இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா, கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க , நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் படத்தை வெளியிடுகிறார் .
ஒரு காவல் வீரனின் காதல் வாழ்க்கை அதன் பின்னணியில் ஜாதி மோதல் என்று இந்தப் படம் இருக்கும் என்பது அதன் முன்னோட்டத்தைப் பார்த்தால் தோன்றுகிறது
பாடல்கள் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட முன்னோட்டத்தில் விதம் விதமான கத்திகள் உருவப்படுகின்றன. காதல் பொங்கி வழிகிறது . தாய்ப் பாசம் இருக்கிறது .
அருணகிரி இசையில் மணி அமுதன் எழுதிய ”அலுங்குற.. குலுங்குற…” பாடல் வரிகள் , மெட்டு, இசை , படமாக்கப்பட்ட விதம் எல்லாவற்றாலும் வசீகரித்தது. சற்குணத்தின் முதல் படமான களவாணி பாணியில் தஞ்சைப் பின்னணியில் பசுமையும் செழுமையுமாக விரிகிறது படம் . ஸ்லோ மோஷனில் பறவை மீனைக் கொத்தும் சற்குணம் ஃபேவரைட் காட்சிகளும் படத்தில் இருந்தன.
“படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத் துவக்கத்தில் படம் திரைக்கு வரும் ” என்றார் ஸ்ரீ கிரீன் சரவணன்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் பேசும்போது ” படம் தஞ்சை மாவட்டப் பின்னணியில் எடுக்கப்பட்டு இருந்தாலும் காட்சிகளைப் பார்க்கும்போது எங்கள் மதுரை ஞாபகம் வருகிறது ” என்றார் .
”பரதேசி படம் முடிஞ்ச உடனேயே , பாலா அண்ணன் என் கிட்ட ‘நாம இன்னொரு படம் பண்ணுவோம்’ன்னு சொன்னார் . ஒரு நாள் என்னை போன் . என்னை போன் பண்ணி வரச் சொல்லி “சற்குணம் சொன்ன கதை ஒண்ணு ரொம்ப நல்லா இருக்கு. நான் தயாரிக்கறேன்.நீ நடின்னு சொன்னார் .
பரதேசி படத்தில் நடிக்கும்போது தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனர் (பாலா) படத்தில் நடிக்கிற பெருமை இருந்தது . இந்த சண்டி வீரன் படம் மூலமா தேசிய விருது பெற்ற இரண்டு டைரக்டர்கள் (பாலா, சற்குணம்) உருவாக்கும் படத்தில் நடிக்கிற பெருமை கிடைச்சு இருக்கு ” என்ற அதர்வா ,
தொடர்ந்து , “படத்துல தனக்கு டான்சே இல்லன்னு ஆனந்தி ஷூட்டிங்ல டல்லா இருந்தது. ஆனந்திகிட்ட போய் ‘நியூசிலாந்துல ஒரு டூயட் பாட்டு எடுக்கப் போறோம். அதுல நீதான் ஃபுல்லா டான்ஸ் ஆடணும்’ன்னு சொல்லிட்டோம். அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணு ரொம்ப உற்சாகமா படத்துல நடிச்சுக் கொடுத்தது . கடைசியாதான் உண்மை சொன்னோம்” என்று சொல்ல ,
“ஆமா சார். என்னை ஏமாத்திட்டாங்க” என்ற ஆனந்தி , ஆனாலும் பாலா சார் தயாரிக்கிற படத்தில் சற்குணம் சாரின் இயக்கத்தில் நடிப்பது சந்தோசம் “என்றார்
இயக்குனர் சற்குணம் “பாலா சார் எவ்வளவு பெரிய டைரக்டர் . அவர் தயாரிக்கிற படத்தை இயக்குவதை விட வேறென்ன பெருமை வேண்டும் .
இந்தப் படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது . திரைக்கதை முழுக்க முழுக்க கற்பனை “என்றார் .
சண்டி வீரன் வெற்றி வீரனாக இருக்கட்டும் .