பாகுபலி @ விமர்சனம்

bahu 1
அர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் சோபு எர்லகட்டா , பிரசாத் தேவிநேனி ஆகியோர் தயாரிக்க, நான் ஈ படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான இயக்குனர் எஸ் எஸ் ராஜ மவுலியின் இயக்கத்தில்,  தெலுங்கு ஹீரோக்கள் பிரபாஸ் , ராணா இவர்களுடன் நமக்கும் தெரிந்த அனுஷ்கா, தமன்னா , நம்ம ஊரு நடிக நடிகையரான சத்யராஜ், நாசர், ரோகிணி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வந்திருக்கும் தெலுங்கு – தமிழ் இரு மொழி உருவாக்க படம் பாகுபலி .

பாகுபலி என்றால் வலிமையான கைகளை உடையவன் என்று பொருள் . படத்தில் வலிமையாக என்ன இருக்கிறது ? பார்க்கலாம் .

வானில் இருந்து நேரடியாக விழுகிறதோ என்று தோன்றும் அளவுக்கு, மிக நீண்ட உயரத்தில் இருந்து,  திரட்டுப் பால் போல பொங்கி விழும் ஏராளமான பேரருவிக் கூட்டங்கள். அந்த அருவிகள் விழும் பள்ளத்தாக்குச் சமவெளியில் உள்ள ஒரு குகையில் இருந்து வெளியே வரும் —  மகாராணி போன்ற தோற்றம் கொண்ட ஒரு  பெண் மணி (ரம்யா கிருஷ்ணன் ) உடலெல்லாம் காயங்களுடன் – கையில் ஒரு குழந்தையுடன் குகையில் இருந்து வெளிப்படுகிறாள் . ஒரு மாபெரும் போர்க்களத்தில் இருந்து தப்பி அவள் வந்திருப்பது புரிகிறது .

குழந்தையை காப்பாற்றும் வெறியோடு அவள் ஆறு கடக்க, அவள் தண்ணீரோடு போய் விடுகிறாள் . குழந்தையை சிவபக்தையான ஒரு வேடுவக் கூட்டத்துத் தலைவி(ரோகிணி) காப்பாற்றி தன் மகனாக வளர்க்கிறாள் . வளரும் இளைஞன் சிவுடு (பிரபாஸ்) சிறந்த வீரனாக இருக்கிறான் . சிவுடு என்றால் சிவன் என்று பொருள் .

அவனுக்கு அந்த அருவி வழியாக மேலே ஏறி,  அருவி தோன்றும் இடத்துக்கு போக வேண்டும் என்பது உள்ளுணர்வால் ஏற்பட்ட ஒரு லட்சியமாக இருக்கிறது . அதற்காக முயல்வதும் கீழே விழுந்து தோற்பதுமாக நாட்கள் போகின்றன. ஒரு நாள் அந்த அருவி வழியே , ஒரு மரத்தாலான  முகமூடி வந்து விழுகிறது . அதை எடுத்து வைத்துக் கொள்ளும் அவன்,  ஒரு முறை மணல் மேல் வைத்து அழுத்தி எடுக்க , அது ஒரு அழகிய பெண்ணின் முகமாக இருக்கிறது. அந்த அழகிய பெண் (தமன்னா ) தேவதை போல பறந்து வருகிறாள். 

அவளை பிடிக்கும் ஆவலில் அருவி வழியே மலை உச்சிக்கு வந்து விடுகிறான் . அங்கே அவள்,  பெண் விடுதலைப் புலி போல ஒரு வீராங்கனையாக இருக்கிறாள் . அவளை கொல்ல வரும் ஒரு கூட்டத்தை ஒற்றை ஆளாக வீழ்த்துகிறாள் . அவளது ஆட்கள் வருகிறார்கள் . அவளை சிவுடு பின் தொடர்ந்து போகிறான் .

baahubali

அவள் பெயர் அவந்திகா என்பதும் அவள் ஒரு  புரட்சிக் கூட்டத்தை சேர்ந்தவள் என்பதும் புரிகிறது . அவர்களின் நாடான மகிழ் நதி பேரரசில் அவர்களது ராணியான தேவ சேனாவை  (அனுஷ்கா ) சங்கிலியால் பிணைத்து நடு ரோட்டில் வெகு காலமாக ஒரு திறந்த வெளிக் கைதியாக வைத்து அவமானப்படுத்திக் கொடுமை செய்கிறார்கள் என்பதும் தேவசேனாவை மீட்க முயலும் ஒரு கூட்டத்தில் அவந்திகாவும் ஒருத்தி என்பதும் சிவுடுவுக்கு தெரிகிறது.

