தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டின் மிக சந்தோஷமான குடும்பம் எது என்றால் அது எடிட்டர்- தயாரிப்பாளர் மோகன், அவரது மூத்த,மகன் இயக்குனர் மோகன்ராஜா , இளைய மகன் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் அடங்கிய குடும்பம்தான் .
வெற்றிப்பட இயக்குனராக அறியப்பட்டாலும்…கூடவே, ரீமேக் படங்கள் மூலம் மட்டுமே வளர்ந்தவர் என்று அறியப்பட்ட இயக்குனர் ஜெயம் ராஜா , தந்தையின் பெயரை தன்னோடு சேர்த்துக் கொண்டு மோகன் ராஜாவாக மாறி, சொந்தக் கதை வசனத்தில் தனி ஒருவன் படத்தை, நாளைய சினிமா என்று கொண்டாடப்படும் படமாகக் கொடுத்து அசத்தினார் .
அந்தப் படத்துக்கு முன்பே ரோமியோ ஜூலியட் மூலம் வெற்றிக் கனியைத் தொட்டிருந்த ஜெயம் ரவி, தனி ஒருவன் படத்தின் மூலம் புத்தம் புதிதாய்ப் எழுந்த நடிகனாக அற்புதமான அசத்தினார் .
தனி ஒருவன் படம் கூட ஜெயம் ரவி இல்லாவிட்டாலும் வெற்றி பெற்று இருக்கும்.
ஆனால் பூலோகம் படம் ?
ஜெயம் ரவி, வசனம் எழுதிய இயக்குனர் எஸ் பி ஜனநாதன் , இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இவர்களில் யார் ஒருவர் இல்லாது போயிருந்தாலும், பூலோகம் இப்படி ஒரு விஸ்வரூபப் படமாக வந்திருக்க வாய்ப்பே இல்லை .
அதே நேரம் ஒரு நடிகனாக பூமி உருண்டையை சுமந்த ஹெர்குலிஸ் போல, பூலோகம் படத்தை தூக்கி சுமந்து இந்த வெற்றியை உருவாக்கி இருந்தார் ஜெயம் ரவி.
ஒரு தகப்பனுக்கு இதை விட வேறென்ன சந்தோசம் இருக்க முடியும் ?
2015 ஆம் ஆண்டின் ஹாட்ரிக் வெற்றி ஹீரோவான ஜெயம் ரவி , தனது தந்தை எடிட்டர் மோகன், மாமனார் விஜயகுமார் , ரோமியோ ஜூலியட் இயக்குனர் லக்ஷ்மணன், அண்ணனும் தனி ஒருவன் இயக்குனருமான மோகன் ராஜா, பூலோகம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் , ஒளிப்பதிவாளர் சதீஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மகிழ்ந்து நெகிழ்ந்தார். நெகிழ்ந்து மகிழ்ந்தார்.
உடன் ரவியின் மாமியார், மனைவி , தாயார் மற்றும் மேக்கப் மேன் , பாக்சிங் கற்றுக் கொடுத்த நண்பர் ஆகியோரும் !
எஸ் பி ஜனநாதன் மட்டும் மிஸ்ஸிங் . (ஏன் தோழர்?)
மிக திறந்த மனதோடு பேசிய எடிட்டர் மோகன் ‘’தனி ஒருவன் படம் வெளியானபோது, என்னிடம் பேசிய திரையுலக நண்பர்கள் ராஜாவை பாராட்டி விட்டு , ‘இப்படிப்பட்ட அறிவாளி பிள்ளையை இதுவரை ரீமேக் படம் எடுக்க விட்டு விட்டாயே…’ என்று என்னை திட்டுவார்கள்.
இப்போது ரோமியோ ஜூலியட்டில் துவங்கி , தனி ஒருவனில் தன்னை நிரூபித்து பூலோகம் படம் மூலம் ரவி உயர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது , நான் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை .
ராஜா எனக்கு ஒரு சிம்மாசனம் அமைத்துக் கொடுத்தான் . ரவி எனக்கு ஒரு மகுடமே சூட்டி விட்டான் .
ரோமியோ ஜூலியட் படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், தனி ஒருவன் கல்பாத்தி அகோரம் . பூலோகம் ரவிச்சந்திரன் அனைவருக்கும் நன்றி “ என்றார் .
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது ‘’ நான் எப்போது மேடை ஏறும்போதும் ‘ஜெயிக்கறோம்’ என்று சொல்வது வழக்கம். அதற்கு காரணமே மோகன் சார்தான். எம் குமரன் படத்தில் இசை அமைக்கப் போனபோது அவர்தான் அந்த வார்த்தையை முதன் முதலில் என்னிடம் சொன்னார் . அந்தப் படம் விருதுகளை குவித்தது போல பூலோகம் படமும் குவிக்கும் “ என்றார் .
