பி வி பி புரடக்ஷன்ஸ் சார்பில் பரம் வி பொட்லுரி தயாரிக்க, ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபட்டி, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா, லக்ஷ்மி ராய் ஆகியோர் நடிக்க ,
தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனரான பொம்மரிலு பாஸ்கர் இயக்கி இருக்கும் படம் பெங்களூர் நாட்கள் . இந்த நாட்கள் கொண்டாட்ட நாட்களா? திண்டாட்ட நாட்களா? பார்க்கலாம்
சித்தப்பன் பெரியப்பன் மகன்கள் குட்டியும் (பாபி சிம்ஹா) அர்ஜுனும் (ஆர்யா). இருவருக்கும் தந்தை வழி அத்தை மகள் அம்மு என்கிற திவ்யா ராகவன் (ஸ்ரீதிவ்யா ) .
கோயம்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த வளர்ந்த இவர்களுக்கு, பெங்களூர் போய் ஜாலியாக சுற்ற வேண்டும் என்பது சிறு வயசு ஆசை.
விவசாயம் பார்த்து கஷ்டப்படும் அம்மா அப்பாவுக்குப் (எம் எஸ் பாஸ்கர் — சரண்யா) பிறந்த குட்டி , விவசாயம் பார்க்கும் கஷ்டத்தில் இருந்து விலக வேண்டும் என்று ஆசைப்படும் அவனது அம்மாவின் ஆசைப்படி,
படித்து ஐ டி கம்பெனியில் பெங்களூரில் வேலை வாங்குகிறான் .
அம்முவுக்கு பெங்களூரில் வேலை செய்யும் சிவா (ராணா டகுபட்டி ) என்பவனுடன் திருமணம் நடந்து , குடித்தனம் நடத்த பெங்களூர் வருகிறாள்.
சின்ன வயசு முதலே எதுவாக இருந்தாலும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு , அதனால் பலரின் எரிச்சலுக்கு ஆளாகி , விவாகரத்துச் செய்து கொண்டு பிரிந்து போன அப்பா அம்மாவால் காயப்பட்டு ,
பல ஊர்கள் பல வேலை என்று வாழும் பைக் ரேசரான அர்ஜுனும் , அம்முவின் திருமணத்துக்குப் பிறகு பெங்களூர் வருகிறான் .
அம்முவுக்கு அவள் கணவனோடு நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை . தன்னை மனைவியாக அவன் நடத்தவில்லை என்பதோடு அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் (சமந்தா) உறவு இருப்பதும்,
அம்முவுக்கும் தெரிய வர, பிரச்னை வளர்ந்து விவாகரத்து வரை போகிறது .
களங்கமில்லாத நாட்டுப் புறத்தானான குட்டிக்கு லக்ஷ்மி என்ற (லக்ஷ்மி ராய் ) ஏற ஹோஸ்டஸ் பெண்ணுடன் காதல் ஏற்பட, அவளும் அவனைக் காதலிக்க, திடீரென்று அவள் தனது பழைய பாய் ஃபிரண்டோடு நெருக்கமாக,
அவனும் நொறுங்கிப் போகிறான் .
மிகச் சிறந்த பர்சனாலிட்டி நிறைந்த மாற்றுத் திறனாளி பெண்ணும் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சாராவுக்கும் (பார்வதி ) அர்ஜுனுக்கும் ஏற்படும் காதலை சாராவின் அம்மா விரும்பவில்லை,
காரணம் அர்ஜுனின் நடோடித்தன வாழ்க்கையும் அப்பா அம்மா இல்லாத நிலையும் . எனவே அவனும் மனம் உடைந்து போகிறான் .
தவிர முன்னாள் பை ரேசரான அவனுக்கு சக வீரன் ஒருவன் ஒரு சவாலும் வைக்கிறான் .
இப்படி, பெங்களூர் நகரை விரும்பிய இவர்களுக்கு பெங்களூர் வாழ்க்கையில் பிரச்னைகளே அதிகமாக , அப்புறம் என்ன நடந்தது என்பதே பெங்களூர் நாட்கள் .
