ஜே கே பிலிம் புரடக்ஷன்ஸ் சார்பில் கே சி பிரபாத் தயாரிக்க, ஆர் கே சுரேஷ், இந்துஜா, சாந்தினிதமிழரசன், , தம்பி ராமையா , மாரி முத்து , சங்கிலி முருகன் நடிப்பில்,
எம் எம் எஸ் மூர்த்தியின் கதை திரைக்கதை வசனத்தில், ராஜ் சேதுபதி இயக்கி இருக்கும் படம் பில்லா பாண்டி . இந்த பாண்டி தில்லா ? இல்லை டல்லா? பார்க்கலாம் .
தலைமைக் கொத்தனார் ( தம்பி ராமையா) தலைமையில் இயங்கும் கொத்தனார் இளைஞனும் ,
பில்லா அஜீத் ரசிகர் மன்றத் தலைவனுமானவன் பாண்டி( ஆர் கே சுரேஷ்) . பாண்டிக்கு சில நண்பர்கள் .
தொழிலில் வரும் வருமானத்தை பலருக்கு உதவி செய்ய பயன்படுத்துகிறான் பாண்டி. தவிர ஊருக்கு நல்லது செய்வது ,
சாதி மறுப்புக் காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பது என்று பல உப வேலைகளும் உண்டு .
அத்தை மகளுக்கு (சாந்தினி) பில்லா பாண்டி மீது காதல் . இவனுக்கும் ! ஆனால் பாண்டியின் ஊதாரித்தனம்
மற்றும் அடாவடி பேச்சு காரணமாக பெண் தர மறுக்கிறார் மாமா ( மாரி முத்து )
தூக்கிக் கொண்டு போய் தாலி கட்டுவேன் என்று அவரிடம் சபதம் விடுகிறான் பாண்டி .
பக்கத்து ஊர்ப் பெரிய மனிதரின் ( சங்கிலி முருகன்) பேத்திக்கு ( இந்துஜா) கொத்தனாராக இருந்து வீடு கட்டித் தருகிறான் பாண்டி .
பாண்டியின் நற்குணங்களால் கவரப்படும் அந்தப் பெண் பாண்டியை ஒரு தலையாகக் காதலிக்கிறாள்.
கிரகப் பிரவேச சமயத்தில் அந்தப் பெண்ணின் தந்தை தனது நண்பனின் மகனை மாப்பிளையாக அறிவிக்க, தான் பாண்டியைக் காதலிப்பதை சொல்கிறாள் அந்தப் பெண் .
பெண்ணின் தந்தை பாண்டியை அவமானப் படுத்தி அனுப்புகிறார் .
பெண்ணை அழைத்துக் கொண்டு அவசர திருமணத்துக்கு அவர் காரில் பறக்க, பெண்ணோ கார்க் கதவை திறந்து கொண்டு குதிக்க,
கார் விபத்தில் சிக்கி மற்றவர்கள் இறக்க, அந்தப்பெண் தலையில் அடிபட்டு ஏழு வயதுக் குழநதையின் மனோ நிலைக்குப் போகிறாள் .
சோகத்தில் அந்த பக்கத்து ஊர்ப் பெரிய மனிதர் இறக்கிறார்.
தன்னை ஒருதலையாகக் காதலித்து விபத்தில் சிக்கி இப்போது மனோ நிலை தவறிய பெண்ணுக்கு அடைக்கலம் தருகிறான் பாண்டி.
வேலை செய்யப் போன இடத்தில் பெண்களிடம் தவறாக நடப்பவன் என்று பாண்டிக்கு அவப் பெயர் வர, வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகிறது .
மாமாவோ தன் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார் .
இந்த நிலையில் பாண்டியின் எதிரியும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் குணமும் உள்ள ஒருவன் ( தயாரிப்பாளர் கே சி பிரபாத்) ,
மனோ நிலை தவறிய பெண்ணிடம் தவறாக நடக்க முயல,
பாண்டி அந்த நபரை அடிக்க, அந்த நபர் கவலைக்கிடமாகிறாரன் . அவன் செத்துப் போனால் பாண்டி ஜெயிலுக்குப் போக வேண்டிய சூழல் .
