணுவத்தின் விமானக் குண்டு வீச்சில் கைக் குழந்தையை இழந்த ஓர் இளம் தம்பதி (அகில் – ரித்விகா) மற்றும் சொந்த மண்ணை இழந்து இப்போது இங்கே நடைப் பிணமாக வாழும் சில பெரியவர்கள் அடங்கிய குடும்பம் அது.
இன்னொருவன் தமிழ் மரபு முருக வழிபாடு நெறிப்படி வாழும் ஒரு பெரியவரால் (தம்பி ராமையா) நடததப்படும் அநாதை இல்லத்தில் வளர்பவன்.
கணவனைப் பிரிந்து கைக் குழந்தையோடு வாழும் ஓர் அக்கா , அம்மா அப்பா ஆகியோர் அடங்கிய பிராமணக் குடும்பத்துச் சிறுமி ஒருத்தி.
பிறிதொரு சிறுவன் விவாகரத்து வாங்கிக் கொள்ளத் துடிக்கும் பணக்கார –ஆனால் பாசம் தராத —பெற்றோரின் (நரேன் – தேஜஸ்வினி) மகன்.
ஆண் குழந்தைக்கு ஆசைப்படும் ஓர் ஆட்டோ டிரைவருக்கு (கருணாஸ்) மூன்று பெண் குழந்தைகள் பிறக்க , அடுத்தும் அவன் மனைவி ஆண் குழந்தைக்காக கர்ப்பமாகி இருக்கிறாள். ஆனால் ….
செஸ் போட்டியில் அறிமுகமான ஓர் இளம் ஜோடி காதலாகி அதே வேகத்தில் காமமாவதால் கலயாணத்துக்கு முன்பே அவள் (கிரிஷா) கர்ப்பம் ஆகிறாள். கலைக்க முடியாத நிலைமைக்கும் ஆளாகிறாள். செஸ்ஸில் வளரும் அவன் அவளை புறக்கணித்து ஏமாற்றுகிறான் . ரேபிட் செஸ் போட்டியில் திறமை மிக்க அவள் , சகலத்திலும் பின்னடைவுக்கு ஆளாகிறாள் .
மேற்படி கிறிஸ்தவ பள்ளியின் ஓர் ஆசிரியைக்கு (வினோதினி) குழந்தை இல்லை . அதே நேரம் அநாதை குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் மனம் வரவில்லை .
இந்நிலையில் கிறிஸ்து பிறப்பு நாடகத்துக்கு களம் இறங்கும் மேற்படி மாணவர்கள் குழு, பிராமண மாணவியின் அக்காள் மகளை குழந்தை ஏசுவாக பயன்படுத்த திட்டமிட்டு விட்டு நாடகத்துக்கு ரிகர்சல் பார்க்கிறது .
ஆனால் திடீரென அந்த சிறுமியின் அக்காவுக்கு இருந்த குடும்பப் பிரச்னை தீர்ந்து அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனோடு புக்காத்துக்கு போய் விட ,
குழந்தை இயேசு காட்சிக்கு ஒரு குழந்தையை தயார் செய்வது எப்படி என்று பதறும் குழந்தைகளின் செயல்பாடுகள்…
மேற்சொன்ன அனைத்துக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகள், மாறுதல்கள் , திரிபுகள் , தீர்வுகளே இந்த படம் .
மன வீணையின் நரம்புகளை மயிலிறகால் மீட்டி நிறைய நெகிழ்ச்சிப் பிரவாகத்தை உண்டாக்கும்படியான கதை- திரைக்கதை – வசனத்தை அமைத்து இயக்கி இருக்கும் சார்லஸ், இப்படி ஒரு படத்தை தயாரித்து இருக்கும் அந்தோணி திருநெல்வேலி….
இருவரும் நம் இதய இமயத்துக்குள் மிக உயரமான ஒரு புதிய சிகரத்தை அமைத்துக் கொண்டு கம்பீரத்தோடு அமர்கிறார்கள் .
அடிப்படைக் கதையின்படி படத்தை கிறிஸ்தவ மத வளாகத்துக்கு வெளியே ஒரு அங்குலம் கூட கொண்டு செல்லாமல் எடுத்து இருந்தால் கூட அது நிச்சயமாக தப்பே இல்லை .
ஆனால் அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளாமல் அந்த இயல்புக்குள்ளும் நின்று விடாமல் , முருக வழிபாடு, இந்து மத மறுபிறப்பு நம்பிக்கை, ஈழத் தமிழர் சோகம் , திருவண்ணாமலைக் கோவில் , தாயினும் தாயான தத்துவனே பாடல்,
என்று இவர்கள் எல்லா தடைகளையும் உடைத்துக் கொண்டு பரந்து விரிந்து காட்சிகளை அமைத்து இருக்கும் பெருந்தன்மை மிக்க விசாலமான படைப்பு நேர்மை, உலகின் எல்லா நாடுகளின் படைப்பாளிகளும் பெற வேண்டிய ஒன்று .
அந்த வகையில் உலக சினிமாவுக்கே பாடம் சொல்கிறர்கள் இவர்கள். பெருமைப் படுகிறோம் சார்லஸ் மற்றும் அந்தோணி திருநெல்வேலி .
படத்தில்தான் எத்தனை கிளைக் கதைகள் . ஆனால் அவற்றை ஒன்றோடு ஒன்று உறுத்தாமல் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை மிக சிறப்பு.
இது ஒரு பக்கம் என்றால், திருமணத்துக்கு முந்தைய எல்லை மீறலால் ஏற்படும் பிரச்னைகள் , விவாகரத்துக்கான காரணங்கள், தனிக் குடித்தன ஆசைகள் , ஆண் குழந்தை ஏக்கம் , குழந்தைக்கு ஏங்கும் நிலையிலும் தத்தெடுப்பதில் தயக்கம் காட்டும் மடமை,
கிறிஸ்தவ அமைப்புகளின் கல்வி சேவை, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை , புதுமைகளை செய்வதற்கு இருக்கும் தடை , இன்னும் முடியாத ஈழச் சோகம் …. இன்னும்…. இன்னும்….
–என்று படத்தில் இவ்வளவு விஷயங்கள் இருந்தும் எதையுமே ஒரு பிரச்சாரமாக செய்யாமல் இயல்பாக ஆனால் மிக அழுத்தமாக ஆழமாக உணரும்படி சொல்வது பிரம்மிக்க வைக்கிறது.
ஒரு பூவின் விதையை உள்ளத்துக்குள் போட்டு விட்டு, உணர்வு என்னும் தண்ணீரை ஊற்றி அங்கேயே அதை வளர்த்துப் பூக்க வைப்பது போல ஒரு ரசனை அனுபவத்துக்கு ஆளாகிறோம்
தி நகர் குமரன் சில்க்ஸில் கடையில் ரோஜா நிற கவுனைப் பார்த்து அலறி மயங்கி விழும் ஈழத்துப் பெண் காட்சி இதயத்துக்குள் கத்தி சொருகிறது .
‘பையன் வேணும்னு ஆசைப்பட்டேன் அதுக்காக பொறந்த பொம்பளப் பிள்ளைகளை எல்லாம் சோறு போடாமலா விட்டுட்டேன் ? அதுவும் என் ரத்தம்தானே?’’ என்று கருணாஸ் பொங்கும் இடம், நாம் பார்ப்பது சினிமா அல்ல வாழ்க்கை என்ற உணர்வை தருகிறது .
கடந்த காலத்தில் வாழ்ந்த தாய் மண்ணை நினைத்துக் கொண்டு ஜடமாய் அமர்ந்திருக்கும் அந்த ஈழத்து மூதாட்டி. நமக்குள் ஏற்படுத்தும் மௌன ஓலம் நிலை குலைய வைக்கிறது.
டைட்டிலில் வரும் குழந்தைகளின் அழகு முகங்களைப் படமாக்கும் இடத்திலேயே டைரக்ஷனில் கவர்கிறார் சார்லஸ் .
