திருமதி கே. ராகவி தயாரிப்பில் விஷ்வா, நரேன், மிருனாளினி,மனோஜ் பாரதிராஜா , சவுமிகா, வாசவி , ஸ்டன் சிவா நடிப்பில் சுசீந்திரன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் சாம்பியன்.
வறுமை, சமூக விரோதிகள் என்ற கண் மூடித்தனமான பொது அடையாளம் …. இவைகளை கொண்ட மனிதர்கள் வாழும் வட சென்னைப் பகுதியில் கால் பந்து விளையாட்டுக்கு தனி மதிப்பும் இளைஞர்கள் மத்தியில் விருப்பும் உண்டு .
அப்படிப்பட்ட இளைஞன் ஒருவன் (விஸ்வா ) . கால் பந்து விளையாடும்போதே அப்பா ( மனோஜ் பாரதி ராஜா) உயிர் இழந்த நிலையில், விதவை அம்மாவுடன் (வாசவி) வாழும் அவனுக்கும் வறுமை மற்றும்ம் ஏரியா அடையாளங்களையும் மீறி கால்பந்து ஆசை மற்றும் திறமை . ஆனால் அவன் அம்மாவுக்கோ அதில் உடன்பாடி இல்லை . அதற்கு காரணம் உண்டு.
பகுதியின் தாதா(ஸ்டன் சிவா) ஒருவன், இளைஞர்களின் கால் பந்து ஆர்வத்தை , செவன்ஸ் எனப்படும் வன்முறை நிறைந்த முறையற்ற கால் பந்தில் திருப்பி அதில் இருந்து ரவுடிகளை உருவாக்கி தனக்கு சாதகமாக இயங்க வைப்பவன் .
நாயகனின் பள்ளிக் கால காதலி ( சவுமிகா) பிரிக்கப்பட்ட நிலையில் , அப்பாவின் நண்பரான கோச் சாந்தகுமார் ( நரேன்), விஷ்வாவை தேசிய அணியில் சேர்க்க பயிற்சியும் பாதுகாப்பும் தருகிறார் . கல்லூரியில் நாயகனுக்கு கிடைக்கும் பெண் தோழமை (மிருனாளினி)யாலும் பிரச்னைகள் .
இந்நிலையில் அப்பா இயல்பாக சாகவில்லை; கொல்லப் பட்டார் என்ற தகவல் தெரிந்து கொன்றவனை நாயகன் தேட, கோச் தடுத்து மடை மாற்றி விளையாட்டில் கவனம் செலுத்த வைக்க, விஷயம் அறிந்த கொலைகாரன் நாயகனுக்குக் குறி வைக்க , அப்புறம் என்ன ஆனது என்பதே படம் . இந்தியக் கால் பந்தின் வரலாறை தனது குரலில் சொல்லி நம்பகத்தன்மையோடு படத்தை துவங்குகிறார் இயக்குனர் சுசீந்திரன் . வட சென்னை கால் பந்து , அங்கு வாழும் மனிதர்களின் வாழ்நிலை சூழ்நிலைகளை யதார்த்தமாக பதித்து படத்தை நடத்துகிறார் . இறுதி வரை அது சிறப்பாக தொடர்கிறது .
அண்மையில் கால் பந்து பற்றி பல படங்கள் வந்திருக்கும் நிலையில் , கால் பந்துப் பின்னணியில் ஒரு சிறப்பான படம் பார்த்த நிறைவை தருகிறதுபடம் .
சுசீந்திரனின் யதார்த்தம் விலகாத, நேர்த்தியான , கனமான உணர்வை உருவாக்கும் சிறப்பான இயக்கம் அருமை.மத நல்லிணக்கம் , ‘ஒரு கோச் என்பவன் சும்மா கிரவுண்டில் பயிற்சி தருபவன் மட்டுமல்ல, அதற்கும் மேலே …’ இப்படி பல சிறப்பான படிமங்களை படம் முழுக்க கடத்தி இருக்கிறார் சுசீந்திரன் . சிறப்பு .
முதல் படம் என்பதே தெரியாமல் மிக சிறப்பாக நடித்துள்ளார் விஷ்வா . கால் பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று நிஜ வீரரைப் போல ஆடும் விதம் அவரது உழைப்பின் சிறப்பு என்றால் கோப சோகக் காட்சிகளில் நடிக்கும் விதம் அவரது நடிப்பின் சிறப்பு . அழுத்தமான குரல் . அதை சரியாக பயன்படுத்தவும் தெரிகிறது . நல்ல படங்கள் அமைந்து உயர உயர , உயர வாழ்த்துகள் .
சிறப்பான பாடல்கள் மட்டும் அல்லாது அற்புதமான இசை மொழியுடன் கூடிய பொருத்தமான பின்னணி இசையால் படத்துக்கு யானை பலம் சேர்க்கிறார் அரோல் கரோலி
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதைச் சூழல் மற்றும் பின்புலத்தை தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுக்கிறது .
நாயகிகள் மிருனாளினி , சவுமிகா இயல்பாக நடித்துள்ளனர் .
கொஞ்ச காட்சிகளே வந்தாலும் பாராட்ட வைக்கிறார் மனோஜ் பாரதிராஜா . இயல்பான நடிப்பு
வாசவியின் நடிப்பில் நெகிழ்ச்சி வாசம் .
நாயகனிடம் உண்மையை சொன்னதற்காக அநியாயமாக சாகும் வினோத் நடிப்பில் கவனிக்க வைக்கிறார் .
சேகரின் கலை இயக்கம் நம்மை கதை நிகழும் பகுதிகளுக்கே கொண்டு செல்கிறது .
தியாகுவின் படத் தொகுப்பு சிறப்பு . ஷாட்கள் வரிசைப் படுத்தப்பட்டு இருக்கும் விதம் வெகு சிறப்பு .வெங்கட் ராஜின் வசனம் எளிமையின் வலிமையைக் காட்டுகிறது . யு எம் கலையின் ஆடை தேர்வும் சிறப்பு .
படாடோபம் பளபளப்பு ஜிகினா கிகினா எதுவும் இல்லாத இயல்பான இயக்கம் மற்றும் படமாக்கலாலும் சொல்ல வந்த விசயத்தை அலட்டிக் கொள்ளாமல் எளிமையான சொல்லி விட்டுப் போய்க் கொண்டே இருக்கும் திரைக்கதையாலும் சாம்பியன் ஆகிறது ‘ சாம்பியன்’