ஊடகம் மற்றும் நுண்கலை சார்ந்த பயிற்சி நிறுவனமான பிரிட்ஜ் அகாடமி நடத்திய ‘கலைச்சங்கமம் ‘ 2017 நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நேற்று நடை பெற்றது .
இலங்கையின் மாகாணக் கல்வி அமைச்சர் திரு ஜி.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் .
ராஜு மற்றும் மணிகண்டன் குழுவினரின் மங்கல நாதஸ்வர இசையுடன் கலைச்சங்கமம் நிகழ்ச்சிகள்தொடங்கின.
பிரிட்ஜ் அகாடமியின் இசையை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும், மறைந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இசையால் நினைவஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கிரேடு தேர்வில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்ற மாணவக் கலைஞர்களின் வாய்ப்பாட்டு , கீ போர்டு கச்சேரிகள் நடைபெற்றன.
இலங்கையிலிருந்து திருமதி ராகினி தலைமையில் வந்திருந்த கலைக்குழுவினர், ‘இலங்கையில் நவரசம்’ என்கிற நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ‘சதிர் நாடக கூத்தரங்கம்’என்ற பெயரில் தெருக்கூத்துக் கலையையும், பரத நாட்டியத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பாஞ்சாலி சபத நாட்டிய நாடகத்தை,
நாட்டிய குரு பேராசிரியர் சுமதி தலைமையில் ப்ரிட்ஜ் அகாடமியின் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் அரங்கேற்றினர்.
பிரிட்ஜ் அகாடமியின் மூலம் முதன்மை நிலைக்குத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்ற கலைஞர்களுக்கும் சான்றிதழ்களையும் கேடயங்களையும் வழங்கி,
சிறப்புரை ஆற்றிய இலங்கையின் மாகாணக் கல்வி அமைச்சர் திரு. ஜி.ராதாகிருஷ்ணன் பேசும்போது,
”நான் பிரிட்ஜ் அகாடமி முன்னின்று நடத்தும் இந்தக் கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிலும் குறிப்பாக இலங்கை கலைஞர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் நடனம், நாட்டியம்,நாடகத்தை அவதானிததுப் பார்த்தேன்.
அப்போது இலங்கை மக்களின் கடந்தகாலத் துயரம், இடைப்பட்ட கால நிலைமையான மது, புகை அடிமை நிலை, பிறகு சூழல் மாறி புத்துயிர் பெற்று வரும் தற்போதைய நல்ல நிலை எல்லாவற்றையும்
இந்த நிகழ்ச்சி மூலம் அவதானிக்க முடிந்தது.
இலங்கை தேசியக் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக இருக்கும் திருமதி ராகினி இதை அழகாக வடிவமைத்து இருக்கிறார். அதற்காக ராகினி அவர்களுக்கும்
பங்கு பெற்ற அழகியல் கல்வித் துறை மாணவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் அழகியல் கல்வி எல்லா வகுப்புகளிலும் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது..
ஒவ்வொருவருக்கும் ஆடல், பாடல்,நாடகம் என எவ்வளவோ திறமைகள் இருக்கலாம்.ஆனால் அது மற்றவரால் அங்கீகரிக்கப்படவேண்டும். அதுதான் முக்கியம்.
ஒரு திறமைக்கான தகுதியை நிர்ணயிக்கச் சான்றிதழ் ஒன்று தேவை . அது இருந்தால்தான் அவர்கள் மேலே வளர முடியும். உயர முடியும்.பிரிட்ஜ் அகாடமி அப்படி நல்ல பயிற்சி அளித்து,
தகுதியானவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கித் தென் இந்தியாவிலேயே சிறந்து விளங்கி வருகிறது. இதைச் செய்து வரும் ரகுராமன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.
இந்த கலைச்சங்கம முயற்சி மேலும் விரிவடையவேண்டும் என்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலமே உறவுப்பாலமாக அமையும் வகையில்,
இது விரிந்து வளர வேண்டும் என்றும் விரும்புகிறேன்,வாழ்த்துகிறேன். ” என்றார் .
முன்னதாக நிர்வாக இயக்குநர் ரகுராமன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் இசை மேதைகள் பி எஸ் நாராயணசாமி, ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பாகீரதி, மஹாராஜபுரம் ஏ ராமசந்திரன், ராஜ்குமார் பாரதி, எஸ் மஹதி மற்றும்
நாட்டுப்புற இசைக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட ஏராளமான மூத்த மற்றும் முன்னணிக் கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.