ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ரவி, திரிஷா , பிரகாஷ் ராஜ் நடிப்பில் மக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் வசனத்தில் கதை திரைக்கதை எழுதி கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் பூலோகம் ..
படம் ஆகாயமா ? பாதாளமா? பார்க்கலாம் .
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வெள்ளைக்காரர்களால் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட — பாக்சிங் எனப்படும் — குத்துச்சண்டைப் போட்டி, வடசென்னையில் ஓங்கி வளர்ந்தது . பல்வேறு குழுக்கள் அல்லது தலைக்கட்டுகள் தனித்தனி அமைப்புகளாகக் குத்துச் சண்டையை வளர்த்தன .
அவற்றில் சென்னைக்கான குத்துச் சண்டை விதிகள் உலக அளவில் இருந்த விதிகளை விட சிறப்பானவை . கண்ணியமானவை . குறிப்பாக வடசென்னைக் குத்துச் சண்டை விதிப்படி முகத்தில் மட்டுமே அடிக்க வேண்டும் .
இந்தப் பின்னணியில் வரும் படமாக உருவாகி, ‘அடடே!’ என்று எடுத்த எடுப்பிலேயே சுவாரஸ்யம் கூட்டுகிறது பூலோகம்.
அப்படி பாக்சிங் தலைக்கட்டுகளாக விளங்கும் இரண்டு குழுக்கள் இரும்பு மனிதர் ராசமாணிக்கம் பரம்பரையும் நாட்டு வைத்தியர் ராமசாமி பரம்பரையும் !
இது விளையாட்டு என்பதையும் மீறி இங்கே ஜெயிப்பதும் தோற்பதும் மான அவமானப் பிரச்னையாகிறது.
நாட்டு வைத்தியர் பரம்பரையில் வந்த முனுசாமியை (பெசன்ட் நகர் ரவி ) இரும்பு மனிதர் பரம்பரையில் வந்த ஒருவர் பாக்ஸிங்கில் தோற்கடிக்க, அவமானம் தங்காத முனுசாமி தற்கொலை செய்து கொள்கிறார் . அவரது மகனான சிறுவன் பூலோகம் அனாதையாகிறான் .
அப்பாவைத் தோற்கடித்த இரும்பு மனிதர் பரம்பரையில் அடுத்து உருவாகும் குத்துச் சண்டை வீரனை தோற்கடித்து அவமானத்தைத் துடைக்க வேண்டுமே என்ற வெறியுடனே குத்துச்சண்டை கற்று வளர்ந்து இளைஞன் ஆகிறான் பூலோகம் (ஜெயம் ரவி )
ரத்தினம்(பொன்வண்ணன்) பூலோகத்தின் குத்துச் சண்டை குரு. ஓட்டல் நடத்தும் சிந்து (திரிஷா) பூலோகத்தின் காதலி.. நண்பன் ஆலயமணி (சாம்ஸ்)
பூலோகத்தின் தந்தை முனுசாமியை தோற்கடித்தவரின் மகன் ஆறுமுகம் (ஐ.எஸ்.ராஜேஷ்) இரும்பு மனிதர் பரம்பரையில் அடுத்த குத்துச் சண்டை வீரனாக வருகிறான் . அவனது குரு பாண்டியன் (சண்முகராஜன் )
பூலோகத்தை ஒப்பிடுகையில் ஆறுமுகம் குழு , குத்துச் சண்டையில் வெறியை கலக்காமல் , அதை போட்டியாக மட்டுமே பார்க்கும் கண்ணியத்தோடு இருக்கிறது . ஆனால் ஆறுமுகத்தை தோற்கடிப்பது மட்டுமல்லாமல் குத்துச் சண்டை மேடைக்குள் ஆறுமுகத்தைக் கொல்ல வேண்டும் என்பதே பூலோகத்தின் நோக்கம்.
இந்த நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் அதிபரான தீபக் ஷாவுக்கு (பிரகாஷ் ராஜ்) ‘ஏதாவது வித்தியாசமான நிகழ்ச்சி நடத்தி தன் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை பிரம்மாண்டமாக உயர்த்த வேண்டும் என்ற ஆவேசம்.
