ஸ்ரீகிரீன் புரடக்ஷன் சார்பில் எம் எஸ் சரவணன் வெளியிட , இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அதர்வா – ஆனந்தி இணை நடிப்பில் சற்குணம் இயக்கி இருக்கும் படம் சண்டி வீரன். இவன் சண்டியா? இல்லை வீரனா? பார்க்கலாம்
அருகருகே அமர்ந்த இரண்டு ஊர்கள் . ஒரு ஊரில் உள்ள குளத்தில் இருந்துதான் இன்னொரு ஊருக்கு குடிதண்ணீர் போக முடியும் என்ற நிலைமை . ஆனால் குளம் இருக்கிற ஊர்க்காரர்கள் தண்ணீர் தர மறுப்பதோடு, தண்ணீர் கேட்கும் ஊர் மக்களை கும்பல் கும்பலாக சென்று வெட்டிக் கொல்கிறார்கள்.
அதைத் தடுக்கும் முயற்சியில் கொல்லப்படுகிறார், தண்ணீர் தர மறுக்கும் ஊரைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் (போஸ் வெங்கட்). அதைப் பார்க்கும் அவரது ஒரே மகனான சிறுவன் அதன் பிறகு தன் அம்மாவுடன் (ராஜ ஸ்ரீ) காலத்தைச் செலுத்தி கஷ்டப்பட்டு வளர்ந்து பணம் சம்பாதிக்க சிங்கப்பூர் போகிறான்.
அங்கே பெரிதாக சம்பாதிக்க முடியாத நிலையில் — விசா காலத்துக்குப் பிறகும் திருட்டுத்தனமாக அங்கே தங்கிய குற்றத்துக்காக ரோத்தா அடி வாங்கி (கட்டி வைத்து ‘பின் புறத்தில்’ அடி பின்னுவது )- சொந்த ஊருக்கு வருகிறான் (அதர்வா) . சிறுவயது முதல் அவனுக்குப் பிடித்த ஓர் இளம்பெண்ணிடம் (ஆனந்தி) வம்படியாக சில வேலைகள் செய்து காதலை உணர்த்துகிறான்.
அந்தப் பெண்ணின் தந்தையான நெல் அரைக்கும் மில்லின் முதலாளி (லால் ) மிகுந்த அடாவடித்தனமான ஆள். அவரது நண்பர்தான் ஊர் பஞ்சாயத்துத் தலைவர் (ரவிச்சந்திரன்).
இருவரும் சேர்ந்து ஊர் மக்களிடம் ‘நம்ம ஊர் ;அசலூர்’ என்ற பிரிவினை உணர்வைத் தொடர்ந்து வளர்த்து, தம் ஊர் மக்களை ஏவல் அடியாட்களாக பயன்படுத்திக் காரியம் சாதிப்பவர்கள்.
பக்கத்துக்கு ஊருக்கு தண்ணீர் தரக்கூடாது என்று உறுதியாக இருப்பது இந்த இருவரும்தான். நாயகனின் அப்பா சாவுக்குக் காரணமான அந்த கலவரம் முதல் கொண்டு தண்ணீர் பிரச்னைக்கு மூல காரணமே இவர்கள்தான் . நாயகன் சிங்கப்பூரில் இருந்த போது அந்த மில்காரரின் மில்லில் தவிடு அள்ளும் வேலையைததான் நாயகனின் அம்மா செய்து கொண்டிருந்தாள்.
தண்ணீருக்குத் தவிக்கும் அந்தப் பக்கத்து ஊரைச் சேர்ந்த– தன்னோடு சிங்கப்பூரில் வேலை பார்த்த – நண்பன் ஒருவன் சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பது அறிந்து அவனைப் பார்க்கப் போகும் நாயகனுக்கு அந்த ஊரில் தண்ணீர் பிரச்னை எவ்வளவு மோசமாகி இருக்கிறது என்பது தெரிகிறது.
தன் ஊர் மக்களிடம் பேச வைத்து சமாதானம் செய்வதற்காக, அந்த ஊர் மக்களை வர வைக்கிறான் நாயகன் . ஆனால் அந்த சந்திப்பில் பக்கத்து ஊர்க்காரர்கள் பெருத்த அவமானத்துக்கு ஆளாகிறார்கள் .
