சுதர்ஷன் வேம்புட்டி தயாரிப்பில் மைக்கேல் தங்கதுரை, ரேஷ்மி மேனன் இணையராக நடிக்க, தரணிதரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் பர்மா . ரசிகனுக்கு சரி வருமா? பார்க்கலாம்.
பைனான்ஸ் வாங்கிக் கார் வாங்குபவர்கள் பைனான்ஸ் கம்பெனிக்கு ஒழுங்காக டியூ கட்டவில்லை என்றால் அந்த காரை மிரட்டிப் பிடுங்கிக் கொண்டு வரவோ இல்லை சொல்லாமல் திருடிக் கொண்டு வரவோ , அந்த பைனான்ஸ் கம்பெனி பயன்படுத்தும் ஆட்களுக்கு கார் சீசர் என்று பெயர் .
அப்படிப்பட்ட கில்லாடி கார் சீசர் ஒருவனிடம் (சம்பத் ராஜ்) வேலை பார்த்த பர்மா என்ற பரமானந்தம், திடீரென்று தனியாக தொழில் ஆரம்பித்து போட்டியாக வர , அது அந்த பழம் தின்று கொட்டை போட்ட கார் சீசருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் கார்களை சீஸ் பண்ண சொல்லும் அந்த பணக்கார சேட்டு (அதுல் குல்கர்னி ) பர்மாவை ஆதரிக்கிறான் . எனவே பர்மா பெரிய கார் சீசர் ஆகிறான்.
பர்மாவுக்கு ஓர் பெண்ணோடு (ரேஷ்மி மேனன்) காதலும் வருகிறது.
ஒரு முக்கியப் பிரமுகரின் காரை சீஸ் செய்துவர பர்மாவை சேட்டு அனுப்ப , அப்படியே செய்கிறான் பர்மா
நகை பறிப்புக் குற்றவாளியான ஜெஸ்ஸிகா என்ற பெண் , பிரிட்டிஷ் மகாராணிக்கு சொந்தமாக இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஈஸ்டர் எக் ‘என்ற வைரத்தை விற்க, வேறொரு பெண்ணை (கனி குசுருட்டி) தலைவியாகக் கொண்ட கிரிமினல் கும்பலை அணுக , அதில் நடந்த சண்டையில் ஜெஸ்ஸிகா கொல்லப்படுகிறாள் .
சீஸ் செய்த காரோடு பர்மா வரும் வேளையில் , கடத்தல் கும்பல் பெண் ஜெஸ்ஸிகாவை சுட்டுத் தள்ள, அவள் பர்மாவின் கார் முன்பு வந்து விழுகிறாள் . அவளைக் காப்பாற்ற பர்மா முயல, பர்மா கொண்டு வந்த காரை, அந்த வில்லி கடத்திக் கொண்டு போய் விடுகிறாள்.
காருக்கு சொந்தக்காரன் டியூ பணத்தை கொண்டு வந்து சேட்டுவிடம் கொடுத்து விட்டு “கார் வேண்டும்” என்று சொல்ல,பர்மா அந்தக் காரை தொலைத்து விட்டதால் காரைக் கொடுக்க முடியாத நிலை .
பர்மாவின் காதலியை பிடித்துக் கொண்ட சேட்டு பர்மாவிடம் “இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் காரோடு வந்தால் உன் காதலி உனக்கு . இல்லாவிட்டால் எனக்கு ” என்று கெடு வைக்க,
தொலைந்த காரை பர்மா கண்டு பிடித்து சேட்டிடம் கொடுத்து காதலியை மீட்டானா ? இல்லையா? ஆம் எனில் எப்படி? இல்லையெனில் என்ன ஆனது ?
— என்பதே பர்மா .
படத்தின் பின்புலம் வித்தியாசமாக இருக்கிறது . கதாபாத்திரங்களுக்கான முகங்கள் எல்லாவற்றிலும் ஒரு தனித் தன்மை. யுவாவின் ஒளிப்பதிவில் வண்ணங்களின் பயன்பாடு அருமை . சுதர்சன் குமாரின் பின்னணி இசையில் ஒரு தனித்தன்மை தெரிகிறது . நல்லா வாய்ப்புக் கிடைத்தால் முன்னேறுவார் . ஆனால் ஒரு வெற்றிப் படத்துக்கு இவை மட்டும் போதுமா ?
ஒரு நிலையில் படத்தில் எல்லோருமே ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ மாறுகிறார்கள் . கார் சீசர் என்ற வித்தியாசமான கதாபாத்திரம் இருந்தாலும் பார்த்து தீர்த்த காட்சிகளே படத்தை அதிகம் ஆக்கிரமிக்கின்றன .
பர்மா …. தேக்கு இல்லை .