இந்த புரட்சிக் கூட்டத்துக்கு உதவ முடிந்த மாவீரன் கட்டப்பா (சத்யராஜ் ). அவரது நண்பர் அஸ்லாம் ( நான் ஈ  சுதீப் ). கட்டப்பாவுக்கு தேவசேனா மீது மீது மரியாதையும் பாசமும் இருப்பதால்  தேவசேனாவுக்கு  நடக்கும் கொடுமைகளால் மிகுந்த  மிகுந்த வேதனையில் இருக்கிறார். 

என்றாலும் கட்டப்பாவின் முன்னோர்கள் “இனி நாங்களும் எங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளும் உங்கள்  உயிரையும் உங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளின் உயிரையும் காப்பதையே பிறவிக் கடமையாகக் கொள்வோம் ” என்று….

 தேவசேனாவைக்  கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கும் இப்போதைய மகிழ்நதி அரசன் பல்தேவ் (ராணா) தந்தைக்கு ( நாசர் ) சத்தியம் செய்து கொடுத்தவர்கள் என்பதால்,  கட்டாப்பாவல் தேவசேனாவின் துன்பங்களை தடுக்க முடியவில்ல.

அவர் தேவசேனாவிடம்  “. உங்களை நான் ரகிசயமாக விடுவித்து விடுகிறேன் . நீங்கள் தப்பிப் போய்விடுங்கள்” என்று கூற, அதற்கு அவளோ ” என்னைக் காக்க என் மகன் வருவான் . அதுவரை என் கை விலங்கோடு  பிணைக்கப்பட்ட இந்த சங்கிலி போகும் எல்லைக்குள் விழும் சுள்ளிகளை பொறுக்கி,  விறகுப் படுக்கை தயார் செய்கிறேன் . என் மகன் வந்து பல்தேவை அந்த படுக்கையில் போட்டு எரித்துக் கொல்வான்” என்று கூறுகிறாள்.

ஒரு நிலையில் ராணியை மீட்கும் பணி அவந்திகாவுக்கு புரட்சிக் கூட்டத்தால்  கொடுக்கப்பட , அவளும் அதற்கு கிளம்ப அந்த சமயத்தில் அவந்திகாவை நெருங்கி பழகி காதலுக்கு ஆளாக்கும் சிவுடு , அவந்திகாவின் லட்சியப் பணியை தான் ஏற்கிறான்.

பல்தேவின் படையில் உள்ள ஒருவன் சிவுடுவைப் பார்த்ததும் மகிழ்ந்து ”பாகுபலி” என்று  முழங்கி “அரசே” என்று பாதம் பணிகிறான் .

பல்தேவின் பிரம்மாண்ட தங்கச் சிலை ஒன்று நிர்மாணிக்கப்படும் தினத்தில் ஊருக்குள் வரும் சிவுடுவை மீண்டும் பார்க்கும் அந்த வீரன்,  “பாகுபலி” என்று முழங்க நாட்டு மக்களை பாகுபலி என்ற பெயர் புத்துணர்வு கொள்ளச் செய்கிறது . எழும் பல்தேவின் தங்கச் சிலைக்குப் பின்னால் அதை விட பெரிதாக ஒரு தங்கச் சிலை எழுகிறது. பாகுபலி என்று அழைக்கப்படும் அந்த சிலை சிவுடுவின் முகத் தோற்றத்தில் இருக்கிறது .

தேவசேனா தன் அம்மா என்பதை உணரும் சிவுடு அவளது  கை விலங்கொடித்து அவளைக்  காப்பாற்றிக் கொண்டு கிளம்புகிறான் . தேவசேனாவை மீண்டும் கைது செய்து கொண்டு வரவும் சிவுடுவை கொல்லவும் பல் தேவின் மகனான இளவரசன் கிளம்புகிறான் . தேவசேனாவை மீண்டும் கைது செய்து அடிமைப்படுத்துவது கட்டப்பாவுக்கு வேதனையான விசயம் என்றாலும். இளவரசனைக் காப்பாற்றுவது தனது பிறவிக் கடமை என்பதால் கட்டப்பாவும் போகிறார் .

அங்கு சிவுடுவுக்கும் இளவரசனுக்கும் நடக்கும் சண்டையில் கட்டப்பாவின் முயற்சியையும் மீறி இளவரசனை கொல்கிறான் சிவுடு. எல்லோரும் போற்றும் தன் தந்தையான பாகுபலி பற்றி சிவுடு கேட்க,  கட்டப்பா சொல்கிறார்.

