செக்கச் சிவந்த வானம் @விமர்சனம்

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்  சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா புரடக்சன்ஸ்  தயாரிப்பில்  ,

அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், தியாகராஜன் , பிரகாஷ் ராஜ்,  ஜோதிகா, ஜெயசுதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைதரி, டயானா எர்ரப்பா, மன்சூர் அலிகான் நடிப்பில், 

சிவா ஆனந்துடன் சேர்ந்து எழுதி, மணிரத்னம இயக்கி இருக்கும் படம் செக்கச் சிவந்த வானம் . படம் மருதாணி வண்ணமா? வெற்றிலை எச்சிலா ? பார்க்கலாம் 

பிரபல  தாதா சேனாபதி ( பிரகாஷ் ராஜ் ) தம்பதிக்கு ( ஜெயசுதா) வரதன் (அரவிந்த்சாமி), தியாகு (அருண் விஜய்) , எத்திராஜ் (சிலம்பரசன் ) என்று மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள்.
 
வரதன் உள்ளூரில் அப்பாவுடன் இருந்து அவர் சொன்ன விசயங்களை மட்டும் செய்து கொண்டு அடிதடி விவகாரங்களை பார்த்துக் கொள்கிறான் . 
தியாகு துபாயில் ஷேக்குகளுடன் பிசினஸ் செய்கிறான் . எத்திராஜ் செர்பியாவில் ஆயுத வியாபாரம் செய்கிறான் . 
 
வரதனின் மனைவி சித்ரா (ஜோதிகா) . டி வி நிருபர் பார்வதி ( அதிதிராவ் ஹைதரி) வரதனின் கள்ளக் காதலி .   
 
ரேணு (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற இலங்கைத் தமிழ்ப் பெண்ணை தியாகு மணந்திருக்கிறான்.  எத்திராஜ் சாயா என்ற பெண்ணை ( டயானா எர்ரப்பா) காதலிக்கிறான் .
 
வரதனின் உயிர் நண்பனான ரசூல் இப்ராஹீம் என்ற போலீஸ் அதிகாரி ( விஜய் சேதுபதி) குற்றவாளிகளிடம், 
 
கடுமையாக நடந்து கொண்டதாக காரணம் காட்டப்பட்டு  , ‘ சம்பளத்துடன்’  டிஸ்மிஸ் செய்யப் படுகிறான்.  
 
சேனாபதியின் தொழில் போட்டியாளன் சின்னப்பதாஸ்  ( தியாகராஜன் ) 
 
சேனாபதி மனைவியோடு கோவிலுக்குப் போகும் போது அவரை கொல்ல முயற்சி நடக்கிறது . படுகாயங்களுடன் தப்பிக்கிறது தம்பதி . 
 
வெளிநாட்டு மகன்களும் சேர்ந்து வந்து, சின்னப்பதாசை  சந்தேகப் படுகின்றனர் . சிதம்பரத்தின் மருமகனை கொல்கிறான் வரதன். 
 
சின்னப்பதாஸ் ,  சேனாபதியை சந்தித்து ”நான் உன்னை கொல்ல முயலவில்லை” என்று சொல்கிறான் . ”அது தெரியும் ” என்று சொல்லி அனுப்பும் சேனாபதி ,
 
தனது மனைவியிடம் ”என்னை கொல்ல முயன்றது நம் பிள்ளைகளில் ஒருவன்தான்”  என்கிறார் .
 
யாரென்று தெரிந்து கொள்ள மறுக்கிறாள் மனைவி . மறுநாள் ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது .சேனாபதியை கொல்ல முயன்றது  யார் ? அது மற்றவர்களுக்கு தெரிய வரும்போது  என்ன ஆனது ? 
 
அந்த நபர்களின் உறவு வானம் எப்படி ரத்தத்தால் செக்கச் சிவக்கிறது என்பதே இந்த செக்கச் சிவந்த  வானம். 
 
வாவ் ! மீண்டும் அட்டகாசமாக ஃபார்முக்கு வந்திருக்கிறார் மணி ரத்னம் . வழக்கமான தனது அட்டகாசமான மேக்கிங் மட்டுமல்லாது, 
 
சிவ ஆனந்துடன் சேர்ந்து மீண்டும் அவருக்குள் இருக்கும் திரைக்கதையாளர்  மற்றும் வசனகர்த்தாவும்  விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் . 
 
இது அது என்று உதாரணம் சொல்ல முடியாத படம் முழுக்கவே வசனம் ரசனைக்கு விருந்து . ரசித்து ருசிக்க முடிகிறது . 
அடுத்து அடுத்து வரும் அட்டகாசமான -அதிர்ச்சியான திருப்பங்கள் திரைக்கதையை  கடைசிவரை சுவாரசியம் குன்றாமல் பார்த்துக் கொள்கிறது.
 
இரண்டாம் பாதியில் ஒரு நிலையில் திரைக்கதை சற்றே தொங்க ஆரம்பிக்க, சிக்கிருச்சோ என்று நாம்  பயப்பட ஆரம்பிக்கும் நிலையில்  மீண்டும் சூடு பிடிக்கிறது படம் . 
 
இயக்குனராக – பிலிம் மேக்கராக — எழுத்தாளராக — மீண்டும் ஜொலிக்கும் மணிரத்னத்திற்கு வாழ்த்துகள். சந்தோஷ கண்ணீரே !
 
ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்துக்கும் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கும் என்று, 
 
நுணுக்கமாக வித்தியாசப்படுத்தி பின்னணி இசை கொடுத்து படத்துக்கு பலம் கொடுக்கிறார் ஏ ஆர் ரகுமான் . பாடல்களும் இனிமை . 
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவால் விழிகளுக்குள் விரிகுடாக்கள் . ஆச்சர்யம் .. அற்புதம். அழகு. நுணுக்கம் இவற்றோடு காட்சியில் உணர்வுக்கு கூர்மை தரும் ஒளிப்பதிவு . 
 
நிறைய கதாபாத்திரங்கள் ஏராள சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை நுணுக்கி , குழப்பமில்லாமல் தருகிறது ஸ்ரீகர் பிரசாத்தின் சிறப்பான படத் தொகுப்பு . 
 
கலை இயக்கம் , உடைகள், ஒலித் தொகுப்பு ஆகியவையும்  தரம்! 
 
வெளியே உக்கிரம் உள்ளுக்குள் மருகும் கேரக்டரில் அசத்தி இருக்கிறார் அரவிந்த்சாமி . 
 
அருண் விஜய்க்கு இது இன்னொரு பொக்கிஷம் . அப்படி ஒரு நடிப்பு . 
 
சிம்புவுக்கு இருக்கும் கெத்து , குறும்பு , ஆவேசம் ஆகியவை  அற்புதமாக வெளிப்பட,  ஜொலிக்கிறார் சிம்பு . 
விஜய் சேதுபதியை அவருக்கே உரிய பாணியில் ரசித்து நடிக்க விட்டிருக்கிறார் மணிரத்னம்.
 
விளைவு அருமை . தனது வசன பாணி , நடிப்பு இவற்றால் தெறிக்க விடுகிறார் விஜய் சேதுபதி . 
 
விஜய் சேதுபதிக்கு அரவிந்த் சாமியுடன்தான் அதிக காட்சிகள் . அவருக்கு சிம்புவுடன் சில காட்சிகள்தான் என்றாலும் இருவரும் சேரும் சில காட்சிகளில் ,
 
சிம்புவின் பில்ட் அப் பாணியும் விஜய் சேதுபதியின் கேஷுவல் பாணியும்  ரசனைக்குரிய  வித்தியாச விருந்து . 
 
இத்தனை ஸ்டார்களை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் சம முக்கியத்துவம் கொடுத்திருக்கும் வகையில்  மணி ரத்னம் வியக்க வைக்கிறார் . 
ஆரம்பத்தில் சஸ்பென்ட் பற்றிய விசாரணையில் விஜய் சேதுபதி கிண்டலாக பதில் சொல்லும் விதம் , அதை கிளைமாக்சில் நியாயப் படுத்தும் திரைக்கதை ,
 
அந்த சஸ்பென்ஸ் உடையக் கூடாது என்பதற்காக அந்த இமேஜுக்கு உரிய நடிகரான விஜய் சேதுபதியை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தது… 
 
என்று ஊன்றிக் கவனித்தால் நடிக நடிகையர்  தேர்வில் மணிரத்னத்தின் மேதாவித்தனம் விளங்கும் . 
 
காரியத்தில் கண்ணாக இருந்தாலும்  கடைசிக் காட்சியில் ஒரு முக்கிய சூழலில் வண்டி ஓட்டிக் கொண்டே விஜய் சேதுபதி கண்ணில் நீர் நிறைப்பது .. அற்புத  டைரக்ஷன் !
 
சேனாபதியாக நடிக்காமல் வாழ்ந்து விட்டுப் போகிறார் பிரகாஷ் ராஜ் . சின்னப்பதாசாக தியாகராஜன் வெகு இயல்பு . 
படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரமாக – (தனது ) ராமன் இருக்கும் இடத்தை அயோத்தியாக நினைக்கும் மனைவி சீதா போல ,
 
படம் முழுக்க அழகாக நடித்திருக்கிறார் ஜோதிகா. கம்பீர நடை , கணவனைக் காப்பாற்ற ரசூலுக்கு பணம் கொடுக்கும் நிர்வாகத்தனம் என்று ஜோதிகா அசத்தல் . 
 
அதிலும்  கணவனைப் பார்க்க அவன் கள்ளக் காதலி வீட்டுக்கே வந்து கணவனுடனும் அவன் காதலியுடனும் பேசிவிட்டுப் போகும் காட்சி ரகளை . 
 
எனில் அந்தக் காட்சியில்  கள்ளக் காதலனின் மனைவியையே கலாய்க்கும் காட்சியில் அதிதி ராவ் … அதிரி புதிரி ராவ்!
 
சேனாபதியின் மனைவியின் சகோதரனாக   நடித்தும் ரசிக்க வைக்கிறார் சிவா ஆனந்த் . 
இலங்கைப் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் கவனம் ஈர்க்கிறார் . நெகிழ்வு. 
 
லொகேஷன்கள் எல்லாம் அருமையோ அருமை . 
 
பெரும்பாலும் நியாயம் இல்லாத அடிப்படைக் கதைகளை எடுத்துக் கொண்டு அதை நியாயப் படுத்த உயிரைக் கொடுத்து செதுக்குவதே பெரும்பாலும் மணிரத்னத்துக்குப் பொழப்பு  .
 
கேட்டா கேங்க்ஸ்டர் படம்னா அப்படித்தான் என்பார்கள்.  இந்தப் படத்திலும் அதுதான் ( சேனாபதி நாயே .. நீ பொறுக்கியா இருந்து பிள்ளைகளையும் பொறுக்கியா வளர்த்தா ,
 
அந்த பொறுக்கில ஒண்ணு உன்னை கொல்லத்தான் பார்க்கும் . உன் பிரச்னைக்கு   ரசிகன் ஏன் வருத்தப் படணும்?  நெகிழணும்? ம்…?)
இன்னும் நல்ல  எத்திக்ஸ் உள்ள கதைக் கருக்களை மணிரத்னம் எடுத்து படமாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் இந்தப் படத்திலும் வருகிறது . 
 
அப்புறம் துபாயில் ஷேக்குகளுடன் கோடியில் பிசினஸ் செய்யும் தியாகு ஏன் வரதனிடம் பணத்துக்கு கெஞ்சணும்?
 
கடைசியில் தியாகு எத்திராஜ் சம்மந்தப்பட்ட ஒரு பிரச்னை கதையில் வலிந்து திணிக்கப் பட்டுள்ளதும் செயற்கைத்தனம் .
 
ஆனால் ஒன்று….. 
 
மணிரத்னத்தின் அண்மைக் காலப் படங்களை (ராவணனை தவிர்த்து விட்டுப் பார்த்தால்…. ஏனென்றால் அது அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஓர் அற்புதக் காவியம் ) பார்க்கையில், 
ஒரு ஷாட் எடுக்க, ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு கஷ்டப்படும் ( அவருக்குதான்) இந்த மனுஷன் , ஸ்கிரிப்டில் இப்படி சொதப்புகிறாரே என்று கோவம் கோவமாக வரும் . 
 
அந்தக் கோவத்தைப் போக்கி மீண்டும் தன்னை  ஆராதிக்க வைத்து இருக்கிறார் மணிரத்னம் 
 
செக்கச் சிவந்த வானம் ….. செம்மை செம்மை … ! செம்ம செம்ம .. !! செம செம !!!
 
மகுடம் சூடும் கலைஞர்கள் … 
———————————————-
மணிரத்னம், சிவா ஆனந்த்,  ஏ ஆர் ரகுமான், ஸ்ரீகர் பிரசாத், விஜய் சேதுபதி, சிலம்பரசன், அருண் விஜய், அரவிந்த்சாமி , ஜோதிகா , பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *