ஏ டி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வழங்க, கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் சார்பில் மருதுபாண்டியன் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ .
சினிமா ஆசையில் சென்னை வந்து போராடும் கனவு சுமக்கும் கலைஞர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை சொல்லும் படம் இது.
மருது பாண்டியன் இயக்குனர் இமயம் பாரதிராஜவின் பக்கத்து ஊர்க்காரர் . அந்த உரிமையில் படத்தை எடுத்து முடித்த பிறகு படம் பார்க்க பாரதிராஜாவை அழைத்தார். வேண்டா வெறுப்போடு படம் பார்க்க வந்த பாரதிராஜா, படத்தைப் பார்த்து வியந்து போய் பாராட்டியதோடு , தனது பழைய உதவியாளர்கள் மற்றும நண்பர்களோடு இரண்டாவது முறையாகவும் அந்தப் படத்தை பார்த்து ரசித்து இருக்கிறார் .
இன்னொரு பக்கம் மருதுபாண்டியன், கே.பாக்யராஜின் ஏகலைவ சிஷ்யர் . அதோடு தனது குருநாதரான பாரதி ராஜா ஒரு படத்தை இரண்டு முறை பார்த்து பாராட்டினார் என்பது பாக்யராஜுக்கு பெரிய ஆச்சர்யம் .
விளைவு?
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு இருவருமே வந்து பாடல்களை வெளியிட்டு மீண்டும் ஒரு முறை பாராட்டித் தள்ளினார்கள் .
இயக்குனர் மருது பாண்டியன் பேசும்போது ” பதினாறு வயதினிலே படம் பார்த்தபோது எனக்கு சினிமா மீது ஆசை வந்தது. அப்படி ஒரு படத்தை வாழ்நாளுக்குள் எடுத்து விடவேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதே போல சினிமா மீது ஆசை வந்தும் அது பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் இருந்தேன் . அப்போது நான் படித்த புத்தகம் பாக்யராஜ் சார் எழுதிய வாங்க சினிமா பத்தி பேசலாம் . அதுதான் எனக்கு சினிமா பற்றி கற்றுக் கொடுத்தது. அதனால்தான் அந்த இருவரும் என் படத்தின் விழாவுக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பாரதிராஜா சார் என் படத்தை இரண்டு முறை பார்த்துப் பாராட்டிய கவுரவம் மறக்க முடியாத ஒன்று” என்றார் .
பாக்யராஜ் தனது பேச்சில் “மருது பாண்டியன் பேசும்போது நான் எழுதின புத்தகம்தான் அவருக்கு முதல் பாடம்னு சொன்னாரு . எல்லாருக்குமே அப்படி ஒரு ஆரம்பம் இருக்கும். எல்லாரும் வந்த அப்புறம் கத்துக்கறதுதான்.
நான் எங்க டைரக்டரிடம் காப்பி ரைட்டிங்குக்குதான் வந்தேன். அவரு அசிஸ்டண்டா வச்சுக்கிட்டாரு. பதினாறு வயதினிலே முதல் படம் . தினசரி ஷூட்டிங் முடிச்சிட்டு வந்ததும், படம் எடுத்த நெகட்டிவ் பிலிமை என் ரூம்லதான் வைப்பாங்க .
ஒரு நாள் எனக்கு ஒரு ஐடியா வந்தது ‘இந்த ரோலை எல்லாம் பிரிச்சு பார்த்தா கமல் ஸ்ரீதேவி உருவம் எல்லாம் எப்படி விழுந்திருக்கு.. எப்படி நடிச்சு இருக்காங்கன்னு னு பாத்துரலாமே’ ன்னு நெகட்டிவ் கேன் எடுத்து பிரிக்க போய்ட்டேன் . பார்த்துட்டு இருந்த டைரக்டர் பதறி அடிச்சு ஓடி வந்து அதை புடுங்கி வச்சாரு . அப்படித்தானே நான் இருந்தேன் . ஆனா வந்த பிறகு கத்துக்கறதுதான் முக்கியம் ” என்றார் .
திறந்த மனதோடு பேசிய பாரதிராஜா ” நாயகன் படத்தை பார்த்தப்ப என்னால ரெண்டு நாள் தூங்க முடியல. அடிக்கடி அந்த படப் பொட்டியைக் கொண்டு வர சொல்லி போட்டுப் போட்டுப் பார்த்தேன் . அடுத்து என்னை அப்படிப் பாதித்த படம் இந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது .
என் படங்களை யதார்த்தமான படங்கள்னு சொல்வாங்க. ஆனா நான் நிழல்கள் மாதிரி ஒரு சில படங்களை விட, மத்த படங்களில் எல்லாம் சினிமாவுக்கான ஒரு கோட்டிங் கொடுத்து இருப்பேன். ஆனால் இந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் யதார்த்தத்தின் உச்சம் தொட்டு இருக்கிறார்கள் .
இப்படி ஒரு அற்புதமான படத்தை இனம் கண்டு கை கொடுத்து வெளிக் கொண்டு வரும் மதுராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . அது மட்டுமல்ல சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து கஷ்டப்படும் யாரும் முதல் மூன்று மாதத்துக்கு தனது அலுவலகத்தில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் .என்று அறிவித்து உள்ளார் மதுராஜ் . சினிமாவை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி சொல்ல முடியும் ” என்றார் .
இப்படியாக….. பெரிய தலைகளின் பாராட்டால் இப்போதே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்துக்கு, மரியாதையுடன் ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது .