ஒரு சின்னப் படத்தை சீரழித்த, சென்சார் போர்டின் சாதி வெறி ?

malarum 6

பி சினிமா  ஸ்டுடியோஸ்  சார்பில் பாலன் என்பவர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி படத்தொகுப்பு செய்து தயாரித்து இயக்கி  ஹீரோவாக நடித்து இருக்கும் படம் மலரும் கனவுகள். 

சுஷ்மா  , ஜெயஸ்ரீ , ஸ்ரீமதி என்று மூன்று கதாநாயகிகள் . மறைந்த நடிகர்  குள்ளமணி  நடித்த கடைசி படம் இது . இதில் அவர் நடிகராகவே வருகிறார் . இசை அமைத்திருப்பவர் சங்கர் கணேஷ் . 
ஒரு கல்லூரி மாணவனும் ஒரு  கல்லூரி மாணவியும் ஒரே வீட்டில்  வசிக்கின்றனர் . கண்ணியமாக – எல்லை வகுத்து பழகும் அவர்களை  அக்கம் பக்கத்தில் தவறாக  சொல்கின்றனர்.  ஒரு நிலையில் அவர்களுக்கும் உண்மையான காதல் ஏற்படுகிறது . 
இந்த நிலையில் மாணவனின்  நண்பன் ஒருவன் அந்தப் பெண்ணை அடைய விரும்புகிறான் . எனவே  வேறொரு பெண்ணை வேலைக்காரியாக அந்த வீட்டுக்குள் அனுப்பி,  நாயகனுக்கும் வேலைக்காரிக்கும் தொடர்பு இருப்பதாக காதலியை நம்ப வைத்து,  காதல் ஜோடியை பிரிக்க முயல்கிறான் . அவனது முயற்சி வென்றதா ?  காதல் ஜோடி வென்றதா ? என்பதே படத்தின் கதை . 
malarum 7
படம் ஒன்றும் கலைக்காவியம் இல்லைதான் . சம்மந்தப்பட்ட பாலன்  ஏதோ தன்னால் முடிந்த வரையில் கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதி, நடனம் எல்லாம் ஆடி,  காமெடி , செண்டிமெண்ட் , பாட்டு  , சண்டை  எல்லாம் வைத்து படத்தை சிறு பட்ஜெட்டில் எடுத்து உள்ளார் . ஆனாலும் அது அவருக்கு பெரும் தொகைதான் . 
என்ன ஒன்று….. படத்தில் ஆங்காங்கே பல இரட்டை அர்த்த வசனனங்கள். ஆனாலும் திரிஷா அல்லது நயன்தாரா அளவுக்கு படு கேவலமாக எல்லாம் இல்லை  என்பது வேறு விஷயம் . 
ஆனால்  இந்த மலரும் கனவுகள் படத்தை தமிழ்நாடு  தணிக்கைத் துறை குதறி எடுத்துக் கூறு போட்டு இருப்பதை விரக்தியோடு சொல்கிறார் பாலன் . அதன் பின்னால் இருக்கும் காரணம் .. படத்தில் வரும் இரட்டை அர்த்த வசனங்களை  விட  கேவலமானது . 
நடந்ததை அவரது வார்த்தைகளிலேயே  கேட்போம் 
” ஒத்துக் கொள்கிறேன் . எல்லாரும் செய்கிற விசயம்தானே என்று கமர்சியலுக்காக கொஞ்சம் இரட்டை அர்த்த வசனங்களை வைத்து விட்டேன் . மறுக்கவில்லை . ஆனால் அதற்காக எனக்கு மட்டும் இவ்வளவு தண்டனையா என்பதுதான் என் கேள்வி . 
பாலன்
பாலன்
படத்தை நான் முடித்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சென்சாருக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த பக்கிரிசாமி தலைமையிலான சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு சான்றிதழே கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது . சான்றிதழ் பெறாமல் என்னால் ரிலீஸ் செய்ய முடியாதே! 
நான் அவர்களிடம் ‘அய்யா … என் படத்தில் சில இரட்டை அர்த்த வசனங்கள் அமைந்து விட்டது உண்மைதான். அவற்றில் எதை  எல்லாம் நீங்கள் நீக்கி விட்டு… யூ , யூஏ,  ஏ  என்று …. என்ன சான்றிதழ் தர வேண்டுமோ அந்த சான்றிதழைக்  கொடுங்கள் . நான் மறு பேச்சுப் பேசாமல் ஏற்றுக் கொண்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்கிறேன்’ என்று சொன்னேன் . 
ஆனால் அவர்கள் அதிசயத்திலும் அதிசயமாக ‘ நீங்களே உங்களுக்கு தவறு என்று படுவதை நீக்கிக் கொண்டு வாருங்கள் . அப்புறம் சான்றிதழ் தருகிறோம் ‘என்றார்கள் . எனக்கு அதிர்ச்சியாக இருந்தது . ‘என்னது நாமே நீக்குவதா ? தவறாகத் தோன்றும் காட்சிகளை நீக்குவது சென்சார் போர்டின் வேலைதானே…. நாமே எப்படி நீக்குவது ?’ என்று குழம்பிப் போனேன் . 
malarum kanavugal
‘சில நண்பர்கள் ‘டெல்லி ட்ரிப்யூனலுக்கு போ . அங்கே உனக்கு நியாயம் கிடைக்கும்’ என்றார்கள் . ஆனால் என்னிடம் வசதி இல்லை . எனவே மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு,இருட்டில் கத்தி வீசுவது மாதிரி,  பத்து நிமிட காட்சிகளை நானே தூக்கி விட்டு மீண்டும் சென்சாருக்குப் போனேன் . அப்போதும் பக்கிரிசாமி தலமைமையிலான சென்சார் போர்டுக் குழு படம் பார்த்தது . 
பார்த்துவிட்டு அப்போதும் ‘சான்றிதழ் கொடுக்க முடியாது’ என்றது . ”அப்படி என்றால் சான்றிதழ் தர முடியாது என்பதை எழுதிக் கொடுங்கள்” என்றேன் . அதற்கு ”முடியாது. சான்றிதழ் வேண்டும் என்றால்  இன்னும் நிறைய காட்சிகளை நீங்களே குறைத்துக் கொண்டு வாருங்கள் ” என்றார்கள் . நான் நொந்து போனேன். ‘நாமாக இன்னும் எதைக் குறைப்பது?
அந்தக் குழுவில் பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி  தியாகராஜனும் இருந்தார் . ‘அனுபவம் மிக்க தயாரிப்பாளரான அவர்  புதிய தயாரிப்பாளரான நமக்கு வழி காட்டுவார்’ என்று எண்ணி அவரிடம்
‘நான் என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை . கொஞ்சம் வழி காட்டுங்கள் ‘ என்றேன் . அவரும் உதவவில்லை. ‘அவர்கள் சொல்வதை செய்யுங்கள்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட்டார் . 
malarum 3
விதியே என்று  மேலும் எட்டு நிமிடம் படத்தைக் குறைத்தேன். இந்தப் போராட்டத்தில்  எனக்கு ஒரு வருஷம் போய் விட்டது . வாங்கிய கடனுக்கு வட்டி ஏறிக் கொண்டே போனது . 
இப்போது பக்கிரிசாமி போய் அந்த இடத்துக்கு சென்சார் போர்டு அதிகாரியாக ஜெயந்தி வந்திருந்தார் . 
அவரிடம் போய் உதவி கேட்டேன் . இவருக்கு பக்கிரிசாமியே மேல் என்பது அப்போதுதான் புரிந்தது . 
படத்தில் ‘வாடா  செல்லம் வாடா’  என்று ஒரு இனிமையான பாடல் . அது கொஞ்சம் கிளாமர் பாட்டுதான். ஆனால்  நீக்கும் அளவுக்கு மோசமானது அல்ல . அந்தப் பாட்டை  படத்தில் இருந்து ஒட்டுமொத்தமாகத்  தூக்கினார் ஜெயந்தி . காரணம் கேட்டபோது ‘வாடா  செல்லம் என்று எப்படி நீங்கள் எழுதலாம் ?  அது என்ன கண்ணியமான வார்த்தையா ?” என்று எகிறினார் . 
எனக்கு மயக்கமே வந்தது . வாடா  செல்லம் என்பது எந்த வகையில் தப்பான் வார்த்தை என்பது எனக்கு புரியவே இல்லை. தமிழ் நாட்டில் யாருக்காவது புரிந்தால் சொல்லட்டும் . 
அப்புறம் அவர்களாகவே சில வசனங்களை ஒலி நீக்கம் செய்து ஏ சர்டிபிகேட்  கொடுத்து அனுப்பி விட்டார்கள் . அவர்கள் என்ன ஒலி நீக்கம் செய்துள்ளார்கள் என்று பார்த்தபோதுதான்….  எனக்கு ஒன்றரை ஆண்டுகால தாமதத்தின் காரணமே புரிந்தது . 
malarum 1
படத்தில் ஒரு பிராமண மாமி கதாபாத்திரம் வரும் . அது கொஞ்சம் கவர்ச்சியாக காட்டப்படும் . நாயகனை ரகசியமாக வந்து கட்டிப் பிடிக்கும் .  அதன் மாராப்பு விலகி இருப்பதை  பலரும் ரசிப்பது போல காட்சி வரும் . . இந்தக் காட்சிகளில் எல்லாம் மாமி என்ற வார்த்தையை மட்டும் ஒலி நீக்கி கொடுத்திருந்தார்கள். 
அப்போதுதான் எனக்கு விசயமே புரிந்தது . படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு இடையே கவர்ச்சிக் காட்சிகளும் வசனங்களும் இருப்பது போல  இந்த பிராமண மாமிக்கு கவர்ச்சிக் காட்சிகளும் வசனங்களும் வைத்தது பிராமணர்களான பக்கிரிசாமிக்கும் ஜெயந்திக்கும் பிடிக்கவில்லை . 
அதை நீக்க வேண்டும் என்று சொல்லவும் அவர்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை போலிருக்கிறது . அதை நானாக நீக்க வேண்டும் என்று எண்ணித்தான் ‘நீங்களே காட்சிகளை குறையுங்கள் ‘  என்று சொல்லி சொல்லியே என்னை ஒருவருடம் அலைக்கழித்துள்ளனர் . 
ஆனால் எனக்கு அது புரியவேயில்லை. காரணம் இப்படியெல்லாம் ஜாதி வெறியோடு அவர்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்காததால் மற்ற காட்சிகளையே நீக்கி நீக்கி விட்டு,  நானே குழம்பிக் கிடந்திருக்கிறேன் . 
 
malarum 5
மாறாக அவர்கள்  என்னிடம் மறைமுகமாக ஒரு வார்த்தை சொல்லி இருந்தால்கூட  நானே அந்த மாமி கேரக்டரையே தூக்கி இருப்பேன் . ஆனால் கடைசி வரை நான் நீக்காத காரணத்தால்  படத்தின் மிக சிறப்பான பாடலான வாடா செல்லம் பாடலை வன்மத்தோடு ஒட்டு மொத்தமாக தூக்கி கழுத்தறுத்து விட்டார் ஜெயந்தி . 
இரட்டை அர்த்த வசனம் வைத்ததை நான் நியாயப்படுத்தவில்லை . ஆனால் மற்ற படங்களில் இதை விட எல்லாம் கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் வந்துள்ளதே . அதை எப்படி விட்டார்கள்?
அது மட்டுமல்ல … எத்தனையோ படங்களில் பிராமணப் பெண்களை இரட்டை அர்த்த வசனத்தில் சித்தரித்து வசனம் வந்துள்ளதே . அதில் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பிராமண நடிகர்களே நடித்து உள்ளார்களே . அவற்றை எல்லாம் எப்படி அனுமதித்தார்கள் ?
நான் ஒரு சின்னப்படத்தில் கொஞ்சம் கமர்சியலுக்காக வைத்தது தவறா ?  அப்படியே இருந்தாலும் அதை சொல்லி இருந்தால் நான் மொத்தமாக நீக்கித் தொலைத்திருப்பேனே. அதை சொல்லாமல் என்னை அலைக்கழித்து முக்கியமான பாட்டையும் நீக்கி என் படத்தின் வெற்றியை பாதியாகக் குறைத்தது என்ன நியாயம் ?
malarum 4
எனினும் என் படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளதால்  தூங்காவனம் , வேதாளம் போன்ற படங்களோடு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறேன் . 
ஆனால்  அரசுப் பதவியில் உட்கார்ந்து கொண்டு, இப்படி ஜாதி வெறி பிடித்து ஒரு புதிய எளிய சிறிய படத்தின் கழுத்தறுக்கும் செயலை இனியாவது இவர்கள் நிறுத்த வேண்டும் . 
இல்லை என்றால் பணத்தோடு வருபவர்களிடமும்  இவர்களது வீரத்தை காட்ட வேண்டும் . அங்கே மட்டும் கண்டு கொள்ளாமல் போவது எப்படி ?”‘ என்று பொங்குகிறார் பாலன் . 
மிக முக்கியப் பின் குறிப்பு 
———————————————
இரட்டை அர்த்த வசனம் கொண்ட ஒரு படத்தை  ஆதரிப்பது நமது நோக்கமில்லை . ஆனால் சென்சார் போர்டின் நடவடிக்கை படத்தின் மீது பரிதாபம் வர வைத்து விட்டது .
பாலன் சொல்வதெல்லாம் உண்மை என்றால் , சென்சார் போர்டு என்ன செய்திருக்க வேண்டும் ?
படத்தைப் பார்த்ததும் நீக்க வேண்டிய காட்சிகளை நீக்குவது அவர்கள் வேலை . நீங்களே நீக்கிக் கொண்டு வாருங்கள் என்பது தப்பு. 
malarum 2
பிராமண மாமி சம்மந்தப்பட்ட காட்சிகள் சட்டப்படி தவறு என்றால் அதை வெட்டி எறிவது சென்சார் போர்டின் வேலை . அதை அவர்கள் செய்ய முடியவில்லை எனும்போதே தயாரிப்பாளர் அப்படி காட்சி வைத்தது சட்டப்படி குற்றம் இல்லை என்று ஆகிறது . எனில் அதை அனுமதிப்பதே நிஜமான ஆண்மை அல்லது பெண்மை .
திரைப்படத்தில் எந்த ஒரு சமூகமும் அசிங்கப்படுத்தப்படுவதில் நமக்கு உடன்பாடு இல்லை .படைப்புகளில் அனைவரின் மரியாதையும் காக்கப்படவேண்டும் என்பதில் நமக்கு பிராமணர் , தாழ்த்தப்பட்டவர் எல்லாரும் ஒன்றே . 
எனவே சாதி ரீதியாக உறுத்தலான காட்சிகளை  சட்டப்படிதான் நீக்கச் செய்ய வேண்டும்  என்றல்ல . வாய்மொழியாக அறிவுறுத்தி கூட நீக்க வைத்து இருக்கலாம் . 
அதை விட்டு விட்டு இப்படி ஆதிக்க சாதி வெறியோடு,  ஒரு எளிய இளிச்சவாய் தயாரிப்பாளரிடம் மட்டும் வீரம் காட்டுவதும் மற்ற இடங்களில் …….   கண்டிக்கத்தக்கது . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →