பாரதிராஜாவை எச்சரிக்கும் பாலா

bala 1

குற்றப் பரம்பரை வரலாறு பற்றிய படத்தை ‘எனது லட்சியப் படமாக இயக்க விரும்புகிறேன் ‘ என்று வெகு நாட்களாக சொல்லிக் கொண்டு இருந்தார் பாரதிராஜா .  

அதற்கு ரத்னகுமார் கதை எழுதுவதாக தகவல்கள் வந்தன . 

இதற்கிடையில் எழுத்தாளரும் நடிகருமான,  வேல ராமமூர்த்தி எழுதிய கூட்டாஞ்சோறு என்ற நாவல்,  குற்றப் பரம்பரை என்று பெயர் மாற்றப்பட்டு அடுத்தடுத்த பதிப்புகளுக்குப் போனது .
இதை அடுத்து வேல ராமமூர்த்தியின் நாவலின் அடிப்படையில்  பாலா  இயக்கும் படமும் குற்றப் பரம்பரை பற்றிய கதைதான் என்று வந்த செய்தீ… பற்றிக் கொண்டது .
‘இந்த சூழலில் ‘குற்றப் பரம்பரை நான் எழுதிய கதை . அதை வேறு எவனும் படமாக எடுக்க விடமாட்டேன் ” என்று பொங்கினார்  ரத்னகுமார் .
இது பற்றி வேல ராம மூர்த்தியிடம்  “பாரதிராஜா குற்றப் பரம்பரை பற்றிய படத்தை எடுக்கும்போது , அது பற்றி பாலா இயக்கத்தில் நீங்கள் கதை கொடுப்பது சரியா?” என்று   கேட்கப்பட்டபோது,
 ” பாரதிராஜா கிடக்கறாரு. அவரு ஒரு வேலையத்தவரு ” என்று வேல ராமமூர்த்தி ‘வேலை’ ராமமூர்த்தியாக மாறி  சொன்னதாகவும் செய்திகள் வந்தன . 
bala 7
உடனே கொந்தளித்த பாரதிராஜா,  அண்மையில் குற்றப் பரம்பரை வரலாற்றின் களமான பெருங்காம நல்லூரில் , குற்றப் பரம்பரை படத்தின் பூஜையை நடத்தினார் .
சரி.. அதே வேகத்தில் பாலாவும் பூஜையைப் போடுவார் என்று எதிர்பார்த்தால், நேற்று அவசர அழைப்பாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் பாலா. .
நிகழ்ச்சியில் படு சீரியசாக பேச ஆரம்பித்த  பாலா ” குற்றப் பரம்பரை என்பது கதை அல்ல . அது வரலாறு . அந்த வரலாற்றை பாரதிராஜா படமாக எடுக்க விரும்புகிறார் .  அந்தப் படத்துக்குப் பெயரும் குற்றப் பரம்பரை.
எடுக்கட்டும் .
ஆனால் நான் வேல ராம மூர்த்தியின் நாவலைப் படித்து அது என்னை பாதித்த நிலையில் அதன் அடிப்படைக் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு, என் பாணியில் திரைக்கதை எழுதி படமா எடுக்க இருக்கிறேன் .
உண்மையில் எனக்கு குற்றப் பரம்பரை வரலாறு தெரியவே தெரியாது . எனக்குத் தெரிந்தது எல்லாம் வேல ராம மூர்த்தி எழுதிய நாவல் மட்டும்தான். நான் எடுக்கப் போகும் படத்தின் பெயரும் குற்றப் பரம்பரை இல்லை .
இன்னும் பெயர் வைக்கவில்லை . குற்றப் பரம்பரை என்று பெயர் வைக்கவும் மாட்டேன்.
இப்படி இருக்க “குற்றப் பரம்பரை படம நான் எழுதிய  கதை . பாலா உட்பட வேறு எவனுக்கும் அதை எடுக்க உரிமை இல்லை’ன்னு உளர்றான் அந்த ஆளு . நான் அவன் பேரைக் கூட சொல்ல விரும்பல . 
bala 4
குற்றப் பரம்பரை என்பது வரலாறு . வரலாறு என்பது எல்லோருக்கும் பொதுவானது . நெட்ல அடிச்சுப் பார்த்தா நடந்த வரலாறு என்னன்னு எல்லோருக்கும் தெரிஞ்சுடும் .
ஜாலியன் வாலாபாக் படுகொலை என் கதை . அதை நான் தான் எடுப்பேன் என்று யாராவது சொல்ல முடியுமா ? அப்படி இருக்க குற்றப் பரம்பரை வரலாறு என் கதைன்னு சொல்லிக்கறான் அவன் . இது என்ன நியாயம் ?
வரலாறு பற்றிய  எந்த அறிவும் இல்லாத அவன் ஒரு பேராசிரியராம். அவன்கிட்ட படிக்கிற மாணவர்களை நினைச்சா பரிதாபமா இருக்கு . 