மலையாளத்தில் அஞ்சலி மேனன் எழுதி இயக்கி பெருவெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் .
மலையாளத்தை விட தமிழில் படத்தின் நீளம் 25 நிமிஷம் குறைவு
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு பிறந்த பிள்ளைகளின் வாழ்க்கை என்ற அந்த ஏரியா ரொம்பப் புதுசு. குட்டியின் விவசாய அம்மா ஜெர்க்கின் போட்ட அமெரிக்க ஆண்ட்டியாக மாறுவது…
அவனது ஏர்ஹோஸ்டஸ் காதலியின் எதிர்பாராத மாற்றம் என்று, திரைக்கதையில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள்.
சாரா கதாபாத்திரம் மற்றும் காட்சிகள் படத்தின் பெரிய பிளஸ் .
சிவாவின் முன்னாள் காதலி பற்றிய அந்த பிளாஷ் பேக் ஒகேதான் .ஆனால் அவளின் பெற்றோருக்கும் அம்முவுக்கும் அவள் வழியாக சிவாவுக்கும் ஏற்படும் சந்திப்புகள் அழகிய கவிதை.
கடைசியில் வரும் குட்டியின் மணப்பெண் டுவிஸ்ட் சூப்பர் .
படத்தில் ஆரம்பம் முதலே நம்மைக் கவர்வது கே வி குகனின் ஒளிப்பதிவு . அப்படி ஒரு அழகியல் ! கலை இயக்கமும் ஆடை வடிவமைப்பும் அதற்கு மிகவும் உதவுகிறது.
ஆர்யா, ஸ்ரீதிவ்யா , பாபி சிம்ஹா எல்லாருமே தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து இருந்தாலும் …
நடிப்பில் முதலிடம் பார்வதிக்கு. சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட நுணுக்கமாக வெளிப்படுத்தி ரசித்து ருசித்து அந்த கேரக்டரை நடித்துள்ளார் .
அடுத்த இடம் ராணாவுக்கு . அடக்கி வாசிக்கும் நடிப்பில் இயல்பாகக் கவர்கிறார் .
பிரகாஷ் ராஜ் , அவர் மனைவியாக வரும் நடிகை ஆகியோர் ஒரு பக்கம் நெகிழ வைக்க , மறுபக்கம் சரண்யா கலக்குகிறார் .
பைக் ரேஸ் காட்சிகளில் ஆர்யா மஸ்து காட்டுகிறார்
கோபி சுந்தரின் இசையில் பின்னணி இசையை விட பாடல்கள் நன்றாக வந்துள்ளது .
மிக செழிப்பாக படத்தை உருவாக்கியுள்ளனர் பி வி பி நிறுவனத்தார் .
அம்முவின் மணப்பெண் அறையில் நுழைந்து அர்ஜுனும் குட்டியும் கலாய்ப்பது , அம்மு அங்கே தம் அடிப்பது ஆகிய காட்சிகளில் பக்கா மலையாள வாடை .
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு பிறந்த பிள்ளைகளின் வாழ்க்கை என்ற விஷயம்தான் புதுசே தவிர,
நடக்கும் சம்பவங்கள் எல்லாம் பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு நடந்த — ரசிகர்கள் அறிந்த சம்பவங்கள்தான் . முடிவுகள்தான் .
அப்படியானால் என்ன செய்து இருக்கலாம் ?
மூலக் கதையில் இருந்து குட்டி, அர்ஜுன் , அம்மு ஆகிய கதாபாத்திரங்களின் உறவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு,
அவர்களுக்கும் ஏற்படும் நட்பு, பாசம் , பிணக்கு, கோபம் , ஈகோ இவற்றை அடிப்படையாக வைத்து…
மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தையும் துணைக் கதாபாத்திரங்களாகவே வைத்து காட்சிகள் அமைத்து இருந்தால்
படம் மிக புதுமையான ஒரு க(வி)தையாகவும் இன்னும் சிறப்பான படைப்பாகவும் வந்திருக்கும் .
எனினும் ,
பெங்களூர் நாட்கள் … வண்ணமயமான நாட்கள்
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————–
பார்வதி, கே வி குகன்