இதற்கிடையில் தனது மகளை , ஒரு தவிட்டுக்காரியின் மகன் விரும்புவதை அறிந்து கொந்தளிக்கும் மில்காரர், நாயகனை கொலை செய்ய முடிவு செய்கிறார் .
அவமானத்துக்கு ஆளான – பாதிக்கப்பட்ட ஊரின் இளைஞர்கள், தங்களை அவமானப் படுத்திய மில்காரரையும் பஞ்சாயத்து தலைவரையும் கொலை செய்ய முயல்கின்றனர். . மில்காரர் தப்பிக்க , பஞ்சாயத்துத் தலைவர் அந்தக் கொலை முயற்சியில் படுகாயம் அடைகிறார் . விளைவாக தண்ணீர் கேட்கும் அந்த ஊரையே கொளுத்த வேண்டும் என்று மில்காரர் தலைமையில் வெறிபிடித்துக் கிளம்புகிறது கூட்டம்
அந்த ஊரைக் காப்பாற்றுவது எப்படி என்று நாயகன் பதறுகிறான் . அந்த ஊரை அழிக்கும் அதே கலவரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காக , நாயகனையும் போட்டுத் தள்ளி அவனுக்கும் தன் மகளுக்குமான காதலுக்கும் முடிவு கட்ட மில்காரர் களம் இறங்குகிறார் .
என்ன நடந்தது என்பதே சண்டி வீரன்.
நாயகனின் தந்தை ஊர்க் கலவரத்தில் கொல்லப்படும் அந்த முதல் காட்சியே மிகப்பிரமாதமாக எடுக்கப்பட்டு, நாம் பார்ப்பது ஒரு நிஜ கலவரம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நான்கைந்து காட்சிகள் மூலம் ஏற்படுத்த வேண்டிய அழுத்தத்தை அந்த ஒரு காட்சியை எடுத்த விதத்திலேயே ஏற்படுத்தி, முதல் காட்சியிலேயே முத்திரை பதிக்கிறார் இயக்குனர் சற்குணம்.
பி ஜி முத்தையாவின் கேமராவில் பசுமையான அந்த ஊர் அவ்வளவு அற்புதமாக விரிகிறது . தஞ்சைப் பகுதி மண்ணின் புவியியல் , கலாச்சாரம் , வாழ்க்கை முறை , இன்றைய மக்களின் தன்மை ஆகியவற்றை திரைக்கதைப் போக்குக்கு அப்பாற்பட்டு மிக யதார்த்தமாக பதிவு செய்கிறார் இயக்குனர் .
மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது , அது தொடர்பான மண் சார்ந்த நிகழ்வுகள் கொண்டாட்டங்கள் ,போட்டிகள் , விளையாட்டுகள் ,அது தொடர்பான சண்ட சச்சரவுகள் ஆகியவை நம்மையும் அந்த கிராமத்துக்குள் ஒரு நபராக புகுந்து வரும் உணர்வை ஏற்படுத்துகின்றன .அடடா ! தமிழ் சினிமாவில்தான் பெண்கள் சைக்கிள் ரேஸ் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு !
நாயகனை நாயகி கலாய்க்கும் அந்த ஆரம்பக் காட்சிகள் வெகு சுவாரஸ்யம் . (உதாரணமாக ”ரோத்தா அடி வாங்கினா, புள்ள பொறக்காதாமே ?” வசனம் )
செல்போனின் வீடியோ கால் மூலம் நாயகியின் காதல் நாயகனுக்கு தெரிய வருவதும் ,அதே வீடியோ கால் மூலம் அந்தக் காதல் மில்காரருக்கு தெரியவருவதும் திரைக்கதை சுவாரஸ்யங்கள்.
செல்போனில் வீடியோ ரிக்கார்டிங் ஆன் செய்து அதை கிரிக்கெட் ஸ்டம்பில் கட்டி அதில் 3ர்ட் அம்பயர் என்று எழுதி வைக்கும் அந்த உத்தி கில்லாடித்தனக் குசும்பு. .
இறந்து போன கணவருடன் பேசிக் கொண்டே, நாயகனின் அம்மா வாழ்வதை சொல்லும் காட்சிகள் நெகிழ்ச்சியூட்டுகின்றன. .
அலுங்குற குலுங்குற பாடல் இசை, வரிகள் , படமாக்கல் என்று எல்லாவகையிலும் தேன் ஊற்றுகிறது .
சின்னப் பொண்ணு – அந்தோணி தாசன் குரல்களில் மோகன்ராஜின் பாடல் வரிகளில் அருணகிரி இசையில் ஒலிக்கும் ”தாய்ப்பாலும் தண்ணீரும் ”. பாடல் செவியில் விழுந்து சிந்தையில் நுழைந்து உள்ளத்தை ஊடுருவி உருக வைக்கிறது .படத்தில் அதை அட்டகாசமாகப் பயன்படுத்தி இருக்கும் அதே நேரம்,
படத்தின் கடைசியில் அதை மீண்டும் பயன்படுத்தி, உலக அளவில் தண்ணீர்ப் பற்றாக்குறையின் விபரீதம் சொல்லும் புகைப்படங்களைக் காட்டி அதிர அடிக்கிறார்கள் .
இந்தப் பாட்டு படத்தை இன்னொரு உயரத்துக்குக் கொண்டு போகிறது .
பறந்து வந்து குளத்து மீனைக் கொத்திக் கொண்டு மேலே பறக்கும் பறவை, தட்டான் மேல் பறக்கும் தட்டான் , பின்னிப் பிணையும் பாம்புகள் என்று….. கிராமத்து இயற்கையின் அரிய நிகழ்வுகளை கேமராவுக்குள் கொண்டு வரும் தன்னுடைய சிரத்தையை இந்தப் படத்திலும் காட்டி இருக்கிறார் சற்குணம்.
ராஜசேகர் அமைத்து இருக்கும் சண்டைக்காட்சிகள் மிக சிறப்பாக வீரியமாக – இன்றைய சினிமாவில் அரிதாகிப் போன சில அருமையான நிகழுவுகளோடு இருக்கின்றன .
அதர்வா உருவத்தில் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார் . கஷ்டப்பட்டு சண்டை போடுகிறார் . உற்சாகமாக செய்கிறார் . ஆனால் இந்த பாழாப் போன நடிப்புதான் வர மாட்டேன் என்கிறது . காட்சியில் இயல்பாக இருக்க முதலில்அதர்வா பழக வேண்டும். உச்சரிப்பிலும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
காட்சிகளின் உணர்வை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியாத சூழ் நிலைகளில் ஓர் அப்பாவித்தனமான உலோகப் புன்னகையைப் போட்டு மறைத்து தப்பித்துக் கொள்கிறார் ஆனந்தி. இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும் .
நாயகன் நாயகி வாழும் ஊர் பச்சைப் பசேல் என்று இருக்க, பக்கத்து ஊரில் குடிக்கத் தண்ணியே இல்லை; அதாவது தஞ்சாவூருக்குப் பக்கத்தில் ஒரு ராமநாதபுரமா ? என்ற கேள்வியால் நம்பகத்தன்மை குறைபாடு ஏற்படுவதை, விளக்கம் கொடுத்து சரி செய்து இருக்கலாம்.
கிளைமாக்சை இன்னும் சிறப்பாக உருவாக்கி இருக்க வேண்டும் . வரதட்சணையாக ஊர்க் குளத்தின் உரிமை வேண்டும் என்பதையே அழுத்தமாக சொல்லி சீரியசாக படத்தை முடித்திருந்தால் கூட தப்பில்லை . அதையும் மீறி ஒரு டுவிஸ்ட் வேண்டும் என்றால் குளத்தின் உரிமை மில்காரரின் மனைவியிடம்தான் இருக்கிறது என்ற விஷயம் கூட ஒகே தான்.
