கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பில் எம் .சசிகுமார் வழங்க அசோக் தயாரிப்பில்,
எம் .சசிகுமார், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா, சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி , பாலா சிங் ஆகியோர் நடிப்பில்,
சோலை பிரகாஷ் இயக்கி இருக்கும் படம் ”பலே வெள்ளையத் தேவா”
(”பலே” வெள்ளையத் தேவா என்று முடிக்கும் மேற்கோள் குறியை படத்தின் டைட்டிலில் மாற்றிப் போட்டு இருப்பது ஏனோ ? பேசப் படும் வார்த்தை என்பதால் ”பலே வெள்ளையத் தேவா” என்று போடுவதுதானே சரி ? )
வரும் 23 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் சிறு முன்னோட்டம் ஒன்றையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டனர்.
மதுரைப் பக்க கிராமத்தைச் சேர்ந்த செல்ஃபி எடுக்கும் பாட்டியாக கோவை சரளா, லேப் டாப் பார்க்கும் தாத்தாவாக சங்கிலி முருகன்,” அடிடா அவன ” என்று ரவுடியை நோக்கி,
மகனிடம் கை காட்டும் அம்மாவாக ரோகிணி, பாசம் – வீரம் – காதல் கொண்ட நாயகனாக எம் சசிகுமார், அவரை காதலிக்கும் குல்ஃபியாக தான்யா என்று
ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லாக இருக்கிறது முன்னோட்டம் .
தர்புக சிவா இசையில் அமைந்த பாடல்களில், குடும்ப (கேரக்டர் ) உறுப்பினர்கள் சகிதம், சேலை கட்டிய பெண்கள் , மேளம் இவற்றோடு முகம் நிறைக்கும் சிரிப்போடு ஒயிலாட்டம் ஆடுகிறார் சசி குமார் .
நிகழ்வில் பேசிய இயக்குனர் சோலை பிரகாஷ் ” ஒருவன் ஒரு செயலில் , போராட்டத்தில் இருக்கும்போது அவனை பாராட்டி உற்சாகப்படுத்தினால் அவன் கண்டிப்பாக ஜெயிப்பான் .
அந்த குறியீடுதான் படத்தின் பெயர்க் காரணம்.
நவீன தொழில் நுட்பங்கள் ஒரு கிராமத்துக்கு என்ன தருகிறது . அந்த மக்களிடம் இருந்து என்ன பெறுகிறது என்பதுதான் படத்தின் கதை .
பொதுவாக மதுரை என்றால் அடிதடி வெட்டுக் குத்து என்றுதான் படங்கள் வருகின்றன (ஆகா, உள்ளே இருந்தே சேம் சைடு கோல் போடறாரே ) அதை மாற்றி இந்தப் படத்தை காமெடியா சொல்லி இருக்கேன் ” என்றார்
சங்கிலி முருகன் பேசும்போது ” பலே வெள்ளையத் தேவா என்பதை பலே சசிகுமார் என்று மாற்றிச் சொல்லலாம் . அவ்வளவு சிறப்பாக வேலை பார்த்தார் சசிகுமார் .
அம்பது நாளில் படத்தை சிறப்பாக முடித்தார்கள் சசிகுமாரும் இயக்குனர் சோலை பிரகாஷும். . இப்படி திட்டமிட்டு செயல்பட்டால் தயாரிப்பு செலவை குறைக்கலாம் .”என்றார் .
ரோகிணி பேசும்போது ” மகளிர் மட்டும் படத்துக்கு அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் ரொம்ப இயல்பாக உணர்ந்தது இந்தப் படத்தில்தான். சசிகுமாருக்கும் இயக்குனருக்கும் நன்றிகள் .
படத்தில் என் கேரக்டர் கொஞ்சம் சீரியசான அம்மா கேரக்டர். படம் ரொம்ப சிறப்பாக வந்து இருக்கிறது ” என்றார் .
கோவை சரளா பேசும்போது ” சசி குமார் இனி வருடம் பத்து படம் எடுக்க வேண்டும் . பத்திலும் எனக்கும்
ரோகிணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் நாங்கள் வேறு படங்களில் நடிக்காமலே இருந்து விடுகிறோம்.
அந்த அளவுக்கு நல்ல கேரக்டர் நல்ல மரியாதை . முக்கியமா நல்ல சம்பளம் கொடுத்தார் சசிகுமார் அதான் எல்லா படத்துக்கும் என்னை கூப்பிடுங்கன்னு சொல்றேன்” என்றார் .
சசிகுமார் தன் பேச்சில் “சங்கிலி முருகன் போன்ற சினிமா தெரிந்த சாதனையாளர் என்னை பாராட்டியது ரொம்ப பெருமையா இருக்கு. செல்பி ஆத்தா கேரக்டரை நடிக்க இரண்டு பேரால்தான் முடியும் .
ஒருவர் ஆச்சி . அவர் இல்லாத நிலையில் கோவை சரளாவை விட்டால் ஆளே இல்லை.
அவர் இல்லாமல் இந்தப் படம் சாத்தியம் ஆகி இருக்காது . ரோகிணியும் அம்மாவாக அசத்தி இருக்கிறார்.
படத்தை ஐம்பது நாளில் முடித்துக் கொடுத்தார் இயக்குனர் சோலை பிரகாஷ் . ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடியும் எனது எனக்கே இப்போதான் தெரிந்தது.
நான்தானே புரடியூசர் . கொஞ்சமா ரெஸ்ட் கொடுங்க என்றால் கூட விடாமல் வேலை வாங்கி படத்தை முடித்தார் ” என்றார்
வரும் 23 ஆம் தேதி வெளிவரும் இந்த படத்தை வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் வெளியிடுகிறது.