ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் , அரவிந்த்சாமி – அமலாபால் இணையராக நடிக்க, .
நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடிக்க ,
சித்திக் இயக்கியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. படம் எப்படி? பேசலாம் .
படித்த பணக்கார மாடர்ன் லைஃப் ஸ்டைல் கொண்ட மனிதருக்கு ( நாசர்) பிள்ளையாகப் பிறந்து, ஒரு பெரிய கம்பெனியின் எம் டி யாக இருந்தாலும் ,
கோப குணம் , அநீதி கண்டால் தட்டிக் கேட்பது, அடிதடி ரகளை என்று இருப்பவன் பாஸ்கர் ( அரவிந்த்சாமி) .
மனைவி இறந்த நிலையில் பள்ளி செல்லும் மகனோடு ( மாஸ்டர் ராகவ் ) வாழ்கிறான் . பேரன், தாத்தா போல அமைதியான குணம் .
சிறுவனின் பள்ளித் தோழி ஒருத்திக்கு ( பேபி நைனிகா) அநியாயம் கண்டால் பொங்கும் குணம் . ஆனால் அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு ( அமலா பால்) ,
பொறுமையான குணம் . தனது கோபமே தன் மகள் தந்தையை ( அஃப்தாப் ஷிவ்தசானி ) இழந்த பிள்ளையாக இருக்கக் காரணம் என்பது அவள் எண்ணம் .
சிறுவர்களின் சந்திப்பால் பெரியவர்களும் சந்திக்க, ஆனால் ஒருவருக்கு ஒருவர் பிடிக்கவில்லை .
அதே நேரம் சிறுவனுக்கு சிறுமியின் அம்மாவையும் , சிறுமிக்கு சிறுவனின் அப்பாவையும் ரொம்ப பிடிக்கிறது .
எனவே பெரியவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து கொள்ள வைத்து விட்டால் நால்வரும் ஒன்றாக வாழலாம் என்று திட்டம் போடும் குழநதைகள் அதை சாதிக்க கஷ்டப் படுகின்றனர்.
ஒரு நிலையில் பெரியவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு அன்பு மொட்டு விடும் வேளையில், சிறுமியின் அப்பா மீண்டும் வருகிறான் .
குழந்தைகளின் கனவு என்ன ஆனது என்பதே படம் .
மலையாளத்தில் இதே சித்திக் இயக்கத்தில் மம்முட்டி . நயன்தாரா நடித்து வெளிவந்த படத்தின் மறு உருவாக்கம்.
லாஜிக் கொஞ்சம் இடித்தாலும் வித்தியாசமான பணக்கார பாஸ்கர் , நேர்மாறான அவனது அப்பாவும் மகனும் , அதே போலே சிறுமி வீட்டில் ….!
– என்று கதை வித்தியாசமாக ஆரம்பிக்கிறது . ஒரு நிலை வரை ரசிக்கவும் வைக்கிறது .
அரவிந்த்சாமி ஒகே . அமலா பால் ஒகே . பேபி நைனிகாவின் மழலை கோபம் அழகு . ராகவ் சிறப்பாக நடித்துள்ளான் .
ரமேஷ் கண்ணாவின் வசனம் இயல்பு . விஜய் உலகநாத் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது . அம்ரேஷ் இசையில் பாடல்கள் ஹிட் . பின்னணி இசையும் ஓகே .
இடைவேளைக்கு முன்பு திடீர் என ‘செத்துப் போன ‘ புருஷன் வந்து நிற்கிறான் பாருங்கள் . அங்கே தடுமாறுகிறது படம்.
இரண்டாம் பாகம் முழுக்க ஏகப்பட்ட அரைச்ச மாவு புளிச்ச இட்லிகள் . ஊசல் வடைகள் !
பிரண்ட்ஸ் படத்தில் அருமையான (வடிவேலு) காமேடிகளால் அசத்திய இயக்குனர சித்திக்கா இந்தப் படத்தை இயக்கி இருப்பது ?
நல்ல நகைச்சுவை காட்சிகள் சித்திக்கவில்லையா சித்திக் ? பட்டாசு காமெடியின் அதிக நீளம் எரிச்சல் ஊட்டுகிறது
சண்டைக் காட்சிகள் நன்றாக இருப்பது வேறு . ஆனால் தேவைக்கு மேல் ஓவராக இருந்து அலுக்க வைப்பது வேறு.
தமிழ் சினிமான்னா இப்படி கதற கதற சண்டைக்காட்சி வைக்கணும் என்று சொன்னது யார் சித்திக் ?
ஒருவேளை தெலுங்கில் எடுக்க திட்டமிட்டு கடைசி நேரத்தில் தமிழில் எடுக்க ஆரம்பித்து இருப்பார்களோ ?
முதல் பாதி பாஸ்கர்..மறுபாதி ராஸ்கல் !