கரிகாலன், ரிஷா ஹரிதாஸ், நளினிகாந்த், பசுபதி ராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி ஆகியோர் நடிப்பில் வைகறை பாலன் இயக்கி இருக்கும் படம் சீயான்கள்.
தேனி மாவட்ட கிராமம் ஒன்றில் வாழும் ஏழு ‘பெருசு’கள் சடையன்( நளினிகாந்த்), ஒண்டிக்கட்டை (பசுபதிராஜ்), மிலிட்டரி (ஈஸ்வர் தியாகராஜன்),செவ்வாழ(துரை சுந்தரம்), மணியாட்டி(சமுத்திர சீனி) ரஷ்யா( சக்திவேல்) செவனாண்டி (நாராயணசாமி) ஆகியோர்.
எழுவரும், எழுந்த வயது முதல் கூட்டுக்காரர்கள், அதாவது நண்பர்கள்.
அவரவர் வாழ்வின் ஆசைகள், ஏக்கங்கள், புறக்கணிப்புகள், பரிதாபங்களின் போது, ஒருவருக்கு ஒருவர் ஆறுதலும் துணையும். மருந்துக் கடைக்காரராக இருந்து சேவை உள்ளத்தால் டாக்டர் என்றே அழைக்கப்படும் இளைஞர் (கரிகாலன்) . சித்தி கொடுமையால் பாதிக்கப்படும் இளம்பெண் மலர் (ரிஷா ஹரிதாஸ்). இருவருக்கும் காதல்.
சடையனுக்கு ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க ஆசை. காதல் தோல்வியால் திருமணம் செய்யாமல் வாழ்பவர் ஒண்டிக்கட்டை. கம்யூனிச சிந்தனையாளர் ரஷ்யா. சற்றே சபலப் பேர்வழி செவனாண்டி.
இந்த சீயான்கள் அனைவரும் பல்வேறு வகைகளில் சொத்து, முதுமை, பயனின்மை போன்ற காரணங்களால் பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள் ஆகியோரால் பாதிக்கப்படும் நிலையில் , புதுமையான நிகழ்ச்சிகளைத் தேடி வரும் கே எல் டிவி என்ற தொலைக்காட்சி இவர்கள் ஊருக்கே வந்து இவர்களை வைத்து ஒரு சமையல் நிகழ்ச்சி நடத்த, அது விருப்பக் குறிகளை அள்ளிக் குவிக்க,
அதன் நீட்சியாக இவர்கள் சென்னைக்கு வர, எதிர்பாராத ஒரு விபத்து!
இந்த மூத்தோர்களின் கனவுகள், கடமைகள் என்ன ஆனது? இழப்புகளும் ஆறுதலும் எது ? அதன் மூலம் இந்த சமூகம் பெறப் போகும் ஒரு நெகிழ்வான நல்ல செய்தி என்ன?
— என்பதே இந்த சீயான்கள்.
இளைஞர்களின் நட்பைக் குறித்து ஆயிரம் படங்கள் வந்து விட்டன . ஆனால் மூத்தோர்களின் நட்பைச் சொல்லும் வகையில் ஒரு கதை எழுதி அதை கிராமியப் பின்னணியில் மண் வாசனையோடு படமாக்கி இருக்கும் வகையில் பாராட்டுகளின் விடியலுக்கு உரித்தாகிறார் இயக்குனர் வைகறை பாலன் . பசுபதி ராஜ், நளினி காந்த் , ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம்,சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி என்று அத்தனை சீயான் நடிகர்களும் நடிப்பில் குறை வைக்காமல் நிறைகிறார்கள்.
மூத்தோருக்கு ஏற்படும் புறக்கணிப்புகள், குறிப்பாக மருமகளால் அறையப் பட்டு தூக்கில் தொங்கும் சீயானின் முடிவு கலங்கடிக்கிறது .
சடையனுக்கும் அவர் மனைவிக்குமான முதியோர் காதல், ஊடல், அந்த தண்டட்டி விவகாரம், மகள் தமயந்தியின் பாத்திரப் படைப்பு உருக வைக்கிறது .
சில காட்சிகளே வந்தாலும் தமயந்தியாக நடித்து இருப்பவர் .. அந்த முகமும் நிறமும் குரலும் நடிப்பும்…. ஆஹா….மனசில் சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்!
பசுபதிராஜ் கதாபாத்திரத்தின் முதியோர் காதல் வெற்றி அட்டகாசமான பகுதி எனில் அதை இயக்குனர் கையாண்ட விதமும் அபாரம் . சபாஷ்
மிலிட்டரி சீயான் அபாரமான பாத்திரப் பொருத்தம்
ஜொள்ளு சீயானுக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் வைத்திருக்கலாம்.
ரஷ்யா சீயானை விட்டு சில பொதுவுடைமைக் கருத்துகளை தெளித்து இருக்கலாம்.
கரிகாலனுக்கு படத்தை தயாரித்ததை விட நடித்ததுதான் கஷ்டமான விஷயமாக இருந்து இருக்க வேண்டும். என்றாலும் சமாளித்துவிட்டார்.
நாயகி ரிஷா ஹரிதாஸ் இயல்பாக அழகாக் பொருத்தமாக இருக்கிறாரே , படங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதே என்று பார்த்தால், விரைவில் அவருக்கு கல்யாணமாம். ( அடப் போங்கப்பா.. கோடம்பாக்கம் லாஸ்ட் ஒன் மோர் விக்கட் !)
பாடலாசிரியர் முத்தமிழ் இசை அமைப்பாளராகவும் அறிமுகம் ஆகி இருக்கிறார். மண்வாசனை மிக்க இசை, அந்த டூயட் பாடல் ஆகா …
பாபு குமாரின் ஒளிப்பதிவு லோக்கேஷன்களை யதார்த்தமாக வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்று இருக்கிறது..
முதல் பாதியில் கொஞ்சம் தள்ளாடினாலும் இரண்டாம் பகுதியில் ‘தெளிவு’ ஆகி விடுகிறார் படத் தொகுப்பாளர் மப்பு ஜோதி பிரகாஷ் . கடைசி நீர நீளக் குறைப்பின் வடுக்கள் நிறைய தெரிகிறது.
விபத்து நடக்கும் காட்சி, விசிலடிக்கும் சீயானை தவற விடுவது உட்பட பல காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம் .
பொதுவாகவே தெளிவும் அழுத்தமும் கூடக் குறைவுதான்.
எனினும் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய காலத்தில் சொல்லி இருக்கிறார்கள் . கடைசி காட்சிகள் கலங்கடிக்கின்றன.
மொத்தத்தில்,
சீயான்கள்…… நம்மவர்கள் .