ஆனால் அதை காமெடியாக்க முயலாமல் சீரியசாகவே எமோஷனலாக சொல்லி , தண்ணீர் வேண்டிய ஊர் மக்களுக்கு நல்ல தண்ணீர் போகிறது என்று சொல்லி படத்தை முடித்து இருக்கலாம் .
இது தண்ணீர்ப் பிரச்னையின் கதையா ? இல்லை பொருளாதார அந்தஸ்துக் குறைபாடு காரணமாக சிக்கலுக்கு ஆளாகும் காதலின் கதையா என்ற குழப்பம் ஏற்படுவதை தவிர்த்து இருக்கலாம் .
இந்தக் கதையைத்தான் சொல்ல வேண்டும் என்று முடிவான பிறகு இந்தக் கதையை எப்படி சொல்லி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்?
தாய்ப்பாலும் தண்ணீரும் பாடலோடு படத்தைத் துவங்கி அதில் டைட்டில் போட்டு , அப்புறம் படத்தை ஆரம்பித்து, அந்த சுற்று வட்டாரத்தில் அந்த ஊரில் மட்டும் தண்ணீர் பிரச்னை இருப்பதன் புவியியல் காரணங்களை விளக்க வேண்டும். கதாநாயகன் வளமான ஊரில் வாழ்பவனாக —தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் ஆட்களில் ஒருவனாக – இருக்க வேண்டும்
தண்ணீர் பிரச்னை ஏற்படும் ஊரைச் சேர்ந்தவளாக கதாநாயகி இருக்கவேண்டும். ஒரு சூழலில் தண்ணீர் சம்மந்தப்பட்ட ஓர் சம்பவம் காரணமாகவே இருவருக்கும் காதல் வர வேண்டும் . கதாநாயகி ஊரின் நியாயத்தை நாயகன் உணர வேண்டும். . அப்போதுதான் தன் தந்தையும் அந்த ஊருக்காக நியாயம் பேசிய காரணத்தால் கொல்லப்பட்டவர் என்பது அவனுக்கு தெரிய வேண்டும் .
தந்தையைக் கொன்ற கூட்டம் தன்னை தந்தையின் கருத்துக்கு எதிராகவே வளர்த்து இருப்பதை அவன் உணரவேண்டும் . எனினும் உடனடியாக எதுவும் செய்ய முடியாத சூழலில் அவன் இருக்க வேண்டும் தண்ணீர் பிரச்னையால் காதலும் காதலால் தண்ணீர் பிரச்னையும் மேலும் சிக்கலுக்கு ஆளாக வேண்டும் . இந்த சூழலில் தாய்ப்பாலும் தண்ணீரும் பாடம் படத்தின் காட்சிகளோடு முழுக்க ஒரு முறை அழுத்தமாக இடம்பெற வேண்டும் .
கடைசியில் பாதிக்கப்பட்ட ஊருக்கு நியாயம் கிடைத்தது .அதற்காக காதலர்கள் தங்கள் காதலை தியாகம் செய்தார்கள் அல்லது ஒருவரோ , இரண்டு பேருமோ தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர் என்று கூட சொல்லி இருக்கலாம். (அல்லது சுப முடிவாகவும் சொல்லி இருக்கலாம் )
அதன் பின்னர் இப்போது படத்தில் வருவது போல தாய்ப்பாலும் தண்ணீரும் பாடல் படத்தில் காட்டப்பட்டு, படத்தை முடித்து இருந்தால் , இது ஒட்டுமொத்த உலகத்துக்கான ஒரு பதிவாக மாறி இருக்கும் .
தான் சொல்ல வருவதை மிக அழகாக அழுத்தமாக சொல்லி படமாக்கலில் மயங்க வைக்கிறார் சற்குணம் . ஆனால் என்ன சொல்ல வேண்டும் என்பதில் அவரே மயங்கி இருக்கிறார் . அவற்றையும் சரி செய்து படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்கி இருக்கலாம்.
எனினும் ஏ சி திரையரங்கில் சுற்றும் புழுங்கிய குளிர்காற்றுக்கு மத்தியிலும் தஞ்சை மண்ணின் கிராமத்துத் தென்றலை உணரவைக்கும் வகையில் சண்டி வீரன் கவனம் கவர்கிறான்
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————–