
அங்காடித் தெரு மகேஷ் , மித்ரா குரியன், சமுத்திரக் கனி ஆகியோர் நடிப்பில் விக்டர் டேவிட்சன் என்பவர் இயக்கி இருக்கும் படம் புத்தனின் சிரிப்பு . புன்சிரிப்பா? வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பா? பார்க்கலாம் .
அமைச்சர் ஒருவர் முக்கியப் பங்குதாரராக உள்ள ஒரு மல்டிநேஷனல் கம்பெனி மூலம், அந்த அமைச்சருக்கு கிடைத்த வருமானத்துக்கு அவர் 2000 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டி உள்ளது . அவ்வளவு கட்ட விரும்பாத அந்த அமைச்சர், இந்தியாவின் சீனியர் லாயர் ஒருவருக்கு 1000 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து, இன்னொரு ஆயிரம் கோடி கட்டத் தேவை இல்லாதபடி எல்லாவற்றையும் கரெக்ட் செய்து விடுகிறார் .
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஓர் எளிய முறையைக் கண்டு பிடித்த எஞ்சினியர் இளைஞன் அருண் (சுரேஷ் சக்காரியா ) அதற்கு அனுமதி கேட்டு சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கிறான் .
வெற்றி மாறன் உண்மைகளை கண்டு பிடித்தும் அது பற்றிய விவரங்கள் அமைச்சர் கைக்கே போய் விடுகிறது.
பணத்தை திருப்பிக் கட்ட மாட்டேன் என்று சொல்லியே லோன் வாங்கும் கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் கடனை அள்ளிக் கொடுக்கும் வங்கிகள், விவசாயம் செய்ய விரும்பும் கதிருக்கு லோன் தர மறுக்கிறது.
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய முறைக்கு அனுமதி வழங்கினால், மேல் அதிகாரிகளுக்கு இப்போதைய வழக்கப்படி வந்து கொண்டிருக்கும் கமிஷன் போய் விடும் என்பதால், அருணின் திட்டம் மறுக்கப்படுகிறது .
அமைச்சரின் கைக்கூலிகள் சி பி ஐ ஆபீசிலேயே இருக்கும் நிலையில் தன் முயற்சியில் தோற்றுப் போன வெற்றிமாறன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழ்நாட்டுக்கே வந்து விடுகிறார். வங்கி அதிகாரியை தட்டிக் கேட்ட கதிரை , கலாட்டாசெய்ததாக கூறி போலீசில் பிடித்து கொடுக்கிறார் வங்கி மேனேஜர். அவனை போலீசில் இருந்து மீட்டு சென்னைக்கு அழைத்து வருகிறார் வெற்றி மாறன்.
வெற்றி மாறன் எதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்கு போகிறார் . கதிர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்கிறான் . எஞ்சினியர் அருண் சாலை ஓரத்தில் ஹெல்மெட் கர்சீப் கண்ணாடி விற்றுப் பிழைக்க ஆரம்பிக்கிறான் .
குடித்து விட்டு வருபவர்களை பரிசோதனை செய்கிறோம் என்ற பெயரில் வருவோர் போவோரிடம் பணம் பிடுங்கும் ஒரு குடிகார இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்கள் ஒரு நாள் ராத்திரி இந்த மூவரிடமும் மாட்டிக் கொள்கிறார்கள் . அடுத்து என்ன நடந்தது என்பதே இந்தப் படம்.
”உன் சக்திக்கு மீறிய இடத்தில் நீதியை நிலை நாட்ட முடியாது போனாலும் முடிந்த இடத்திலாவது அதற்காகப் போராடு” என்கிறது இந்தப் படம் .
”28 ரூபாய் இருந்தாலே இந்தியாவில் ஒரு மனிதன் மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு நிம்மதியாக வாழ முடியும்” என்று அடி முட்டாள்தனமாக பேசிய அறிவில்லா மூடனான– திட்டக் கமிஷன் தலைவர் — மாண்டேக் சிங் அலுவாலியாவை படத்தில் சும்மா பிரித்து மேய்கிறார்கள் .
— என்று ஒரு சில அரசியல்வாதிகளின் சுய நலத்துக்காக நம் நாடே நாசமாகிக் கொண்டிருப்பதை பேசும் படம் இது .
சமுத்திரக்கனி சம்மந்தப்பட்ட காட்சிகள் தெறிப்பாக இருக்கின்றன .
படத்தை நறுக்கென்று முடித்த விதத்தில் சற்றே தெரிகிறார் இயக்குனர் விக்டர் டேவிட்சன்.
தலையில் எதோ நூறு கிலோ மூட்டையை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பது போல நொந்து போன நொய்யரிசியாகவே இருக்கிறார் மகேஷ் . ஆர்கானிக் விவசாய இளைஞனின் லட்சியக் கனவையும் துடிப்பையும் ஒரு நொடி கூட அவரால் நடிப்பில் வெளிப்படுத்த முடியவில்லை .
சுரேஷ் சக்காரியா தமிழ்ப் படத்தில் மலையாளத்தில் பேசிக் கொல்லுகிறார் . ஒரு மலையாளப் படத்தில் ஒரு மலையாளக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தமிழ் வாசனையில் மலையாளம் பேசினா உங்க ஊருல ஒத்துக்குவாங்களா சக்கி?.
ஒரு நல்ல விஷயத்தை கதையாக எழுதலாம் . கட்டுரையாக எழுதலாம் . கவிதையாக எழுதலாம். தெருக் கூத்தாக , நாடகமாக , சினிமாவாக எப்படி வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் நாம பயன்படுத்தும் மீடியாவை உணர்ந்து அதற்கேற்ப சொல்லும்போது சிறப்பான பலன் கொடுக்கும் .அப்படி இல்லாதபோது , சொல்லப் படும் விஷயம் பாதிப்புக்கு ஆளாகி, நல்ல கருத்து சொன்னாலே ஆபத்து என்ற தவறான பிம்பம் ஏற்பட்டு விடும் .
இந்தப் படம் சொல்லும் விஷயங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய உண்மைகள் . தெரிய வேண்டிய விவரங்கள்.
மொத்ததில் ….
புத்தனின் சிரிப்பு … அறிவார்ந்த, உதட்டு நெளிப்பு .