மிக அற்புதமான பாடல்கள், குரல்கள் தேர்வு, சிலிர்ப்பூட்டும் பின்னணி இசை இவற்றின் மூலம், மேக்கிங்கில் உள்ள சிறு சிறு குறைகளை எல்லாம் சரி செய்து படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு செல்கிறார் இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனம். படம் கொடுக்கும் உணர்வில் முக்கியப் பங்கு இவருக்கும் உண்டு . படத்தையே ஒரு தாய்மை இசைத் தாலாட்டாக மாற்றி தூக்கத்திலும் பாடல்களை முணுமுணுக்க வைக்கிறார்
இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட அளவுக்கு ஈழத் தமிழ், இதுவரை வேறு எந்த தமிழ் நாட்டுத் தமிழ்ப் படத்திலும் சரியாகப் பயன்படுத்தப்பட்டதில்லை .
குழந்தைகள் அனைவரும் மிக சிறப்பாக நடித்து உள்ளனர் . கருணாஸ் அருமையாக நடித்துள்ளார் .
குழந்தையை தொட்டவுடன் தயக்கங்கள் உடைந்து தாய்மை பொங்கும் காட்சிகளில் வினோதினி உணர்ச்சிகரம் .
கொடுக்கும் காட்சியில் கிரிஷா முகத்தில் இருக்கும் தீர்மானம் அவரது நல்ல நடிப்புக்கு ஒரு சாட்சி.
வசனம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்க வேண்டிய படம் இது . அது குறையாகத் தெரிவதை மறுக்க முடியவில்லை.
கணவன் தன் பெற்றோரை கூடவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதை பிடிவாதமாக மறுத்து அம்மா வீட்டுக்கு வந்த பெண், தான் பாதிக்கப்பட்டது போலக் கண்ணீர் விட்டுக் காலம் கழிப்பதும், ‘’உன் வாழ்க்கையே போச்சேம்மா’’ என்று அந்த பெண்ணின் அம்மா சொல்வதும்…… என்ன சொல்ல வர்றீங்க? அல்லது என்னமோ சொல்ல வர்றீங்க!
முதல் பாதி காட்சிகளின் மேக்கிங்கில் சற்றே தெரியும் நாடகத்தனம் தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.
ஆனால் இந்தப் படத்துக்கு இவை எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை
திருவண்ணாமலை ராஜ கோபுரத்தையும் குழந்தை இயேசுவையும் ஒரு கர்ப்பத்துக்குள் அடக்கும் காட்சியை வணங்க இரண்டு கைகள் ரொம்பக் கம்மி.
ஈழத் தமிழ்ப் பெண் கடைசியில் அந்த ரோஸ் கவுனை வாங்கிக் கொண்டு போவது புல்லரிக்க வைக்கும் காட்சி .
வர்க்க பேத அழுக்குகளை தாய்ப்பாலால் கழுவும் காட்சி நம்மை அறியாமல் நெகிழ்வுக் கண்ணீர் விட வைக்கிறது .
‘’நாடகத்துக்கு குழந்தை இல்லை என்று பாதிரியாரிடம் சொன்னால் அவர் ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து விட்டுப் போகிறார் . அதற்கு இவ்வளவு களேபரமா?’’ என்ற கேள்வியை இந்தப் படத்துக்கு விமர்சனமாக வைப்பது என்பது ,
இந்தப் படத்தின் நோக்கம் அறியாத பேச்சாகவே போய் விடும் .
அழகு குட்டி செல்லம் .. அள்ளி அணைத்துக் கொஞ்சினால் நீங்களும் அழகுச் செல்லம் ஆகலாம்
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————-
சார்லஸ், அந்தோணி திருநெல்வேலி, வேத் சுகவனம் சங்கர், ஆல் குட்டீஸ், கருணாஸ் , கிருஷா, ரித்விகா, கருணாசின் மனைவியாக நடித்தவர்.