அப்படி போய் விட்டால் ஊரே வெறுக்கும் அந்த மன நிலை தவறிய பெண்ணை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாத நிலை .
மனம் உடைந்த பாண்டி ஒரு விபரீத முடிவு எடுக்கிறான் . நடந்தது என்ன ? ‘அஜித்’ அவர்களுக்கு என்ன செய்தார் என்பதே படம் .
அஜித் ரசிகர்களாக மற்ற ஹீரோக்கள் நடிக்க, பல படங்கள் வந்துள்ளன . ஆனால் இந்த அளவுக்கு,
அஜித்தை கொண்டாடி ஒரு படம் வந்தது இல்லை . அந்த அளவுக்கு ஓர் அஜித் ஆராய்ச்சியே செய்து இருக்கிறார்கள்.
அந்தக் கால பேட்டி ஒன்றில் அஜித் நான் தமிழன் என்று சொன்னதை எல்லாம் தேடிப்பிடித்து பயன்படுத்தி இருக்கிறார்கள் .
அதே நேரம் அஜித் புகழ் பாடுவதையே பிரச்சாரமாக செய்யாமல் ஒரு கொத்தனாரின் வாழ்க்கை என்ற மண் மனம் சார்ந்த ஒரிஜினல் கதையில் அதை குழைத்துப் பூசிய விதம் அருமை .
அங்கேதான் படத்தின் மீது ஒரு மரியாதை வருகிறது . இன்னொரு பக்கம் அஜித் புகழ் பாடுவதை கதையோடு சேர்த்து அளவோடு செய்து இருக்கிறார்கள் .
“டேய்… நாங்க தலை ரசிகன் டா “
“டேய்… நாங்க அதுக்கும் மேல டா “
“டேய்…. தலைக்கும் மேல மசிருதான் டா இருக்கும் ”
— என்று எதிர் தரப்பை சீண்டும் அதே நேரம் ஒரு இடத்தில் அஜித்தையே கலாய்க்கும் அந்த நேர்மையும் ரொம்ப பிடிச்சிருக்கு .
“டேய் ஆடாம ஜெயிச்சோமடான்னு பாடுறீங்களே… நிஜத்தை சொல்லுங்கடா … ஆடாம ஜெயிச்சீங்களா ? இல்ல ஆடத் தெரியாதா ?”
படம் பார்த்தால் அஜீத்தே வாய் விட்டு சிரித்து விடுவார் .
இன்னொரு பக்கம் , மன நிலை பாதித்த பெண் காணமல் போவது, தேடிப்போன இடத்தில் ஒரு ரகளையான திருப்பம்,
அதை தொடர்ந்து நகைச்சுவை, அதில் இருந்து வில்லங்கம் , விபரீதம் என்று கதையை விட திரைக்கதை சிறப்பாக இருக்கிறது .
அதுவும் கிளைமாக்ஸ் ஏரியாவில் அடுத்தடுத்து வரும் சாட் சடார் திருப்பங்கள் அபாரம் .
அப்படி ஒரு சிறப்பான திரைக்தை வசனத்தை (கதையும் ) கொடுத்து இருக்கும்எம் எம் எஸ் மூர்த்தியும் அதை சரியாகப் பயன்படுத்தி ,
தன் பங்களிப்பை சரியாகக் கொடுத்து அழுத்தமாக இயக்கி இருக்கும் ராஜ் சேதுபதியும் பாராட்டுக்கு உரியவர்கள் .
அருமை ! சிறப்பு! சிவப்புக் கம்பள வரவேற்பு! வாழ்த்துப் பூங்கொத்து !
கிளைமாக்சில் கோதுமை பரோட்டாவை பாண்டி மன நிலை தவறிய பெண்ணுக்கு ஊட்டும் காட்சி கண்களில் கண்ணீர் வர வைக்கிறது .
முறைப்பெண் சம்மந்தப்பட்ட நெகிழ்ச்சியான காட்சிகள் நிஜத்தில் பார்க்கும் உணர்வை தந்து மனம் கனக்க வைக்கின்றன
இந்தக் காட்சிகளில் இயக்கத்தில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜ் சேதுபதி .
இயக்குனர் பாலாவால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டு , பின்னர் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த –
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ( ஸ்டுடியோ 9) ஆர் கே சுரேஷ் , இந்தப் படத்தில் அஜித் ரசிகராக , கொத்தனாராக , நேர்மைக்கு போராடும் மனிதராக ,
மனிதாபிமானியாக, தாயன்பு உள்ள ஆண் மகனாக உற்சாகமாக ரசித்து நடித்து இருக்கிறார் . ரசிக்கவும் வைக்கிறார்
சண்டைக் காட்சிகளில் பின்னிப் பெடல் எடுக்கிறார் . கால் அடிபட்டு விபத்தில் சிக்கி இருந்த நிலையிலும் நடனக் காட்சிகளில் சமாளித்து ஆடி இருக்கிறார் .
குரல் நடிப்பு சிறப்பாக வருகிறது . அருமை! சிறப்பு ! வாழ்த்துகள் ! பாராட்டுகள்! சிவப்புக் கம்பள வரவேற்பு ! வாழ்த்துப் பூங்கொத்து !
படத்தின் மிகப் பெரிய பலம் தலைமைக் கொத்தனாராக வரும் தம்பி ராமையாவின் நடிப்பும் அது தொடர்பான காட்சிகளும்தான் .
மனுஷன் பின்னிப் பெடல் எடுத்து இருக்காருய்யா ….அவ்வளவு அட்டகாசமான உற்சாகம் குறையாத நடிப்பு .
தனது பாணி வசனங்களாலும் அசத்துகிறார் தம்பிராமையா
குறிப்பாக ,, “அழகிய தமிழ் மகள் இவள். இவள் ஐயம் பேட்டை கொத்தனாரு மகள் … ரசித்தாள்.. ருசித்தாள்.. சிரித்தாள்.. சித்தாள் !”
கொத்தனார் சித்தாள் கிளுகிளுப்பு விசயங்களை கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் .
இரண்டே காட்சிகள் என்றாலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் விதார்த் சிறப்பு .
இந்துஜா சற்றே செயற்கையான நடிப்பை கொடுத்து இருக்க, (குளோசப்பில் முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம் அம்மணி!),
அவ்வளவு லைவ் ஆக நடித்து ஸ்கோர் செய்து விட்டுப் போகிறார் முறைப்பெண்ணாக வரும் சாந்தினி தமிழரசன் .
வில்லனாக நடித்து இருக்கும் கே சி பிரபாத் , துளியும் செயற்கையாக இல்லாமல் மிக இயற்கையாக உக்கிரமாக வலுவாக நடித்துள்ளதும் படத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று .
ஒரு பாடல் காட்சியில் எதிர்பாராமல் வந்து கொஞ்சம் ஆடி விட்டுப் போகிறார் சூரி
இளையவனின் இசையில் பாடல்கள் இனிமை . பின்னணி இசையும் சிறப்பு. காட்சிகளின் உணர்வுக் கூட்டலுக்கு உதவுகிறது இசை . வாழ்த்துகள் ! பாராட்டுகள்!
எளிமையே பலம் என்பதை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது ஜீவனின் ஒளிப்பதிவு .பாராட்டுகள்!
விபத்து , மண்டையில் அடிபடுதல், மன நிலை பாதிக்கப்பட்டு சிறுமியாதல், அந்த நோய்க்கு ஒரு பெயர் என்ற கதைப் போக்குதான் கொஞ்சம் இஸ்க்குது.
ஆனால் இயக்கம் மற்றும் திரைக்கதை- வசனத்தால் , நல்ல நடிப்பால் ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்தி அசத்தி விட்டார்கள் .
பில்லா பாண்டி ….. தளதள தல !