வால்மீகி படத்தில் நடித்த அகில் கதாநாயகனாக நடிக்க நான்கைந்து வருடம் முன்பு எம்.பாலசுப்ரமணியம் மற்றும் ஆர். சிவக்குமார் ஆகியோரின் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் கறுப்பர் நகரம்
ஆரம்பகால சென்னையின் அடித்தளமான வடசென்னை மக்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரப் பின்னணியில் அமைந்த படம் அது.
வடசென்னை பகுதியில் வாழும் ஒரு இளைஞன் நன்கு படித்து முன்னேறி தனக்கு நல்ல வாழ்வு அமைந்து அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அங்கேயே வாழும் தன் மக்களுக்காக சில பிரச்னைகளில் சிக்கி .. அப்புறம் என்ன ஆனது என்ற கதைக் களத்தில் உருவான அந்தப் படத்தின் இயக்குனர் நடராஜ் கோபி .
இந்த நடராஜ் கோபியின் உதவியாளராக அதே படத்தில் பணியாற்றிவர் ரஞ்சித் .
கறுப்பர் நகரம் படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பு உதவியாளர் ரஞ்சித்துக்கு படம் கிடைத்து அந்த படம் சுமாராக ஓடி பாராட்டுதல்களை பெற்றது.
அந்தப் படம்தான் தினேஷ் நடித்த அட்டைக் கத்தி.. அதன் மூலம் அட்டைக்கத்தி ரஞ்சித் என்றே அறியப்பட்டார் அவர்.
அட்டைக் கத்தி படத்திலேயே கறுப்பர் நகரம் படத்தில் உள்ள நான்கு காட்சிகள் இருக்கிறதாம். அது பற்றி அப்போது தனது முன்னாள் உதவியாளரான அட்டைக்கத்தி ரஞ்சித்திடம் கறுப்பர் நகரம் படத்தின் இயக்குனர் நடராஜ் கோபி கேட்டபோது “இல்ல சார். சும்மா.. இன்ஸ்பிரேஷன்ல வந்துடிச்சி .. சாரி.. ” என்று இழுத்து சமாளித்திருக்கிறார் ரஞ்சித் .
”சரி… நம்ம சிஷ்யப் பிள்ளைதானே ..” என்று விட்டுவிட்டார் நடராஜ் கோபி.
அதுதான் தப்பாப் போச்சு !
கறுப்பர் நகரம் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே போக , பார்த்தார் ரஞ்சித் …!
அடுத்து கார்த்திக்கு கதை சொல்ல தனக்கு வாய்ப்புக் கிடைத்ததபோது, மனசாட்சியே இல்லாமல் கறுப்பர் நகரம் படத்தின் கதையை அப்படியே சொல்ல , அது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மெட்ராஸ் என்ற பெயரில் தயாராகி ரிலீஸ் வரை வந்து விட்டது.
மெட்ராஸ் படத்தின் ஸ்டில்கள் போஸ்டர்கள் பார்த்து சந்தேகப்பட்டு படத்தின் கதையைக் கேட்டதும், ஆடிப் போன கறுப்பர் நகரம் படத் தயாரிப்பாளர் பாலசுப்ரமணியம் இப்போது மெட்ராஸ் படத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் .
இனி இழுத்துக் கொண்டு கிடக்க வேண்டியதுதான்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ரஞ்சித் கதை சொல்லும்போதே இதே கதையில் கறுப்பர் நகரம் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி இருப்பது கார்த்திக்கும் தெரியுமாம் .
ஒருவேளை புகாரில் சமாதானம் எட்டப்பட்டு கறுப்பர் நகரம் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்கலாம் .
ஆனால் மெட்ராஸ் வெளிவந்த பிறகு கறுப்பர் நகரம் படத்தின் கதி?
கறுப்பர் நகரம் வெளுத்துப் போனால் அதன் இயக்குனர் நடராஜ் கோபிக்கு ஏற்படும் பின்னடவுக்கு என்ன நியாயம் கிடைக்கும் ?
ஜஸ்ட், நத்திங் !
இப்படியாக தொழில் கற்றுக் கொடுத்த குருநாதருக்கே குழிபறித்து விட்டாரே என்று அட்டைக் கத்தி , மெட்ராஸ் படங்களின் இயக்குனரான
ரஞ்சித்தை அருவருப்பாகப் பார்க்கிறது கோடம்பாக்கம் .
கலிகாலத்தில் குருவாவது குந்தாணியாவது என்பாரோ ரஞ்சித் ?