மறக்க முடியுமா அந்தப் பச்சிளம் பாலகனையும் அவனது பால் மணம் மாறாத அந்த முகத்தையும்? அதிலும் அந்த முகத்தில் கம்பீரமாக வெளிப்பட்ட புலிப் பார்வை……! வீரம் என்ற சொல்லுக்கு இனி அகராதியில் எழுத்தால் பொருள் போடத் தேவையே இல்லை . எல்லா மொழி டிக்ஷனரிகளிலும் அந்த போட்டோவைப் போட்டாலே போதும் என்று ஆனதே !
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது உலக மனிதாபிமானமே தலைகுனியும் அளவுக்கு அநியாயமாகக் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் கொலை செய்யப்பட்டதும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் உண்மையான மனிதர்கள் அனைவரையும் துடிக்க வைத்தது.
அதிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான பாலச்சந்திரன் என்ற பாலா வாழைத் தண்டை, துப்பாகிக் குண்டுகள் துளைத்தது அந்த சிறுவன் மார்பில் குண்டுகள் பாய்ந்து மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கும் காட்சி கல்மனம் உள்ளவர்களையும் கூடக் கரைத்தது . சிங்களக் காட்டுமிராண்டிகளால் பிடிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் இருந்த பாலச்சந்திரன் அந்த மரண நிமிடங்களுக்கு முன்னால் பார்த்த பார்வை … உலக அளவில் தமிழினத்தின் வீரத்துக்கும் தைரியத்துக்கும் சாகாத சாட்சியாக மாறிப் போனது.
மறைந்த பாலச்சந்திரன், பிரபாகரன் மதிவதனி தம்பதிக்கு பிள்ளையாகப் பிறந்தது முதல் நிஜமான புறநானூற்று வீரத் தமிழனாக மண்ணில் சாய்ந்தது வரைக்குமான வாழ்க்கை, புலிப் பார்வை என்ற பெயரில் திரைப்படமாக வருகிறது.
ரட்சகன் படத்தை இயக்கிய பிரவீன் காந்த்தின் எழுத்து இயக்கத்தில் பாரி வேந்தர் வழங்க வேந்தர் மூவீஸ் மதன் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார். பாலச்சந்திரன் போன்ற உருவத் தோற்றம் உள்ள சத்யதேவ் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறான் . சத்யதேவை கண்டுபிடிக்க மட்டும் ஆறு மாதம் ஆனதாம் இயக்குனருக்கு.
இது போன்ற கதைகளை நமது இந்திய சென்சார் போர்டு எப்படி கையாளும் என்பது உலகறிந்த விஷயம் என்பதால் முதலில் கதை திரைக்கதையை சென்சார் போர்டு அதிகாரிகளிடம் காட்டி ஆலோசனை பெற்று படம் எடுத்து முடித்து சென்சாருக்கு படத்தையும் போட்டுக் காட்டி அவர்கள் சொன்ன சிற்சில விசயங்களை பின்பற்றி ‘யூஏ’ சான்றிதழும் (பெற்றோர் உடன் வர பிள்ளைகளும் பார்க்கலாம் என்பதற்கான சான்றிதழ் இது ) வாங்கி விட்டார்கள். (பாரி வேந்தர் படம் என்பதால் பெரிதாக சமரசம் செய்து கொள்ளாமல் இதை செய்து முடித்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது)
இந்தப் படத்துக்காக ”உனது புலிப் பார்வை வருங்கால சரித்திரம்” என்று தொடங்கும் ஒரு பாடலை பாரி வேந்தர் எழுதி இருக்கிறாராம். படத்தில் பிரபாகரன் கதாபாத்திமும் வருகிறது. அதில் நடித்து இருப்பவர் வேந்தர் மூவீஸ் மதன் !
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் பிரவீன் காந்த் “முழுக்க பாலச்சந்திரனின் வரலாற்றை சொல்லும்படம் இது. தனி ஈழமே வேண்டாம் என்பவர்கள் கூட பாலச்சந்திரன் படுகொலையை மன்னிக்க மாட்டார்கள் .அந்த அநியாயத்தை ஒரு படமாக எடுத்து பதிவு செய்ய நான் விரும்பிக் கதை சொன்னபோது உடனே தயாரிக்க பாரி வேந்தர் அய்யாவும் மதன் சாரும் ஏற்றுக் கொண்டு செய்து முடித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என்ற உண்மையை படத்தில் தெளிவாக சொல்கிறோம் ” என்றார் (அருமை !)
பாலச்சந்திரனாக நடித்திருக்கும் சத்யதேவ் என்ன சொல்கிறான் ..ம்ஹும்! என்ன சொல்கிறார் ?
“பாலசந்திரன் சுடப்பட்டு கிடக்கும் போட்டோவோயும் அதுக்கு முன்பு பயப்படாம பிஸ்கட் சாப்பிடுற போட்டோவையும் பார்த்து அப்போ நான் கலங்கிப் போனேன். ‘இப்படி அநியாயமா கொன்னுட்டாங்களே ..’ அப்படின்னு நினைச்சுருக்கேன். அதே பாலச்சந்திரன் கேரக்டர்ல நடிக்க வாய்ப்பு வந்த போது நெகிழ்ச்சியாவும் பெருமையாவும் இருந்தது. என்னை வந்து டைரக்டர் பார்த்துட்டு போன பிறகு இந்த கேரக்டர் எனக்கே கிடைக்கணும் . வேற யாருக்கும் போயிடக் கூடாதுன்னு தினமும் பிரார்த்தனை பண்ணினேன். அப்படியே எனக்கு வந்தது. இப்போ பாலாவா வாழ்ந்த மாதிரி இருக்கு“என்கிறார். (இதற்கு பெயர்தான் பாக்கியம் , பேறு, கொடுப்பினை !)
சரித்திரம் படைக்கட்டும் புலிப்பார்வை!