ஒரு நாள் திடீரென்று பாரதிராஜா  எனக்கு போன் செய்து ‘இது என் கனவுப் படம், நீ எடுக்கக் கூடாது’ என்றார் பாரதிராஜா.  நானும் அவரிடம் ‘ நீங்கள் எடுக்கும்  கதையை  நான் எடுக்கவில்லை’ என்றேன். 
அதன் பின்னர், “பாலா என் எச்சிலை தின்ன மாட்டான் என நம்புகிறேன்” என்று பாரதிராஜா பேட்டி கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்கு ரொம்ப எரிச்சல்தான் வந்தது.
அதுதான் நாம் தன்னிலை விளக்கம்தான் சொல்லிட்டோமே. அந்தக் கதையில்லைன்னு சொல்லியாச்சே.. திரும்பத் திரும்ப ஏன் அதையே அவர் சொல்லிட்டிருக்காருன்னு கோபம் வந்தது..
சரி.. அவருக்கும் வயதாகிவிட்டது, குழந்தை மாதிரி நினைத்துக் கொள்வோம் என விட்டுவிட்டேன்.
வேல.ராம மூர்த்தி எழுதிய கதையை படித்த பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டு ” இந்தக் கதையை எழுதிய உன் கை விரல்களுக்கு மோதிரம் போடணும்யா ” என்று  அப்போது வேல ராம மூர்த்தியைப் பாராட்டி இருக்கிறார் .
ஆனால் இப்போது வேல ராமமூர்த்தியின் கதையை நான் இயக்கப் போகிறேன் என்று தெரிந்ததும் , ” வேல. ராம மூர்த்தி குற்றப் பரம்பரை பற்றி கதை எழுதி இருக்கிறானா? எனக்கு தெரியாதே”
— என்று பாரதிராஜா கூறி இருக்கிறார் . இது பொறுக்க முடியாத வேல ராமமூர்த்தி ,  பாரதிராஜா பற்றி ஒரு வார்த்தை கூறி விட்டார் . 
ஆனால் இதற்கு பதிலாக என்னை கேவலமாக விமர்சித்து அந்த ரத்னகுமார் பேட்டிகள் கொடுத்தான் . அது என்னை தேவை இல்லாமல் சீண்டும் விஷயம் .
bala 5
அப்போதும் நான் இமயம் மேல் உள்ள  மரியாதையால் அமைதியாக இருந்தேன் 
 பாரதிராஜா தன் படத்துக்கு பூஜை போடுவதாக செய்தியும் வந்தது . அந்த நிகழ்ச்சியில் என்னை அழைத்தால் நானும் கலந்து கொள்ள தயாராகவே இருந்தேன்.
ஆனால் அப்போது என்ன நடந்தது என்பதை தயாரிப்பாளர் தனஞ்செயன் சொல்வார் ” என்றதும் , 
‘அட, இதென்ன கலாட்டா…’  என்று யோசிக்கும்படியாக,  மேடை ஏறி மைக் பிடித்தார் தனஞ்செயன் .
“தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய படைப்பாளிகள் இப்படி மோதிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை . உடனே  நான் நட்பின் அடிப்படையில் பாலாவுக்கு போன் செய்து என்ன விவரம் கேட்டேன் .
பாரதிராஜா எடுப்பது வரலாறு . நான் எடுப்பது கதை என்று பாலா தெளிவாக சொன்னார் .  தவிர ‘என்னை பூஜைக்கு அழைத்தால் நானும் கூட வரத் தயாரா இருக்கேன்’ என்றும் பாலா சொன்னார் .
நான் உடனே பாரதிராஜாவுக்கு போன் செய்து ‘ நீங்கள் எடுக்கவிருக்கும் படத்தில் இருந்து பாலா எடுக்கவிருக்கும் படம் முற்றிலும் வேறானது என்று பாலா சொல்கிறார்.
தவிர நீங்கள் ஒரு முறை போன் செய்து அழைத்தால்  பாலாவே பூஜைக்கு வந்து விடுவார்’ என்றும் கூறினேன் . அதற்கு பாரதிராஜா ‘ இல்லை .. இந்த சூழலில் பாலா  அங்கு வந்தால்,
 அவனுக்கு எதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கலாம் . அதனால் வேண்டாம்’ என்று கூறினார் .
bala 6
அதை நான்  பாலாவிடம் கூறினேன் . அதோடு பாரதிராஜா அழைப்பின் பேரில் அவரது பட பூஜையிலும் கலந்து கொண்டேன் . இதில் என் பங்கு இவ்வளவுதான் ” என்று கூற, 
மீண்டும் மைக் பிடித்த பாலா ” நான் பூஜைக்கு வர வேண்டாம் என்பதற்கு பாரதிராஜா கூறிய கரணம் எனக்கு அவர் மீது மரியாதையையே ஏற்படுத்தியது .
இந்த அளவுக்கு நம்மைப் பற்றி யோசிக்கிறாரே என்று சந்தோஷமாக இருந்தது .
ஆனால் பூஜையில் நடந்தது என்ன தெரியுமா ?
தன்னை எழுத்தாளன் என்றும் பேராசிரியர் என்று கூறிக் கொள்ளும் அவன் ‘குற்றப் பரம்பரை பற்றி படம் எடுக்க எங்களைத் தவிர  யாருக்கும் தகுதி இல்லை.. அந்த பாலா கூறு (அறிவு) இல்லாதவன். 
குற்றப் பரம்பரை மேல் ஆசை இருந்தால் அந்த பாலாவும்  வேல ராம மூர்த்தியும் எங்களிடம் வந்து வேலை செய்யட்டும் . என்ன வேலை தெரியுமா? எங்கள் செருப்புகளை துடைக்கும் வேலை ‘ என்று பேசி இருக்கிறான்.
இமயம் இதைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருநதிருக்கிறது .
விசயம் அறிந்த நான் தனஞ்செயனிடம் “நான்  அவ்வளவு விளக்கமா சொல்லியும் என்னை பத்தி தப்பா பேசி இருக்காங்களே . நீ சொன்னியா இல்லியாடா ?’ன்னு கேட்டேன் . அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியல .
உண்மையில் என்னை செருப்பு துடைக்க சொன்ன அந்த ரத்னகுமார் எப்படிப்பட்டவன் தெரியுமா?
bala 2
பரதேசி படத்தின் ஷூட்டிங்கில் நான் இருந்தபோது என்னை சந்தித்த அவன் , பாரதிராஜாவை மட்டுமல்ல,  அவரது அப்பா அம்மா , தாத்தா பாட்டி என்று பாரதிராஜாவின் பரம்பரையையே ,
அசிங்கமாக கேவலமான கெட்ட வார்த்தைகளில் திட்டி ‘குற்றப் பரம்பரை படத்தை அந்த ஆளு ஒழுங்கா எடுக்க மாட்டான். கேவலப்படுத்திடுவான் .அதனால நீங்க எடுங்க’ன்னு சொன்னவன்  அப்படிப்பட்டவன் அவன் .
இதை எல்லாம் இப்போது மீடியா முன்னாடி சொல்ல வேண்டியதாச்சு . 
அவங்க படப் பூஜையில் என்னைப் பற்றி இவ்வளவு அசிங்கமா பேசிய பிறகும் நான் தனஞ்செயனிடம் சத்தம் போட்டு விட்டு, பிரச்னையை விட்டு விட்டேன் . 
என் படத்தில் விஷால் , ஆர்யா இருவரும் நடிக்கிறார்கள் . நான் படத்தை ஆரம்பிக்கவே இன்னும் நாலு அஞ்சு மாசம் ஆகும் . ‘
குற்றப்பரம்பரை வரலாறு பற்றிய படத்தில் தெலுங்கு நடிகரான விஷாலும்  மலையாள நடிகரான ஆர்யாவும்  நடிக்கலாமா?’ என்று  பாரதிராஜா கேட்டதாக சொல்றீங்க . அப்படிக் கேட்கக் கூடாது.
சினிமாவை சாதி, மொழி, இனம் , தேசம் என்று எந்த எல்லைக்குள்ளும் சுருக்கக் கூடாது . சினிமா என்பது  உலக மொழி 
இவ்வளவுக்குப் பிறகும் இப்போதும் இன்றும் என்னைப் பற்றி தவறாகப் பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 
bala 3
இது பற்றிப் பேச நான் பாரதிராஜாவுக்கு போன் செய்தேன். போனை கட் செய்தார் . மீண்டும் செய்தேன் . கட் செய்தார் .
மூன்றாவது தடவையும் போன் செய்தேன் . ”கட் பண்ண கட் பண்ண திரும்ப திரும்ப போன் செய்யறான் பாரு ” என்று சொல்லி விட்டு கட் செய்தார் 
தவிர நான் பாரதிராஜாவிடம் வேலை கேட்டுப் போனேன் பம்மினேன் என்றும் ஒரு பேச்சு . நான் பாரதிராஜாவிடம் வேலை கேட்டுப் போனது இல்லை . என் குருநாதர் பாலு மகேந்திரா தவிர யாரிடமும் பம்மியது இல்லை .
அவரைத் தவிர வேறு யாரையும் குருவாக நினைத்தது இல்லை . இந்த பெருமை மாறக் கூடாது என்பதற்காக பல நாள் பட்டினி கிடந்து இருக்கிறேன்.இதுதான் உண்மை .
இதுவரை அமைதியாக இருந்தேன் . இப்போது அந்த ரத்னகுமாரையும் பாரதிராஜாவையும் நான் இதோ மீடியா  முன்னாள் நேரடியாக எச்சரிக்கிறேன் .
இனியும் இப்படி என்னை சீண்டிக் கொண்டிருந்தால் நடக்கப் போகும் விஷயங்கள் எனக்கு நல்லதோ இல்லையோ . கண்டிப்பாக உங்கள் இருவருக்கும் நல்லதாக இருக்காது . எச்சரிக்கிறேன்” என்றார் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →