என் கே புரடக்ஷன்ஸ் சார்பில் திலகராஜ் பல்லால் மற்றும் முசம்மில் அஹமத் கான் தயாரிப்பில் சைத் கான், சோனல் மொன்டைரோ, சுஜய் சாஸ்திரி நடிப்பில் ஜெயதீர்த்தா எழுதி இயக்கி இருக்கும் படம் .
பாடகியும் சமூக வலைதள பிரமுகருமான இளம்பெண் ஒருத்தியை(சோனல்) சந்திக்கும் இளைஞன் ( சைத்கான்), தான் கால இயந்திரம் ஏறி பின்னோக்கி வந்திருப்பதாகவும் தான்தான் அவளது கணவன்; இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு என்று கூறுகிறான் . அவன் அவளைப் பற்றி சொல்லும் மேலும் பல விசயங்களால் பிரம்மிக்கும் அவள், தவிர்க்க முடியா ஒரு சூழலில் அவனை தன் அறையில் தங்க வைக்கிறாள். அவள் உறங்கும் போது அவளது அருகில் படுத்தபடி போட்டோ எடுக்கிறான் அவன்
நல்ல பெண்ணான அவளை மடக்கிக் காட்டுவதாக நண்பர்களிடம் சவால் விட்ட அவன் அதை எல்லோரையும் நம்ப வைக்க நடத்திய நாடகம் என்பது அப்போதுதான்புரிகிறது . அந்த போட்டோவை நண்பன் ஒருவன் ஒரு வாட்ஸ் அப் குழுவில் போட, அது இணைய வெளி எங்கும் பரவி அவளுக்கு அவமானத்தையும் அவச் சொல்லையும் ஏற்படுத்துகிறது.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தும் அவள் ,தன் அப்பா அம்மா உயிரை விட்ட – சித்தி சித்தப்பா வசிக்கிற- பனாரஸ் என்கிற காசிக்கு போய் விடுகிறாள் .
ஒரு நிலையில் தன் தவறை உணரும் அவன் அவளைத் தேடிப் போகிறான். பெரும் தேடலுக்குப் பின் சந்தித்து சமாதானப் படுத்தும் போது நிஜமாகவே டைம் லூப்பில் சிக்குகிறான். அதில் நாயகி கொடூரமாக கொலை செய்யப்படுவது போல மீண்டும் மீண்டும் நடக்கிறது . அதைத் தடுக்க நாயகன் என்ன முயற்சி எடுத்தான் . முடிவு என்ன ஆனது என்பதே படம்.

அட்டகாசமான படமாக்கல் , சிறப்பான ஷாட்ஸ் இவற்றின் மூலம் கவர்கிறார் இயக்குனர் ஜெய தீர்த்தா . காசியின் அனைத்து பரிமாணங்களையும் சிறப்பாக படைத்து இருக்கிறார் . கதாநாயகியை தேவதை அளவுக்கு உயர்த்தி காட்டி இருக்கிறார் . மிகச் சிறந்த காட்சிப் படைப்பாளியாக தொழில் நுட்பக் கலைஞராக ஜொலிக்கும் ஜெய தீர்த்தாவுக்கு வாழ்த்துகள்.
அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு காசி மாநகரின் அழகை, பழமையை, நெரிசலை, கம்பீரத்தை, தெய்வீகத்தை கண்ணுக்கும் மனசுக்கும் விருந்தாக்குகிறது. மற்ற காட்சிகளிலும் ஒளி, மற்றும் வண்ணப் பயன்பாடு அருமை
ஆரம்பக் காட்சி முதல் அஜனீஷ் லோகநாத் இசையில் அசத்தி இருக்கிறார் . மாயகங்கா பாட்டு மனம் மயக்குகிறது
கே எம் பிரகாஷின் படத் தொகுப்பும் சிறப்பு .
சைத்கான் , சோனல் இருவரும் இளமை துள்ளும் நடிப்பில் ஜொலிக்கிறார்கள் . சோனல் ஒரு படி மேல்.

காசியில் நாயகனுக்கு உதவுகிற – இறுதி சடங்குக்கு வரும் பிணங்களை படம் எடுத்துத் தரும் ஷாம்பு கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் சுஜய் சாஸ்திரி. பண்பட்ட நடிப்பு .
அச்யுத் குமார் சிறப்பு . உயர மாற்றுத் திறன் கொண்ட பரக்கத் அலி மிரட்டுகிறார் . நாயகியின் சித்தியாக வருபவர் புன்னகைக்க வைத்துக் கவர்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் நாயகியை சந்தித்து நாயகன் பேசும் காட்சிகளும் விசயங்களும் வாய் பிளக்க வைக்கிறது . உண்மையிலேயே அவன் கால இயந்திரத்தில் பின்னோக்கி வந்த அவளது நிஜ கணவனாக இருந்து , திரைக்கதை அப்படியே பயணித்து இருந்தால் இந்தப் படம் பிரம்மிக்க வைத்திருக்குமே என்ற ஏக்கமே வருகிறது .
ஆனால் அது நாயகனின் ஏமாற்று வேலை என்ற திருப்பம், படம் பார்க்கும் ரசிகனையும் ஏமாற்றுகிறது . அது கூடப் பரவாயில்லை . அதன் பின்னர் அவளை அவன் கன்வின்ஸ் செய்வதுதான் கதை என்றால் கூட ஒகே தான் . ஆனால் அதுவும் அழுத்தமான காட்சிகள் இல்லாமல் சுலபமாக நடக்கிறது என்பது ஒரு பலவீனம் .
இரண்டாம் பகுதியில் டைம் லூப் வருகிறது . இதை நாம் மாநாடு படத்தில் இன்னும் சிறப்பாக பார்த்து இருப்பதால் அந்தக் காட்சிகள் ஈர்க்கவில்லை. மீண்டும் அது டைம் லூப் இல்லை . கெமிக்கல் மருந்து வேலை என்று சொல்வதும் அதையும் ஆரம்பத்திலேயே சொல்லி ஒப்பன் சஸ்பென்ஸ் ஆக்கி விடுவதால் மேலும் பலவீனம் ஆகிறது திரைக்கதை.

முக்தி பவன் பற்றிய விஷயத்தை வசனமாக சொல்லாமல் காட்சியாக வைத்து இருந்தால் அது படத்துக்கு பெரும்பலம் . ( சீனு ராமசாமி இயகத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தின் கிளைமாக்ஸ் அதுதான் என்றாலும் முக்தி பவன் என்ற விஷயம் அங்கே அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்காது)
இறந்தவர்களைப் புகைப்படம் எடுத்துத் தருவதன் சிறப்பை உயர்ந்த நிலையில் இருந்து சொல்லும் சாம்பு கதாபாத்திரம் அருமை. ஆனால் அதுவும் கடைசி காட்சியில் கல்யாண போட்டோ எடுப்பதை பெருமையான விசயம் என்று சொல்லி சேம் சைடு கோல் அடிக்கிறது .
இப்படி திரைக்கதையில் படம் திசை மாறிப் போயிருந்தாலும் படமாக்கலில், இயக்கத்தில், தயாரிப்புத் தரத்தில் ஜொலிக்கிறது .