வி துரைராஜ் தயாரிப்பில் சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், , வினு லாரன்ஸ், ஆனந்த குமார், ராஜன் நடிப்பில் ஜான் கிளாடி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம்.
நாகர்கோவில் பகுதியில் புறாப் பந்தயத்தில்,ஈடுபடுவதை ஜல்லிக்கட்டு போல என்னும் மக்கள் குழுக்கள் !
படிப்பை விட புறா வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் கோபக்கார நபர் லிங்கம் (சையத் மஜீத்) , அதே போல கோபம் கொண்ட ஆனால் மகனை உருப்பட வைக்க முயலும் அவனது தாய் (விஜி சேகர்) , அவனது நெருங்கிய நண்பனும் லிங்கத்தின் அம்மாவால் வெறுக்கப்படுபவனுமான அமல் ( ஜான் கிளாடி) , லிங்கத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பும் அத்தைப் பெண் (சரண்யா ரவிச்சந்திரன்) ஆனால் அவன் நேசிக்கும் பெண் ( மேக்னா) லிங்கத்தின் அமைதியான அப்பா ( ஆனந்த குமார்) அமலின் மாற்றுத்திறனாளி அப்பா (ராஜன்)
புறா விடும் பல குழுக்கள், அதில் லிங்கத்தின் எதிரிகள் ,
புறாப் பந்தயம் விடும் அனைவரும் நேசிக்கும் நபரும் அய்யா வழி ஆன்மீகத்தில் ஒழுகும் நபருமான ஒரு பண்ணையார் (ரமேஷ் ஆறுமுகம்) அவருக்கும் அடங்காத மிகப் பெரிய தாதா (வினு லாரன்ஸ் )
இவர்களின் ஆசைகள் கனவுகள் ,
புறாப் பந்தயத்தில் வஞ்சம் சூழ்ச்சி காரணமாக லிங்கம் தாதாவுடன் மோத அதன் விளைவுகள் இவையே பைரி.
பைரி என்பது வானில் புறாக்களை வேட்டையாடும் ஒரு கழுகு இனம்
புறா வளர்ப்பு , புறாப்,பந்தயம் என்ற பின்னணி இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்று . வாழ்த்துகள்
நாஞ்சில் நாட்டு மொழி, அதற்கேற்ற முகங்கள், அவர்களின் நல்ல பங்களிப்பு , பரபரக்கும் காட்சிகள் , மிக சிறப்பான பிலிம் மேக்கிங் , ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட கூட்டம் இருந்தும் அவை எடுக்கப்பட்ட நேர்த்தி இவை யாவும் சிறப்பு.
குறிப்பாக காட்சிகள் எடுக்கப்பட விதம் அபாரம் . அதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்
இயக்குனரே நடித்து இருக்கும் அமல் பாத்திரப்படைப்பு அருமை . அதற்கு இணையான சிறப்பான பாத்திரம் அய்யாவழி பண்ணையார் பாத்திரம் . லவ்லி .
படத்தின் மிகப்பெரிய பலம் படத் தொகுப்பு . வாழ்த்துகள் சதீஷ் குமார் . அடுத்த பலம் ஒளிப்பதிவு . பாராட்டுகள் வசந்தகுமார்
அனீஷின் கலை இயக்கமும் சிறப்பு
சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், , வினு லாரன்ஸ், ஆனந்த குமார், ராஜன் ஜான் கிளாடி எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர் . குறிப்பாக குரல் நடிப்பு அபாரம் . சத்தம் மட்டுமல்ல சங்கதியும் இருக்கு.
திரைக்கதைதான் மிகப் பெரிய சறுக்கல்
எந்த வகையிலும் ரசிகர்கள் பின் தொடரத் தகுதியற்ற நாயகன் கதாபாத்திரம் இந்தப் படத்தை பலவீனப்படுத்துகிறது . எரிச்சலூட்டும் கதாபாத்திரம் அது .
மூச்சு விடாமல் படம் முழுக்க பேச்சு… பேச்சு… பேச்சோ… பேச்சு , (எல்லோருக்கும் இந்த படு வேகமான நாஞ்சில் வழக்கு மொழி புரியுமா?) கடைசி வரை தொடரும் வில்லுப்பாட்டு பின்னணி இரண்டும் பெரிய வில்லங்கம். அப்புறம் எதற்கு திரைமொழி ?
கடைசியில் புறாப் பந்தயப் பின்னணியில் நாஞ்சில் மொழியில், சாதாரண வெட்டுக்குத்து கதைதான் வருகிறது . ஒரு நிலையில் அந்த புறாப் பந்தயக் கதைப் பின்னணியையும் கூட படத்தில் வறுத்துத் தின்று விட்டார்கள் .
புறாவால் நடக்கும் துரோகத்துக்கு புறாப் பந்தயம் மூலம் பதில் சொல்வதுதானே நல்ல வணிக ரீதியான திரை மொழியாக இருக்க முடியும் .
இந்தப் படம் புறாப் பந்தயம் நடத்துவோர்கள் எல்லாம் மரியாதை தெரியாத அடிதடி ரவுடிகள் என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது
இந்தக் கதைக்கு பாகுபலி , பொன்னியின் செல்வன் பாணியில் கதையை முடிக்காமல், இரண்டாம் பாகத்தில்கதை தொடரும் என்று வேறு அதிர்ச்சி கொடுக்கிறார்கள்
‘இதுதான் கதை; சொல்ல வந்தது இதுதான் என்றால்… இரண்டு விஷயங்கள் நடந்து இருக்க வேண்டும் .
ஒன்று. தாதாவை அரசியல்வாதி சந்தித்து மிரட்டும் காட்சிக்குப் பிறகு பத்து நிமிடத்துக்கு மேல் இந்தப் படம் ஓடக் கூடாது
அல்லது இதே பின்னணியில் லிங்கத்தை ஹீரோவாக காட்டாமல் அமல் கதாபாத்திரத்தை இன்னும் வலிமைப்படுத்தி அவனை ஹீரோவாக்கி அதைச் சுற்றித் திரைக்கதை அமைத்து இருக்க வேண்டும் . அப்படி செய்து இருந்தால் வேறு ஒரு நல்ல அர்த்தமுள்ள கமர்ஷியல் படம் கிடைத்து இருக்கும் அமல் கேரக்டருக்குள் அதற்காக தன்மை முழுமையாக இருக்கிறது
ஆனால்… ‘நீ பாட்டுக்கு எடு . எடுத்தவரைக்கும் தொடு (தொடுப்பது = தொகுப்பது) தொடுத்ததை திரையில் விடு ( வெளியிடு) ‘என்று ஏதோ செய்து இருப்பதால்
படத்துக்கு திரைக்கதையே பைரி ஆகி விட்டது
மொத்தத்தில் பைரி… அப்பரேஷன் சக்சஸ் . பேஷன்ட் அவுட்