பார்க்கலாம்
சிவா(மனோஜ்) — சக்தி (ஷிரா) தம்பதிக்குப் பிறக்கும் முதல் குழந்தை இறந்தே பிறக்க, அதனால் மிகவும் மனம் உடைந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சக்தி மறுபடியும் தாய்மை அடைகிறாள் . இந்தப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையும் உடல் நலக் குறைபாடு காரணமாக தீவிர சிகிச்சைக்குப் போக , கண் விழிக்கும் போது பக்கத்தில் குழந்தை இல்லை என்றால் சக்தி மறுபடியும் உடல்நல பாதிப்புக்கு உள்ளாவாள் என்று பயப்படுகிறான் சிவா .
அதே மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றும் ஆன்னி என்ற செவிலிக்கு (அஞ்சலி ராவ் ) திருமணம் ஆகி…. அவள் கர்ப்பமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், அவளது கணவன் விபத்தில் இறந்து போகிறான். சக்திக்கு குழந்தை பிறக்கும் அதே சமயம் ஆன்னிக்கும் குழந்தை பிறக்கிறது .
அந்த நிலையிலும் சக்தி இரண்டு குழநதைகள் மீதும் அன்பை சமமாகக் காட்டினாலும் , ஆன்னிக்குப் பிறந்து சக்தியின் செல்ல மகளாக இதுவரை வளர்ந்த அதிதிக்கு, இப்போது சக்தியின் பாசத்தை –சக்தியின் சொந்த மகளான – அவந்திகாவும் பங்கு போட்டுக் கொள்வதைத் தாங்க முடியவில்லை.அவள் ஏங்குகிறாள்
எனவே மீண்டும் தன் மகளுக்கு சக்தியின் முழு பாசத்தையும் பெற்றுத் தர முயலும் ஆன்னி , அதற்காக அவந்திகாவை பயமுறுத்தி வீட்டை விட்டே துரத்த முயல்கிறது . அடுத்த கட்டமாக சிவாவையும் மிரட்டுகிறது .
ஆன்னி பற்றி சிவாவும் அதிதியும் கூறுவதை நம்ப மறுக்கிறாள் சக்தி. வேறு வழியின்றி அவந்திகாவை காப்பாற்ற சக்தியை விட்டுவிட்டு அவந்திகாவை அழைத்துக் கொண்டு முன்பு வசித்த வீட்டுக்கே போய்விடுகிறான் சிவா .
ஆனால் அங்கே போன அவந்திகா?
அம்மா பாசத்தை அனுபவித்து விட்ட நிலையில் அம்மாவுக்கு ஏங்கி, அவந்திகா கண்ணீர் வடிக்க , சொந்த மகள் இப்படி கண்ணீர்வடிப்பதை சிவாவால் தாங்க முடியவில்லை . எனவே அதிதியை எங்காவது அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டு , தன் சொந்த மகளை அவளது அம்மா சக்தியுடன் சேர்த்து வாழ வைக்க முயல்கிறான் சிவா .
அதன் ஒரு விளைவாக அவன் அதிதியை வெறுக்க , அதிதி மனம் வருந்த … தன் மகள் அதிதியின் வருத்தம் பார்த்து பேயாக இருக்கும் ஆன்னி என்ன செய்தாள்? அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த பேபி
ஐந்தே முக்கியக் கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு… ஒரு பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பு, இரண்டு வீடுகள் , ஒரு லிஃப்ட், படிக்கட்டுகள் , மொட்டை மாடி, கொஞ்சம் மருத்துவமனை என்று நான்கைந்து இடங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு அழகான திகில் , ஹாரர் , செண்டிமெண்ட் நிறைந்த படத்தை கொடுத்து இருக்கும் சுரேஷுக்கு ஓர்அழுத்தமான கைகுலுக்கல் . குருநாதர் பேரை காப்பாற்றி விட்டார் சுரேஷ் .
கிராபிக்ஸ் இல்லை .. தேவையில்லாத அலறல் இல்லை , அருவருப்பான உருவங்கள் இல்லை , விதம் விதமாக பேயோட்டும் அனைத்து மத பேயோட்டிகளும் இல்லை, தேவையில்லாத எந்த இடத்துக்கும் எந்தக் கதாபாத்திரமும் அசட்டுத்தனமாக போகவில்லை …
இது போன்ற அரைத்த மாவுகள் இல்லாமல்…. திடுக்கிட வைக்கிற , அதிர வைக்கிற, பரபரப்பாக ரசிக்க வைக்கிற , அதே நேரம் கனமான செண்டிமெண்ட் என்று பக்குவமான திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள் .
பேயைக் கண்டு பயப்படும் நடிப்பில் சாதன்யாவும், அம்மாவின் பாசம் பங்குபோடப்படுவதை ஏக்கத்துடன் பார்த்து பொறாமைப்படும் நடிப்பில் ஸ்ரீ வர்ஷினியும்…… சும்மா வீடுகட்டி விளையாடுகிறார்கள். சபாஷ் பேபீஸ். !
அம்மாவின் பாசம் சகோதரிக்கும் பங்கு போடப்படுவது நியாயம் என்ற உணர்வைதான் ஒரு திரைப்படம் குழந்தைகளுக்குத் தர வேண்டுமே தவிர , அதைப் பார்த்து அதிதி பொறாமைப்படுவதாக , கதை சொல்வது சரியா ? அதைப் பார்க்கும் பிள்ளைகள் அப்படி பொறாமைப் படுவதுதான் நியாயம் என்று நினைத்தால் அது தவறான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தாதா என்ற கேள்வியும் …..
அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தையின் செத்துப் போன பெற்றோர்களின் ஆவியால்கூட சிக்கல் வரும் என்று கதை சொல்வதன் மூலம், ஒரு திரைப்படம் தத்தெடுப்புக்கு எதிராகப் பேசலாமா என்ற கேள்வியும் எழுவதுதான்….
இந்தப் படத்தின் பெரிய குறைபாடு .
அவந்திகாவையும் சிவாவையும் மிரட்டும் ஆன்னி, சக்தியின் கண்ணுக்கு தெரியாமலேயே இருக்க வேண்டும் . சிவா ஆவி பற்றி சொல்ல , பேய் நம்பிக்கை இல்லாத சக்தி அவன் சொல்வதை ஏற்கக் கூடாது . மீண்டும் தன்னையும் தான் பெற்ற மகள் அவந்திகாவையும் பிரிக்க, சிவா இப்படி பொய் சொல்வதாகவே சக்தி தொடர்ந்து நம்ப வேண்டும்.
ஒரு நிலையில் இது பெரிய பிரச்னையாக வளர . அதனால் ஆன்னியின் மகளான அதிதியின் சந்தோஷமும் பறிபோக வேண்டும் . அதைப் பார்த்து மனம் வருந்தும் ஆன்னி , தன மகளுக்கு மட்டும் சக்தியின் பாசம் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தால் இப்போது தனது மகளே பாதிக்கபடுவதைக் கண்டு….
இந்த வகையில் இந்தப் படத்தின் திரைக்கதை போயிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்
இப்படி சில ஏரியாக்களில் கொஞ்சம் சறுக்கி இருந்தாலும் சுவாரசியம் , வேகம் , திகில் , செண்டிமெண்ட் ஏரியாக்களில் கொடி நாட்டுகிறது படம்
பேபி ……. பார்க்கத் தூண்டும் குமரி .
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————