ஒளிப்பதிவாளர் சதீஷ் பேசும்போது
“ ஜெயம் ரவியின் பின் பக்கமாக இருந்து தோள்பட்டை வழியே எதிரில் உள்ளவரின் முகம் காட்டும்படியான (சஜஷன் அல்லது ஓ எஸ் எஸ் ) ஷாட் வைக்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. காரணம், பூலோகம் படத்தின் பாக்சர் கேரக்டருக்காக, தோள்பட்டை புடைத்து விம்மி உயர்ந்து நிற்கும் அளவுக்கு, உடலை ஜெயம் ரவி பலப்படுத்தி இருந்தார் “ என்றார் .
விஜயகுமார் தன் பேச்சில் “ மிக சந்தோஷமான தருணம் எனக்கு இது . மிக சிறந்த வெற்றி இது . இதைத் தக்க வைத்துக் கொண்டு ரவி இன்னும் முன்னேற வேண்டும்” என்றார்
‘’ நான் இயக்கிய ரோமியோ ஜூலியட் படத்தின் கேரக்டருக்கு ஏற்றபடி தன்னை மெருகேற்றி இருந்தார் . படத்தின் வெற்றிக்கு அவரது தோற்றமும் நடிப்பும் முக்கியக் காரணம். தனி ஒருவன் படத்துக்கு வேறு மாதிரி வந்தார்.
பூலோகம் படத்தில் வேறு ஒரு ஆளாக இருக்கிறார் . இனி ஜெயம் ரவி சார் இன்னும் பெரிய உயரங்களை தொடுவார் “ என்றார் லக்ஷ்மணன்.
இந்த நிகழ்ச்சிக்குக் காரணமான , பூலோகம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் பேசும்போது
“ படத்துக்கு ரவி கொடுத்த ஒத்துழைப்பையும் உழைப்பையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. படம் முடிந்த வெளியாக தாமதமான போது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ரவியும் மோகன் சாரும் கொடுத்தார்கள் . இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் எனது குருநாதர் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சாரின் வசனங்கள். அவை இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை “ என்றார் .
எடுத்த எடுப்பிலேயே அம்பு விட்டார் இயக்குனர் மோகன் ராஜா
“ அண்ணன் எடுக்கற படங்கள் மூலம்தான் ஜெயம் ரவி சினிமாவுல இருக்காரு’ அப்படின்னு எல்லோரும் சொல்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். இன்னிக்கு அவன் வெளி டைரக்டர் படங்கள்ல சுயமா ஜெயிக்க ஆரம்பிச்சுட்டான் . இதை விட எனக்கு வேற சந்தோஷமே இல்லை ..
ஜெயம் படத்தின் மூலம் நானும் ரவியும் சினிமாவுக்கு வந்த இந்த 12 வருடங்கள்ல வெற்றி தோல்வி பாராட்டு கிண்டல் எல்லாம் பார்த்துட்டோம் . அதுவும் ரவிக்கு கொஞ்சம் அதிகம் தோல்விகள் . ஆனால் அவன் மனம் தளர்ந்ததே இல்லை.
உண்மையில் ஜெயம் ரவி ரொம்ப தனித்தன்மையானவன் . எதையும் திட்டமிட்டு செய்வான். முறைப்படி செய்வான் அது எங்களுக்கு எப்பவோ தெரியும். ஆனா இன்னிக்குத்தான் அது வெளிய தெரிய ஆரம்பிச்சு இருக்கு . அதுதான் எங்களுக்கு உண்மையான சந்தோசம். அவனுடைய எல்லா திறமைகளும் இனி வெளியே வரும்
எங்களை பாக்கறவங்க எல்லாம், ‘என்ன இது? ஜெயம் ரவி இவ்வளவு குண்டா இருக்காரு? பாக்கறதுக்கு நீங்க தம்பி மாதிரி இருக்கீங்க. அவர் உங்களுக்கு அண்ணன் மாதிரி இருக்காரு’ன்னு சொல்வாங்க . என்னை தம்பி மாதிரின்னு சொல்றதுக்காக நான் சந்தோஷப் பட முடியாது . அவனை குறையா சொல்றாங்களேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா அவன் ஏன் அப்படி இருந்தான் என்பதை இப்போ பூலோகம் படம் எல்லோருக்கும் சொல்லி இருக்கு ‘’ என்றார் .
சிறப்புரையாகப் பேச வந்த ஜெயம் ரவி , இயக்குனர் மோகன் ராஜா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை என்பதை நிரூபிக்கும்படியாக பேச ஆரம்பித்தார் .
“பிறந்து விவரம் தெரிஞ்ச பிறகு தம்பி மேல பாசம் வைக்கிற அண்ணன்கள் நிறைய உண்டு . ஆனா ஒரு தம்பி பிறந்தது முதலே பாசம் வைக்கிற அண்ணனா, என் அண்ணனை தவிர யாராலும் இருக்க முடியாது . அந்த வகையில் அவருக்கு அண்ணனாக என்னை மற்றவர்கள் நினைத்தபோது எனக்கு ஒரு வகையில் சந்தோஷம்தான் . நாமும் அந்த அளவுக்கு அவர் மேல் பாசம் வைப்போம் என்று .
பாசிட்டிவ் அப்ரோச் என்பது எங்க அப்பா எங்களுக்கு கற்றுக் கொடுத்த முக்கியப் பாடம் .
பூலோகம் படத்தின் கதையை எங்களிடம் கல்யாண கிருஷ்ணன் சொன்னபோது அப்பா , அண்ணன் இருவரும் கூட ‘ ரவி.. இது ரொம்ப கஷ்டமான கேரக்டர்.’ யோசிச்சு ஒத்துக்கோ’ன்னு சொன்னாங்க . ‘பரவால்ல கஷ்டபடுறேன்’னு சொல்லி ஒத்துக்கிட்டேன்.
கல்யாண கிருஷ்ணன் பிரம்மாதமா படத்தைக் கொண்டு வந்தார் . இந்தப் படத்தின் வெற்றிக்கு எங்க டைரக்டர் – எனக்கு பேராண்மை கொடுத்த இயக்குனர் ஜனநாதன் சாரின் வசனங்கள் முக்கியக் காரணம். இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம் .
பொதுவா என் மனைவி என் படங்களை பார்த்துட்டு ஜெனரலா நல்லா இருக்கு இல்லன்னு சொல்வாங்க . ஆனா இந்தப் படத்தை பார்த்ததும் என்னை ரொம்ப வித்தியாசமா பார்த்து ‘ இந்தப் படத்துல வர்றது நிஜமாவே நீதானா?’’ன்னு ஆச்சர்யமா கேட்டாங்க . அது என்னால் மறக்க முடியாத அனுபவம் . அப்பவே இந்தப் படம் என்னவோ பண்ணப் போகுதுன்னு நினைச்சேன் .
இந்த வருடம் எனக்கு இந்த மூன்று படங்கள் மட்டுமல்ல . அப்பாடக்கர் படமும் நல்ல படம்தான் . அதுவும் என் மனசுக்கு நெருக்கமான படம்தான் . அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு நிறைய உதவி பண்ணினாங்க.
இந்த வருடம் லக்ஷ்மணன் , கல்யாண கிருஷ்ணன்னு ரெண்டு புது டைரக்டர்களோட சேர்ந்து ஜெயிச்சு இருக்கேன் என்பது எனக்கு உண்மையிலேயே ரொம்பப் பெருமையா இருக்கு.
ரோமியோ ஜூலியட் டைரக்டர் லக்ஷ்மணன் படத்தில் நடிக்கிறேன் . கல்யாண கிருஷ்ணனுக்கும் கால்ஷீட் தரக் காத்திருக்கேன் . அப்புறம் அண்ணன் இருக்கவே இருக்காரு .
நல்ல படங்களுக்காக இன்னும் எவ்வளவு வேண்ணாலும் கஷ்டப்பட நான் தயாரா இருக்கேன் . ஏன்ன எனக்கு கஷ்டப்படுறது ரொம்ப பிடிக்கும் ‘’ என்றார் ஜெயம் ரவி .
ஜெயம் ரவியிடம் நான்.
’’சென்ற தலைமுறைவரை சினிமாவில் இயக்குனர்கள் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் அதிகம் உடல் உழைப்பைக் கொடுப்பார்கள் . ஹீரோவாக இருப்பது ஜாலியாக இருக்கும் .
ஆனால் இப்போது பூலோகம் படத்தில் நீங்கள், ஈட்டி படத்தில் அதர்வா ஆகியோர் கொடுக்கும் உழைப்பைப் பார்த்தால், இனி ஹீரோக்கள்தான் அதிகம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி இருக்கும்போல இருக்கிறது .இதை எப்படிப் பார்க்கிறீர்கள் ?’’ என்று ஒரு கேள்வி கேட்டேன்.
“ஏன் சார் … கமல் சார் படாத கஷ்டமா ? அவர்தான் இதை எல்லாம் ஆரம்பித்தார் . ஆனா நீங்கள் சொல்வது போல இனி நடித்து எல்லாம் கவர முடியாது. கேரக்டருக்காக நிறைய மாறனும் .
உதாரணமா , இயல்பா நான் சிவப்பு . ஆனா பூலோகம் படத்துல ‘ ஏன் சிகப்பா மாறணும்? நான் கருப்பு . என் ஜனங்க எல்லாம் கருப்பு’ன்னு ஒரு வசனம் பேசணும். சும்மா கறுப்புக் கலரை பூசிக்கிட்டு அதை நடிச்சா போதாது அதுக்கு ஆளும் மாறணும் . நீங்க சொல்ற மாற்றம் நல்ல விசயம்தான் “ என்றார் ரவி.
மீடியாக்கள் முன்னால் பல்வேறு சினிமா பிரபலங்களும் இப்படி மனப்பூர்வமாக பேசிய ஒரு நிகழ்வும் கூட, பூலோகம் படம் செய்த சாதனை என்று சொல்லலாம்.