பின் நோக்கி மூன்றாம் தலைமுறைக்கு கதை போகிறது .

மகிழ் நதி தேசத்தின் அந்தக் கால முதல் இளவரசர் (நாசர் ) நல்லவராக இல்லை . அவர் மனைவி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன் ) மிக நல்ல பெண்மணி .  அரச பதவி இளைய இளவரசருக்கு போகிறது . அவருக்கும் திருமணம் ஆகிறது . அரசர் போரில் இறக்கிறார் . அவர் மனைவிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது . அரசரின் மனைவியும் இறக்கிறாள் . அந்த சமயத்தில் சிவகாமிக்கும் ஒரு கைக் குழந்தை இருக்கிறது .

baahubali 2

சிவகாமி தன் மகனுக்கு  பல் தேவ் என்றும் அரசரின் மகனுக்கு பாகுபலி என்று பெயர் வைத்து இருவருக்கும் தாயாக சம அன்போடு வளர்க்கிறாள். ஆனால் தன் மகன் பல்தேவ் அரசனாக வரவேண்டும் என்பதே சிவகாமியின் கணவரின் (நாசர்) விருப்பம் . மாறாக , யார் அதிக தகுதியானவனோ அவன் ஆட்சிக்கு வரட்டும் என்பது சிவகாமியின் ஆசை .

அந்த சமயத்தில் காகதீயர்களான இவர்களின் எதிரி இனமான காலதீயர்களுடன் பெரும் போர் மூள்கிறது . போரில் பாகுபலி பல்தேவை விட சிறப்பாக செயல்பட பாகுபலியே அரசன் ஆகிறான் .

இந்த இடத்தில் முன் கதை நிறுத்தப்பட , “அப்புறம் என் அப்பா எப்படி செத்தார் ” என்று சிவுடு கேட்க , “அவரை நான்தான் கொன்றேன்” என்கிறார் கட்டப்பா.

அடுத்து நடந்து என்ன என்பதே இந்தப் படம் .

– என்று சொல்ல முடியாது . இதோடு முடிகிறது இந்தப் படம் . என்ன நடந்தது என்பதை  அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள். கட்டப்பா “நான்தான் பாகுபலியைக் கொன்றேன்’ என்று சொல்வதோடு இந்த முதல் பாகம் முடிகிறது . இதுதான் பாகுபலி — ஒரு ஆரம்பம் .படம் .

உயர்ந்து நீண்டு பரந்து விரிந்து ஆழ்ந்து அதிர்ந்து விழுந்து எழுந்து புகை பரப்பும் அந்த நீண்ட அருவிக் கூட்டங்கள் தோன்றும் அந்த ஆரம்பக் காட்சியில் பிளக்கும் வாயை படம் ஓடும் 2மணி நேரம் 39 நிமிஷமும் மூட முடியாது . அப்படி ஒரு பிரம்மாண்டம் படம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது . உண்மையிலேயே பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமான படம் .

ஆனால் அதை மட்டுமே நம்பாமல் அழகியலாக காட்சிகள் எடுப்பதிலும் அசத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜ மவுலி. உதாரணம் பிரபாஸ் தமன்னா காதல் சொல்லும் டூயட் பாட்டு . அதை முடித்த வித அப்படி ஒரு ரம்மியம் .

இன்னொரு பக்கம் பார்த்துப், பழகிய கதை என்றாலும் மிக அட்டகாசமான கேரக்டர்களை உருவாக்குவதிலும் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறார் . அதனால் உணர்ச்சிப் போராட்டமான காட்சிகள் கொப்பளிக்கின்றன .

baahubali 4
இதுவரை தமன்னாவை இடுப்புக்கு மேல் பார்க்க விடாத இயக்குனர்களுக்கு மத்தியில்,  ஆரம்பக் காட்சிகளில் அவரை ராஜ மவுலி ஒரு காட்டி இருக்கும் விதம் அபாரம் ( அப்புறம் வழக்கமானதும் வருகிறது ).

பல்தேவின் சிலை திறப்பு விழாவில் நடனக் கலைஞர்கள் , இசைக் கலைஞர்கள் ,உட்பட அனைவரும் வேலை செய்து கொண்டு இருக்க,  பாகுபலி என்ற வார்த்தையைக் கேட்டதும் அவர்கள் உற்சாகம் கொப்பளிக்க இயங்கும் விசயத்தைக் காட்டும் விதம்,   டைரக்ஷன் என்றால் என்ன என்பதற்கு கம்பீர விளக்கமாக இருக்கிறது.

சுமார் இருபது நிமிடத்துக்கு மேலாக நீளும் அந்த காலதீய — காக தீய சண்டைக்காட்சிகள் பாராட்ட வார்த்தைகளே இல்லை . நம்மையும் நிஜ போர்க்களத்துக்குள் தள்ளி விதிர்விதிர்க்க வைக்கிறார்கள். சபாஷ் பாகுபலி & குழு !

படத்தின் மாபெரும் பொக்கிஷம்- திரவியம் – கே கே செந்தில் குமார் செய்திருக்கும் அதி அற்புதமான ஒளிப்பதிவு .அவரால்தான் பாகுபலி ஒரு  நிஜ நிகழ்வு போல நிமிர்ந்து நிற்கிறது.

தமிழ் நாட்டில் நடிகனாக அறிமுகம் ஆகி சம்பாதித்து வளர்ந்து,  இப்போதும் தமிழ் தொலைக் காட்சித் தொடர்கள் மூலம் சம்பாதித்துக் கொண்டு “ராஜ மவுலி பாகுபலி படத்தில் தெலுங்கு நடிகர்களுக்கு வாய்ப்புத் தராமல் யார் யாருக்கோ வாய்ப்புத் தருகிறார் ” என்று பேசிய சுரேஷுக்கு ஒரு கேள்வி . கட்டப்பா கேரக்டரை இந்த படத்தில் சத்யராஜ் நடித்து இருக்கும் அளவுக்கு நடிக்க , இந்தியாவில் வேறு எங்கும் நடிகன் இருக்கிறானா ?

baahubali 5

எம் ஜி ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிபில் எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க , கே. சங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அடிமைப் பெண் படத்துக்கு பாகுபலி படத்துக்கும் இடைவேளை வரை ஆறு வித்தியாசம் கூட இல்லை .  பாகுபலியின் கதையை அடிமைப் பெண் படத்தின் கதையில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் முக்கிய ரசவாதம் கட்டப்பா கேரக்டரும் அதற்கு சத்யராஜ் செய்திருக்கும் நியாயமும்தான் .

படத்தின் ஆகச் சிறந்த கதாபாத்திரங்கள் என்று கட்டப்பா கேரக்டரையும் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கும் சிவகாமி கேரக்டரையும்தான் சொல்ல முடிகிறது .

பிரபாஸ் மிக அற்புதமாக செய்திருக்கிறார் . தமன்னா சிறப்பாக நடித்து இருக்கிறார்.  ராணா மிரட்டுகிறார் . அனுஷ்காவுக்கு அடுத்த பாகத்தில்தான் வேலை என்றாலும் இதில் வரும் கொஞ்ச காட்சிகளிலேயே அசத்துகிறார் .

மரகத மணியின் பின்னணி இசை உணர்வு ரீதியாக வெகு சிறப்பு . சண்டைக் காட்சிகளில் ராட்சஷ உழைப்பு உழைத்திருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்.

ஸ்ரீனிவாஸ் மோகனின் வி எஃப் எக்ஸ்  பி எம் சதீஷின் ஒலி வடிவமைப்பு இரண்டும் பரணி பாடற்குரியது.

வசனம் எழுதி இருப்பவர் கார்க்கி . தெலுங்கு இனப் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு கற்பனைக்கதைக்கு  மிக வளமான தமிழில் வசனம் எழுதி படத்தை நம்  மனசுக்கு நெருக்கமாக்குகிறார் கார்க்கி. ஆரம்பத்தில் வரும் தமன்னா ,பிரபாஸ் பாடல்காட்சியை தவிர படத்தில் வரும் மற்ற எல்லாக் காட்சிகளையும் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக எடுத்து இருக்கிறர்கள் . 

கலை இயக்குனருக்குக்  கோவில் கட்டலாம் . (அட்லீஸ்ட் ஒரு கோவில் ‘செட்’ ஆவது போடலாம் )

இப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட பல விஷயங்கள் இருந்தாலும் குறைகளுக்கும் பஞ்சம் இல்லை .

baahubali 3

பின்னணி இசை , உடைகள் , நடனம் ,இவற்றில் படம் சொல்லும் காலகட்டத்துக்கு அப்பாற்பட்ட — ஒட்டாத — நவீன,  மேற்கத்திய வாசனை மூக்கைத் துளைக்கிறது . புரட்சிப் படையினர் மற்றும் போர்க்கள  வீரர்களின் உடல் மொழிகளிலும் அதே ஒவ்வாமை .

