ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க ஆர் ஜே விக்னேஷ்காந்த் , அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அபிராமி, அம்மு அபிராமி, சுரேஷ் சக்ரவர்த்தி, வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, மதுரை முத்து நடிப்பில் ராஜ் மோகன் ஆறுமுகம் எழுதி இயக்கி இருக்கும் படம்.
சேலத்தில் ஒரு கல்வித் தந்தை குடும்பம், ஒரே இடத்தில் ஆண்கள் பள்ளி, இருபால் பள்ளி என்று இரண்டு பள்ளிகளை நடத்துகிறது . இரண்டுக்கும் இடையில் ஒரு மதில் சுவர்தான் தடை. இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையே போட்டி மற்றும் சண்டைகள் உண்டு . ஒரு நிலையில் நடுவில் உள்ள மதில் சுவரை தகர்த்து இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக்குகிறது நிர்வாகம்
இரண்டு குழு மாணவர்களும் ஒரே வகுப்பில் படிக்கும் நிலை. அங்கும் இரண்டு குழுவுக்கும் போட்டி சண்டை தொடர்கிறது. கடைசி வரிசை யாருக்கு என்பதற்காக குறைவாக மதிப்பெண் எடுக்கும் போட்டி கூட நடக்கிறது.
ஒரு நிலையில் இரண்டு குழுவில் ஒருவன் கல்வி நிலையத்தால் நீக்கப்பட , இன்னொரு குழு மனம் நெகிழ்ந்து ஒன்று சேர்ந்து அவனுக்கு படிக்கும் உரிமை பெற்றுத் தருகிறது . சண்டை முடிந்தது .
அப்புறம் என்ன படம் முடிஞ்சிருச்சா என்றுதானே கேட்கிறீர்கள் . இன்னும் இடைவேளையே வரலீங்க.
திடீர் என்று யாரோ ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தகவல் வருகிறது. அவன் யார் என்று கண்டு பிடிக்க நண்பர்கள் முடிவு செய்ய , இங்க தான் இடைவேளை
தற்கொலைக்கு முயல்வது யார் என்ன எதுக்கு என்பதே மீதிப் படம்.
நிறுத்தாமல் பேசுவதுதான் நகைச்சுவை என்று முடிவு செய்து கொண்டு எல்லாரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது சில நகைச்சுவை ,சில அடடே விஷயங்கள் வருவது உண்மைதான் . ஆனால் அவற்றைக் கேட்க மற்ற நேரங்களில் நாம் கொடுக்கும் விலை, தக்காளி விலையை விட அதிகமாக இருக்கிறது .
பொதுவாக டிஜிட்டல் துறையில் ராஜ்மோகன் , விக்னேஷ்காந்த் இருவரும் கன்டென்ட் மன்னர்கள் . அப்படியானால் ஒரு படம் எடுக்க வரும்போது எவ்வளவு சிரத்தை வேண்டும்? ஆனால் பேரதிர்ச்சியாக வலுவோ ஆழமோ இல்லாத விசயங்கள், கதைப் போக்குகள், வதைக்கின்றன . சும்மா முப்பது நிமிடத்துக்கு ஒரு கதை என்று தாவிக் கொண்டே இருக்கிறார்கள் .
நேர்மாறாக பாடல்களை – அதாவது முதல் பாதிப் பாடல்களை அருமையாக எடுத்து இருக்கிறார் ராஜ்மோகன். . சந்தோஷ் தயாநிதியின் இசை இனிமை . ”தேர்வில் உன் விடைத்தாளையும் என் விடைத்தாளையும் ஒன்றாய் கட்டி இணைவோமா? அந்த நூல்தான் தாலி ” என்ற அர்த்தத்தில் வரும் பாடல் வரிகள் அசத்தல் . அயாஸ் பிரமாதமாக ஆடுகிறார் .
ஒவ்வொரு முறை கை கொடுக்க முயன்றும் முடியாமல் போகும் மாணவன் சம்மந்தப்பட்ட காட்சிகளை இன்னும் வைத்து ஏதாவது ஒரு காட்சியில் முக்கிய கதைப் போக்கோடு இணைத்து இருக்கலாம் . திரைக்கதை என்பது விளையாட்டு இல்லை.
இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படத்தில் முதல் பாதி படம் மட்டும் ஒன்னேகால் மணி நேரம் வரை ஓடுவதும் , இரண்டாம் பகுதி, அதே நடிகர்கள் நடிக்க, மாறி வந்து விட்ட வேறு படத்தின் காட்சிகள் போல முக்கால் மணி நேரம் மட்டும் இருப்பதும் பெரிய பின்னடைவு .
தங்களது நிறுவனப் பெயரான பிளாக் ஷீப் க்கு ஏற்ப பா பா பிளாக் ஷீப் என்று பெயர் வைத்தது எல்லாம் சமர்த்தான விசயம்தான்.
ஆனால் தேவையான WOOL ஆனது , THREE BAGS ம் FULL ஆக இல்லாவிட்டாலும் TWO BAGS ஆவது FULL ஆக இருக்க வேண்டாமா? இப்படி ALL BAGS ம் EMPTY யாக இருந்தால் எப்படி YES SIR ! YES SIR !! சொல்ல முடியும் சார்?