மும்பை நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா நடத்தும் தொலைக் காட்சி பிக் டீல் டிவி (Big Deal TV). முழுக்க வீட்டு உபயோகப் பொருட்கள் ஷாப்பிங் பற்றி மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சேனல் இது. பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் இதில் பங்குதாரர்
‘நம்ம ஊரில் பெரிதாக கல்லா கட்ட முடியாத டிவிக்கள் எல்லாம் பெரும்பாலும் இந்த வேலைதானே செய்கின்றன?’ என்று கேட்கலாம் . உண்மைதான்! ஆனால் இந்த பிக் டீல் டிவியில் பொருட்களை அறிமுகப்படுத்திப் பேசுபவர்கள் , டி வி சீரியலில் கூட வாய்ப்பு கிடைக்காத நடிகர்கள் அல்ல, பாலிவுட்டின் பெரிய பெரிய மாஸ் ஹீரோக்கள். ஜில்லோ நடிகைகள் மற்றும் கனவுக் கன்னிகள்.
எனவே பல்வேறு பொருட்களைப் பற்றி அவர்கள் பேசும்போது அதன் மரியாதையே தனி. தவிர அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருட்கள் பற்றியும் பேசுவார்கள். (எல்லாம் ஒரு பிக் டீலிங் உடன்தான் !)
ஆரம்பித்து ஆறு மாத காலமே ஆன இந்த பிக் டீல் டிவி இப்போது இதே கான்செப்டோடு அதே பெயரோடு தமிழ் நாட்டிலும் கால் பதிக்கிறது . . அதே ராஜ் குந்த்ரா, அதே அக்ஷய் குமார் இவர்களுடன் இந்த தமிழ் நாட்டு பிக் டீல் டிவியில் பார்ட்னராக இணைகிறார் நம்ம சீயான் விக்ரம் !
ஜூன் 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பைத் துவங்கும் இது ஒரு இலவச சேனல். இதில் தமிழ் நாட்டு பிரபல நடிக நடிகையர் பல்வேறு பொருட்களை அறிமுகப்படுத்தி அவற்றின் தரம் மற்றும் பயன் பற்றிப் பேசுவார்கள்,
இதன் அறிமுக விழாவுக்காக சென்னை வந்து இருந்தார்கள் ராஜ் குந்த்ராவும் அக்ஷய் குமாரும் .
“எட்டு வருடம் கழித்து சென்னை வருகிறேன் ” என்று ஆரம்பித்த அக்ஷய் ” இப்போது சென்னை ரொம்ப அழகாக இருக்கிறது . முன்னேறி இருக்கிறது ” என்றார் .
“இந்த டிவியில் வீட்டு உபயோகப் பொருட்கள், உடை , உடல் நலம் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் பற்றி விளக்கும் நிகழ்ச்சிகள் வரும் .” என்று , ராஜ்குந்த்ரா அறிமுகம் தந்தார் .
சேனலின் தலைமை நிர்வாக அதிகாரி கவுரவ் கர்க் “இது ஒரு 24 மணி நேர சேனல். . 999 ரூபாய் முதல் 8999 மதிப்பு வரையிலான பொருட்கள் இங்கே மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் ” என்றார் .
இந்த பெஸ்ட் டீல் டிவி பற்றி பேசிய சீயான் விக்ரம் ” இந்த டி வி யில் நம் தமிழ் சினிமா பிரபலங்கள் தோன்றி ஒவ்வொரு பொருளையும் பற்றிப் பேசுவார்கள், நம் நாட்டு பொருட்கள் அதிகம் புரமோட் செய்யப்படும். தரமில்லாத பொருட்கள் வராது ” என்றார் .
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா ” எந்த தமிழ் ஹீரோவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் ?” என்று அக்ஷயிடம் கேட்க, “இதோ இந்த விக்ரமுடன்தான். எங்களில் (மும்பை நடிகர்கள்) பலருக்கும் அவரை ரொம்ப பிடிக்கும் ” என்று கூற ,
“எனக்கும் அக்ஷையுடன் நடிக்க ஆசை ” என்று விக்ரம் கூற ,
உடனே மேடையிலேயே ” அதை நான் தயாரிக்கிறேன் ” என்று ராஜ் குந்த்ரா கூற ….
அட, இது பெஸ்ட் சினிமா டீல் மாமே !