அதுவும் அந்த கள்ளுக்கடைப் பாட்டில் நாம் பார்ப்பது ஒரு வரலாற்றுப் படம் என்ற உணர்வே மறந்து விட்டது . ஏன் ராஜ மவுலி சார் , ஏன் ?

ஒரு படத்தை இரண்டு பாகங்களாக அல்ல,  இருநூறு பாகங்களாக கூட தொடர்ந்து அடுத்தடுத்த வருடத்துக்கு ஒன்றாக பண்ணலாம் . தப்பில்லை . ஆனால் எந்த ஒரு பாகத்தை எடுத்துப் பார்த்தாலும் அதை மட்டும் தனியாக பார்த்தாலும் ஒரு முழுப்படம் பார்த்த திருப்தி வேண்டும் . இதில் சத்யராஜ் நான்தான் கொன்றேன் என்ற உடன்  படம் முடிக்கிறது . மிக சுவாரஸ்யமாக படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திரையிடும் கருவி ரிப்பேர் ஆனால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு உணர்வு !

தவிர சத்யராஜ் கதாபாத்திரத்தை –அவர் பல்தேவ் குடும்பத்துக்கு பிறவி அடிமை ஆனதை  — இவ்வளவு தீர்மானமாக சொல்லி விட்ட பிறகு, அடுத்த வருடம் வரும் அடுத்த பாகத்தில் அவர் பாகுபலியை கொல்வதில் திரைக்கதை ரீதியாக என்ன சுவாரஸ்யம் அமைய முடியும் ?

சத்யராஜ் கதாபாத்திரத்தை ராணியை மீட்க போராடும் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே காட்டி இருந்தாலாவது ”பாகுபலியை நான்தான் கொன்றேன்” என்று அவர் சொல்வதில் ஒரு அதிர்ச்சி உருவாகி அடுத்த பாகத்தை எதிர்பார்க்க வைக்கும் . அதற்கும் வாய்ப்பு இல்லை .

ஆனாலும் படத்தில் நிஜ ஹீரோவாக ஒவ்வொரு பிரேமிலும் வியாபித்து விஸ்வரூபம் எடுத்து விரவி இருக்கிறார் ராஜ மவுலி . சல்யூட் சார் .

காகதீயர்களுக்கு ஒரு புது மொழியைக் கொடுத்து இருப்பதற்கு நன்றி என்று கார்க்கிக்கு படத்தின் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் டைட்டில் போடுகிறார்கள் . படம் முடிந்த பின்பு அதை யோசிக்கும்போது தமிழை நினைத்து ஒரு நொடி பெருமையாக இருந்தாலும் அடுத்த நொடி ஒரு பெரும் ஏக்கமே எழுகிறது.

காகதீயர்கள் என்ற இன அடையாளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு உலகுக்கே பொதுவான ஒரு பழகிய கற்பனைக் கதைக்கு இப்படி உழைத்து இருக்கிறார்கள் .

ஆனால் நம் தமிழின வரலாற்றில் கரிகால் சோழன் , ராஜ ராஜ சோழன் போன்ற மன்னர்களின் நிஜமான வரலாற்றில் இந்த கற்பனைகளை எல்லாம் மிஞ்சிய எத்தனையோ அற்புதங்கள் இருக்கின்றன . (அவ்வளவு ஏன்,  தமிழ் மூவேந்தர்கள்  வரலாற்றில் குறிப்பிடப்படும் சில ஆதார பூர்வமான போர்க்கள உத்திகளை இந்த பாகுபலி  படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் ராஜ மவுலி ) அதை எல்லாம் படமாக எடுத்தால் எவ்வளவு  பெருமிதமாக இருக்கும் !

நம்ம ஊரில் வெட்டி நியாயம் பேசி வீண் பிரம்மாண்டங்களில் படம் எடுத்து வாய்ச் சவடால்களிலேயே வாழ்க்கையை ஓட்டும் கலைக் கில்லாடிகள் கில்பர்ட்கள் , மாபெரும் இயக்குனர்கள் பாகுபலி போல எல்லாம் அப்படி முயல்வதில்லையே என்ற ஏக்கம்தான் அது .

பாகுபலி … வியப்பின் ஒலி !

மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————-

எஸ் எஸ் ராஜமவுலி, கே கே செந்தில் குமார், கார்க்கி, சத்யராஜ் , ரம்யா கிருஷ்ணன் , பிரபாஸ், ஸ்ரீநிவாஸ் மோகன் , தமன்னா , பீட்டர் ஹெய்ன், பி எம் சதீஷ் , சோபு எர்லகட்டா , பிரசாத் தேவிநேனி

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →