சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழி மாற்றப்பட்டு மாவீரன் என்ற பெயருடன் வந்த (மகதீரா என்ற )அந்த தெலுங்குப் படம், அதன் மேக்கிங்கில் நம்மை பிரம்மிக்க வைத்தது. அதன் பின்பு ஒரு ஈயை ஹீரோவாக வைத்து ஒரு டப்பிங் படமாக மட்டும் வராமல் தமிழுக்கென்று சில காட்சிகளையும் சேர்த்து உருவாக்கப்பட்ட நான் ஈ படம் தமிழகம் எங்கும் ஒரு நேரடி தமிழ்ப் படத்தைப் போலவே சக்கைப் போடு போட்டது .
இந்த இரண்டு படங்களையும் உருவாக்கிய அற்புதமான படைப்பாளி எஸ் எஸ் ராஜமௌலி, இப்போது உருவாக்கி இருக்கும் பாகுபலி தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரண்டு மொழிப் படமாகவே உருவாகி இருக்கிறது.(தகவல் உதவி சத்யராஜ் ).
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் மிகப்பெரிய படமாக உருவாகும் இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோ பிரபாஸ் நாயகனாகவும் இன்னொரு ஹீரோவான ராணா டகுபதி முதல் முதலாக வில்லனாகவும் களம் இறங்க , அனுஷ்கா , தமன்னா இருவரும் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், நாசர், ‘நான் ஈ ‘சுதீப் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
தமிழில் மரகதமணி என்று அறியப்படும் கீரவாணியின் இசையில், பாடல்களையும் தமிழ்ப் பதிப்புக்கான வசனங்களையும் எழுதி இருக்கிறார் மதன் கார்க்கி. ஒளிப்பதிவு செந்தில் . கலை இயக்கம் சாபு சிரில்.
அர்கா பிலிம்ஸ் சார்பில் படத்தை சோபிஸ் தயாரித்து இருக்க, தமிழில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை வாங்கி தயாரிப்பாளராக வெளியிடுகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் உடன் இணைந்து வெளியிடுகிறது .
சென்னையில் நடை பெற்ற படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவுக்கு முதன்மை விருந்தினர், தெலுங்கு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் சூர்யா!
இவ்வளவு பேரும் இணைந்து இருந்த அந்த மேடையே பிரம்மாண்டமான திருவிழாக் கூட்டம் போல இருந்தது.
படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது . அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை . பொருட்செலவு , மேக்கிங் நேர்த்தி , விவரணைகள், எமோஷன், அழகியல் , பிரம்மாண்டம் , ஒளிப்பதிவு , பின்னணி இசை என்று எல்லா வகையிலும் அசத்தலாக அமைந்து வாய் பிளந்து பிரம்மிக்க வைக்கிறது . படத்துக்கு மரகத மணி போட்டு இருக்கும் தீம் மியூசிக் நம்மை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது.
நிச்சயமாக இந்தப் படம் தமிழ் , தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரு லேண்ட் மார்க் படமாக அமையும் என்பது தெரிந்தது.
“இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவம் . பாடலுக்கும் வசனத்துக்கும் தேவையான விசயங்களை இயக்குனர் ராஜ மௌலி கொடுக்கும் விதம் அபாரமானது ” என்றார் மதன் கார்க்கி .
” நடிக்கும்போது ராஜ மௌலி நம்மை தயார் செய்யும் விதம் அலாதியானது . ‘சார், கம்ப ராமாயணத்தில் கம்பர் இந்த விசயத்தை இப்படி சொல்லி இருக்கிறார்’னு சொல்வார். ‘பொன்னியில் செல்வன்’ நாவலில் இருந்து ரெஃபரன்ஸ் கொடுப்பார்” என்றார் நாசர் . (பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலில் வரும் காபாலிகர்கள் போன்ற ஒரு விஷயம் இந்தப் படத்திலும் வருகிறது என்பது முன்னோட்டத்தில் உள்ள காட்சிகளில் தெரிகிறது ) .
“முதலில் ஒரு விஷயம் . இந்த பாகுபலி தெலுங்கு டப்பிங் படம் அல்ல. நேரடித் தமிழ்ப் படம். ஒவ்வொரு ஷாட்டையும் தமிழுக்கு ஒரு முறை தெலுங்குக்கு ஒரு முறை என்று எடுத்தோம். ஷூட்டிங் ஸ்பாட்டை பார்த்தாலே ஏதோ அணை கட்டும் வேலை நடக்கிற மாதிரி இருக்கும் ” என்று ஆரம்பித்த சத்யராஜ்,
” படத்தில் கடவுளைப் பார்த்து வியந்து நெகிழ்ந்து நான் பேசுவது போல ஒரு காட்சி. நான் கடவுள் நம்பிக்கை இல்லாத ஆளு . இது ராஜ மௌலிக்கும் தெரியும். அதனால அவரு என்கிட்டே , ” சார் இப்போ தலைவர் எம் ஜி ஆர் உங்க முன்னாடி திடீர்னு வந்தா எப்படி பேசுவீங்க ? அப்படி நினைச்சுட்டு பேசுங்க ‘ ன்னு சொன்னார். மனுஷன் அப்படி வேலை வாங்கி இருக்கார் .” என்றார் .
தமன்னா பேசும்போது ” இந்தப் படத்துக்குள் நான் நுழையும்போது ஏற்கனவே 140 நாள் ஷூட்டிங் முடிந்து இருந்தது . எனவே நமக்கு இதுவும் ஒரு படம் , அதுவும் ராஜ மௌலி சார் படம் என்பதால்தான் நடிக்க வந்தேன் . ஆனால் படத்தின் கதை,,, என் கேரக்டர் … அவர் எடுத்த விதம் …. அந்த அற்புதமான விசயத்தை சொல்லி விளக்க முடியாது . பார்த்து உணருங்கள் ” என்றார் .
மிக கேஷுவலாக பேசிய அனுஷ்கா , “நான் பல வருஷம் முன்பே ராஜமௌலி சார் படத்தில் நடித்து இருக்கேன். அப்போ அந்த ஷூட்டிங்குக்கு எல்லாம் சந்தோஷமா போவேன். காரணம் அங்க சாப்பாடு பிரம்மாதமா இருக்கும். ஆனா இந்த பாகுபலி என் சினிமா கேரியருக்கே அர்த்தம் சொல்ற படமா இருக்கும் ” என்றார்.
ராணா டகுபதி பேசும்போது ” நான் சென்னைல பொறந்து வளந்த பையன் . அப்புறம் ஆந்திரா போயிட்டேன். ஆரம்பத்துல தமிழ் சினிமாலதான் ஹீரோவா ஆக நினைச்சேன். முடியல . ஆனாலும் தெலுங்கில் நல்ல நிலைக்கு வந்துட்டேன் . பாகுபலி படத்துக்காக நிறைய உழைப்பை போட்டு இருக்கோம். படம் உங்களுக்கு பிடிக்கும் ” என்றார் .
நாயகன் பிரபாஸ் “தமிழ் ரசிகர்கள் என்னையும் தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளவேண்டும் ” என்றார் மனப்பூர்வமாக.
அடுத்து மேடை ஏறினார் இயக்குனர் எஸ் எஸ் ராஜ மௌலி ” மும்பை உள்ளிட்ட பல ஊர்கள்ல மேடை ஏறி பேசினேன் . அப்போ எல்லாம் சாதரணமா பேசிட்டேன் . ஆனா சென்னையில் இந்த மேடையில் பேச ஆரம்பிக்கும் இந்த நொடி நான் ரொம்ப எமோஷனலா இருக்கேன் .
ஏன்னா, நான் பொறந்தது சென்னை. படிச்சது சென்னை . சினிமான்னா என்னன்னு நான் தெரிஞ்சுக்கிட்டது இந்த மண்ணில்தான். என்னை சினிமாக்காரனா உருவாக்கினதும் இந்த மண்தான். அந்த வகையில் தமிழ்த் தாய்க்கு நான் நன்றிக்கடன் பட்டவன் “என்று ஆரமபித்தார்
“பிரபாஸ் , ராணா இவர்களின் உழைப்பு அபாரமானது. தமன்னா மாதிரி ஒரு அர்ப்பணிப்பு உணர்வுள்ள நடிகையை நான் எங்கயுமே பார்க்கல. அனுஷ்கா மிக சிறப்பா நடித்தார் . சத்யராஜ் சாரின் இயக்குனரை மதிக்கும் பண்பு என்னை வியக்க வைத்தது . நாசர் சாரின் சினிமா அறிவு அற்புதமானது. தமிழ் வசனங்களை வடிவமைக்க இவர்களையும் பயன்படுத்திக் கொண்டேன் . கார்க்கி அருமையாக எழுதி இருக்கிறார் .
பாகுபலி படத்தில் சூர்யா சாரும் கெஸ்ட் ரோலில் நடிக்கலாம் என்ற செய்தி வந்தது. அதன் பிறகு சார் எப்போ எங்க தலைவரை நடிக்க வைக்கப் போறீங்கன்னு உங்க ரசிகர்கள் என்னை துளைச்சு எடுத்துட்டாங்க .
படத்தின் முதல் பார்ட் விரைவில் வெளியாகிறது . பிறகு சிறிய இடைவெளியில் இரண்டாவது பார்ட் வெளியாகும்” என்றார் .
“ஒரு படத்துல எப்படி நடிகர்கள் இரண்டரை வருடம் தொடர்ந்து நடிக முடியும்னு எனக்கு ஆச்சர்யமா இருந்தது . நான் கூட பிரபாஸ் , ராணா கிட்ட எல்லாம் கேட்டேன். ‘கொஞ்சம் கூட சலிப்பே வராதா?’ன்னு .” என்று ஆரம்பித்த சூர்யா ,
தொடர்ந்து “படம் அவ்ளோ சிறப்ப இருக்கும்போது எப்படி சலிப்பு வரும் ? ஒரு நாள் இந்த படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் இருந்தேன். ஷூட்டிங்கை நிறுத்திட்டு எல்லாரும் என் கிட்ட பேச வந்துட்டாங்க. திரும்பிப் பார்த்தா அவ்ளோ பேர்! அவ்வளவு வேலைகள் ! இன்னும் கொஞ்ச நேரம் நாம அங்க இருந்தாலும் நம்மாலேயே இவங்களுக்கு லட்சக் கணக்கில் நஷ்டம் ஆகும்னு புரிஞ்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன் .
படத்தின் டிரைலர் ரொம்ப பிரம்மாதமா இருக்கு . படம் கண்டிப்பா பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இதுவே சாட்சி ” என்றார் .
இறுதியாக பேசிய ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ” ராஜ மௌலி சார் இயக்கிய தெலுங்குப் படத்தைதான் தமிழில் கார்த்தியை வைத்து சிறுத்தை என்ற பெயரில் எடுத்தோம் . அந்தப் படம் முடிந்த உடன் ‘ராஜ மௌலி சாருக்கு படம் பிடிக்க வேண்டுமே’ என்று நினைத்தேன் . அவர் பார்த்து விட்டுப் பாராட்டியபோது சந்தோஷமாக இருந்தது. இப்போ அவர் இயக்கிய படத்தை நேரடியா தமிழில் செய்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு ” என்றார் .
எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கிறது இந்த பாகுபலி !