அதன் மூலம் மக்களிடம் இருந்தும் விளம்பர நிறுவனங்கள் மூலமும் கோடி கோடியாக சம்பாதித்து உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவனாக உயர வேண்டும் என்ற பேராசை .தனது சேனலை உலக அளவிலும் கடைவிரிக்கச் செய்யவேண்டும்’ என்பது தீபக் ஷாவின் பண வெறி .
தீபக் ஷாவுக்கு வட சென்னையின் குத்துச் சண்டைக் கலாச்சாரமும் பூலோகத்தின் கொலை வெறியும் தெரிய வர , அந்தப் போட்டியை மக்களின் வெறி உணர்சியையும் தூண்டும் வகையில் பிரபலப்படுத்தி அதன் மூலம் விளம்பர நிறுவனங்களை ஈர்த்து பணம் அறுவடை செய்ய திட்டமிடுகிறான் .
பூலோகம் , ஆறுமுகம் இருவரும் ஒளிபரப்புக்கு ஒத்துக் கொள்ள, இந்த இரண்டு குழு நபர்களுக்கும் இரண்டு பகுதி மக்களுக்கும் இடையே போட்டிக்கு முன்பாக நடக்கும் அடிதடி சண்டைகளை எல்லாம் கூட படம் பிடித்து ‘புரோமோ’ போல ஒளிபரப்பி எதிர்பார்ப்பை ஏற்றி விடுகிறான் தீபக் ஷா .
இந்த போட்டியில் வெற்றி பெறுபவன் இந்தியாவின் குத்துச் சண்டை சாம்பியனான குரு தயாள் (அர்பித் ரங்கா) உடன் மோதுவான் என்று அடுத்த போட்டியை அறிவித்து வியாபாரத்தை வளர்த்துக் கொண்டு பணத்தில் கொழிக்கிறான் அவன்.. ஒரு அறிமுக நிகழ்ச்சியில் குருதயாளையும் பூலோகம் அவமானப்படுத்துகிறான் .
கொந்தளித்த குரு தயாள் ஆறுமுகத்திடம் பூலோகத்தை உன் கையால் கொன்னுட்டு வெட்டி வீரனா என்னுடன் மோத வா” என்று சொல்கிறான் .
ஆறுமுகத்தை தோற்கடிப்பது மட்டுமின்றி மேடையிலேயே அடித்துக் கொல்லும் வெறியில் பூலோகம் இருப்பதை அறிந்த ஆறுமுகத்தின் மனைவி ஸ்டெல்லா, பூலோகத்திடம் வந்து கெஞ்சியும், தனது கொலை முடிவில் உறுதியாக இருக்கிறான் பூலோகம்.
போட்டியில் பூலோகம் வெல்கிறான். அவன் அடித்த அடியில் ஆறுமுகம் சாகவிட்டாலும் உயிராபத்துக்கு உள்ளாகி படுத்த படுக்கையாகிறான். .
ஆறுமுகம் இறந்தால் அவன் பிள்ளையும் சிறுவயதில் தன்னைப் போலவே அனாதாயாகும் என்பது பூலோகத்துக்கு அப்போதுதான் புரிகிறது . வெறி தணிகிறது . ஆறுமுகத்தின் நிலைமைக்கு தான்தான் காரணம் என்பதை உணரும் பூலோகம், குத்துச் சண்டையில் இருந்தே விலகுகிறான் .
மூட்டை தூக்கும் வேலை , ஹோட்டல் வேலை , கல்லூரிக் கேண்டீன் சர்வர் வேலை எல்லாம் செய்து பணம் திரட்டி ஆறுமுகத்தின் சிகிச்சைக்கு உதவுகிறான் .
பூலோகம் விலகிக் கொண்டதால் போட்டி தடைபட, தொலைக்காட்சி அதிபர் தீபக் ஷாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு, வருவாய் வரும் வழி தடைபடும் என்ற நிலை . அவன் பூலோகம் மீது கொலை வெறியாகிறான். பூலோகத்தை மீண்டும் மேடைக்கு கொண்டு வந்து வீழ்த்த வேண்டும் என்று குருதயாளும் துடிக்கிறான் .
இருவரும் திட்டமிட்டு வலை விரித்து பூலோகத்தை சீண்டி அவனை மேடை ஏற்றுகிறார்கள். மேடையில் பூலோகம் வென்றாலும் சென்சேஷனலுக்காக குருதயாள் வென்றதாக அறிவிக்க வைக்கிறான் தீபக் ஷா .
குரு தயாள் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும்போதுதான் அவனது தலையில் பேரிடி விழுகிறது .
மேலும் இந்தப் போட்டியை வளர்த்து மேலும் உலக அளவில் தனது தொலைக்காட்சியை ஒளிபரப்பி பிரபலமாக்கி டாலரிலும் ஈரோவிலும் பணம் அள்ள நினைக்கும் தீபக் ஷா ஒரு முடிவெடுக்கிறான் .
அந்த முடிவு குரு தயாளையும் அவனது குடும்பத்தையுமே குலை நடுங்க வைக்கிறது. அப்புறம் என்ன நடந்தது என்பதே பூலோகம் .
முதலில் எல்லோரும் ஒருமுறை மானசீகமாக பூலோகம் குழுவினருக்கு கைதட்டல்களை வழங்கி விட்டு அப்புறம் தொடர்வோம் .
அருமை. சிறப்பு . வெகு சிறப்பு !
குழந்தைகள் கலந்து கொள்ளும் பாடல் ஆடல் நிகழ்ச்சிகளில் பரிசு பெறாத குழந்தைகள் அழுவதையும் குலைவதையும் நொந்து போவதையும் ஸ்லோ மோஷனில் எடுத்து, நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பு அடிக்கடி போட்டுக் காட்டி அதன் மூலம் பரபரப்பைக் கூட்டி, சில பல தொலைக்காட்சிகள் விளம்ப வருமானம் கூட்டிக் கொள்வதில் குறியாய் இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?
இப்படிக் காட்டுவதன் மூலம் சம்மந்தப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகளின் மன நிலையில் அது ஏற்படுத்தும் அநியாய பாதிப்புகளின் மீதான தார்மீகக் கோபத்தில் ஆரம்பிக்கிறது இந்தப் படத்தின் முதல் புள்ளி .
அந்த புள்ளி கோடுகளாய் விரவி உருவமாய் விரியும்போது போது , விளையாட்டுகளை இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புகள் சீரழிக்கும் விதம், தைக்கும்படி சொல்லப்படுகிறது .
தொலைக்காட்சி ஒளிபரப்புகள் வருவதற்கு முன்பு விளையாட்டுகள் கம்பீரமாக இருந்தன. விளையாடுபவர்கள் வீரர்களாக இருந்தனர். ஆனால் இந்த ஒளிபரப்புக் கண்ணிக்குள் சிக்கிய பிறகு விளையாட்டுகள் எல்லாம் சர்க்கஸ் ஆகிப் போயின . வீரர்கள் எல்லாம் கோமாளி ஆகிப் போனார்கள். விளம்பரங்களை சுமக்கும், உயிருள்ள – நகரும் – பலகையாக ஆனார்கள்
எழவு அது கூட போய்த் தொலையட்டும். ஆனால் அந்த போட்டிகளின் விளம்பரத்தில் காட்டப்படும் பொருட்கள் மக்களின் மூளைக்கும் திணிக்கப்படுவதால், பாரம்பரியமான தரமான பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்தை விடுத்து தரமில்லாத அல்லது நமது மரபணுவுக்கு ஒவ்வாத பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள்….
அதில் நாம் இழக்கும் பணம் , அழியும் மண்ணின் மைந்தர்களின் வியாபாரம்…
முக்கியமாக நமது சிறப்பான உருவ அடையாளங்களை நாமே குறையாக நினைத்து மனோ ரீதியாக தன்னம்பிக்கை இழந்து தேவை இல்லாத அவமான உணர்ச்சியில் குன்றிப் போவதால் ஏற்படும் வாழ்வியல் பின்னடைவுகள் …
இப்படி இந்தப் படம் பேசும் விசயங்கள் பாராட்டி வாழ்த்தி போற்றி வணங்குதலுக்குரியவை .
இப்படி நாம் இந்தப் படத்தைக் கொண்டாடும் அளவுக்கு உயர்த்திய விதத்தில் ஆகப் பெரும்பங்கு, வசனம் எழுதி இருக்கும் மக்கள் இயக்குனர் எஸ் பி ஜனநாதனுக்குப் போகிறது .
“நாங்க எங்க ஊரு நாட்டு மருந்தை சாப்பிட்டுட்டு உடம்ப தேத்தி ஜெயிப்போம் . ஆனா நீங்க உருப்படாத வெளிநாட்டு மருந்தை கையில கொடுத்து இதனால்தான் ஜெயிச்சோம்னு பேச வச்சு விளம்பரப்படம் எடுக்க வைப்பீங்க . எங்க பாரம்பரிய மருந்தும் அழியும் . நீங்க காட்டுற குப்பைகளை சாப்பிட்டு எங்க மக்களும் அழியுவாங்க .
அப்புறம் ஒரு கிரீமை கொடுத்து இதை பூசிக்கிட்டா சிவப்பாகலாம் னு சொல்வீங்க . ஆமா…. எங்க அப்பன் கருப்பு… ஆத்தா கருப்பு . எங்க ஜனங்களும் கருப்பு. நான் ஏன் சிவப்பாகணும்? ?’’
-என்ற ஒரு படச் சோற்றுக்கு ஒரு வசன பதம் போதும், இந்தப் படம் நம்ம சமூகத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்த!
தலை தாழ்த்துகிறோம் தோழர் !
அடுத்து… அன்பு முத்தம், ஜெயம் ரவி . இந்தப் படத்துக்காக நீங்கள் போட்டிருக்கும் உழைப்பு பிரம்மாண்டப் பிரம்மாதமானது .
நிஜமான குத்துச் சண்டை வீரனுக்கான உடம்பைக் கட்டியமைத்ததாகட்டும்… வட சென்னைக் குத்துச் சண்டை வீரனின் உடல் மொழிகளை நடனம் மற்றும் இயல்பில் கைக்கொண்டதாகட்டும்… உதடுகளால் அல்லாமல் மொத்த உடலாலும் வசனங்களை உணர்ந்து பேசியதாகட்டும்….
ஒரு நிஜ குத்துச் சண்டை வீரனுக்கு இணையாக, பயிற்சிகளில் உயிர்ப்புடன் இருப்பதை நடிப்பில் காட்டியதாகட்டும் … அற்புதம் ரவி .
வாழ்த்துகள் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் !
இவ்வளவு விஷயங்கள் பேசும் படத்தை பிரச்சார நெடிக்குள் முக்கி எடுக்காமல் பரபரப்பான வேகமான திரைக்கதை, வட சென்னை பாக்ஸிங் வரலாறு, கிளாமர் காதல் , செண்டிமெண்ட், மண் தன்மை இவற்றை சிறப்பாகக் கலந்து மேக்கிங்கிலும் அசத்தி இருப்பதற்காக !
சும்மா ‘பூலோகம் மேடை ஏறினான் கோடம்பாக்க சினிமா விதிகளின்படி பாக்ஸிங்கில் அடித்து வீழ்த்தினான்’ என்று இல்லாமல் பூலோகத்துக்கு பாரம்பரிய முறைப்படி பாண்டியன் பயிற்சி கொடுக்கும் காட்சிகளும் , விஞ்ஞான முறைப்படி சிந்து தரும் பயிற்சி உபகரணங்கள் பற்றிய காட்சிகளும் … மேற்கத்திய விஞ்ஞானத்தை பாரம்பரிய விஞ்ஞானம் மிஞ்சும் காட்சிகளும் …
இந்தப் படததுக்காக கல்யாண கிருஷ்ணன் பாக்ஸிங் பற்றிய ஓர் ஆராய்ச்சியே நடத்தி இருப்பது புரியும்போது மனதின் விழிகள் விரிகின்றன.
ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸைஸ்டீவன் ஜார்ஜ் என்ற கேரக்டரில் இறக்கி அவரை சாவுக் குத்தாட்டம் ஆட வைப்பது போன்ற காட்சிகளில் ‘கமர்ஷியல் கண்மணி’யாகவும் விகசிக்கிறார் கல்யாண கிருஷ்ணன் .
பாடலில் கோட்டை விட்டிருந்தாலும் பின்னணி இசையில் கிளவுஸ் மாட்டி விளையாடி இருக்கும் ஸ்ரீகாந்த் தேவா,
குத்துச் சண்டைக் காட்சிகளிலும் பயிற்சிக் காட்சிகளிலும் பஞ்ச கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்,
மிரட்டும் பிரகாஷ்ராஜ் , மினுக்கும் திரிஷா , பாந்தமான பொன்வண்ணன் , பக்குவமான சண்முகராஜன் , சலம்பும் சாம்ஸ், ரவுசு காட்டும் ரவி மரியா என்று எல்லோரின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது .
கதாபாத்திரங்களின் கெட்டப் செட்டப் எல்லாம் சரியாக இருந்தாலும் பின்னணியில் வட சென்னை வரவே இல்லை. மசானக் கொள்ளை காட்சி வந்துதான் கொஞ்சமாக நம்ப வைக்கிறது .
குத்துச் சண்டையில் ஊறிய பூலோகம்… ஸ்டெல்லா கெஞ்சிய போதும் ‘போடி’ என்று திட்டி விரட்டிய பூலோகம்…
ஆறுமுகம் உயிராபத்துக்கு ஆளான போது மட்டும் ஃபாஸ்ட் கட்டிங்கில், ஞானோதயம் பெற்று கூலி வேலைக்கும் காட்சிகள் எல்லாம், சொல்லப்பட்ட விதத்தில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது
முகத்தைத் தவிர வேறு எங்கும் அடிக்காத கண்ணியத்தால் உலகளாவிய குத்துச் சண்டையை விட மேன்மையானது வடசென்னைக் குத்துச் சண்டைக் கலாச்சாரம் என்று ஆரம்பத்தில் கெத்து காட்டிவிட்டு , கிளைமாக்சில் அதை மீறுவது போங்கு மாமே !
நாதன் ஜோன்ஸ் , ஜெயம் ரவி உயர வித்தியாசத்தில் அதுதான் சாத்தியம் என்றால், உலகக் குத்துச் சண்டை விதிகளின்படி அல்லையில் அடிக்கச் சொல்லும் பயிற்சியாளர் பாண்டியன், அந்தக் காட்சியிலும் வட சென்னைக் குத்துச் சண்டைக் கலாசாரத்தை தொடர்புப்படுத்தி ஒரு வார்த்தை பேசி இருக்க வேண்டாமா ?
பூலோகம் திருப்பூர்க் குமாரனாக வருவது போல எடுத்தீங்களே .. படத்தில் அது இல்லையே ?
இந்தப் படத்தில் இருந்து நீக்க வேண்டிய விசயமா அது ?
இப்படி சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் …
வெகு ஜன மக்களின் பொழுது போக்கு மன நிலையை பயன்படுத்தி அவர்களை எமோஷனல் மந்தைகளாக மாற்றி பல அழிவுகளுக்கும் ஆளாக்கி கோடி கோடிகளாக பணம் குவிக்கும் வியாபார முதலைகளின் நரித்தனத்தை
வலை போட்டுப் பிடித்து , உரித்து ஊற வைத்து உப்புக் கண்டம் போட்டு காய வைத்த கம்பீரத்தில்
பூலோகம் … பிரபஞ்சம் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————————————
எஸ்.பி.ஜனநாதன், ஜெயம் ரவி, கல்யாண கிருஷ்ணன்.