வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கட் நிறுவனமும் எஸ் பி பி சரணின் கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனமும் தயாரிக்க,
ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன் , விஜய் வசந்த், நிதின் சத்யா , அரவிந்த் ஆகாஷ் , விஜய லட்சுமி உள்ளிட்ட சென்னை 28 படத்தில் நடித்த அத்தனை முக்கிய நடிக நடிகையரோடு,
சனா அல்தாப், அஞ்சனா கீர்த்தி, மகேஸ்வரி, சாந்தினி , கிருத்திகா, மனிஷா யாதவ் ஆகியோர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் படம் சென்னை 28 பார்ட் டூ
சென்னை 28 முதல் பாக காலமான 2007க்குப் பிறகு இந்த ஒன்பது ஆண்டுகளில் நண்பர்கள் பலருக்கும் திருமணம் ஆகி விடுகிறது.
ரகு (ஜெய்) தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனுராதா என்ற பெண்ணை (சனா அல்தாப் ) விரும்புகிறான் திருமணம் நிச்சயம் ஆகிறது.
பெண்ணின் அப்பா (தயாரிப்பாளர் டி சிவா ) கல்யாணத்தை தனது சொந்த ஊரான தேனியில் வைத்துக் கொள்ள விரும்ப, அப்படியே நட்பு மற்றும் உறவுக் கூட்டம் தத்தம் குடும்பத்தோடு போகிறது .
எல்லாம் ககலப்பாகப் போகும்போது , முதல் பாகத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிய அரவிந்தைப் (அரவிந்த் ஆகாஷ் ) பார்க்கிறார்கள். அங்கே ஒரு கிரிக்கெட் அணி வைத்து இருக்கிறான்
ஆனால் அதே ஊரைச் சேர்ந்த மருது பாண்டி என்பவன் (வைபவ்) ஒரு கிரிக்கெட் அணி வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் போங்கு ஆட்டம் ஆடி, அரவிந்த அணியை தோற்கடிக்கிறான்.
எல்லோரும் சேர்ந்து ஆடி தன் அணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்கிறான் . நண்பர்கள் சம்மதிக்க, லீக் ஆட்டத்தில் அரவிந்த் அணி கலக்குவது கண்டு பயப்படும் மருது பாண்டி ,
இரவு நேரத்தில் தண்ணி அடித்துக் கொண்டு இருக்கும் ஹீரோ முதலிய நண்பர்களுக்கு ஓர் ஆட்டக்காரியை (மனிஷா யாதவ்) அனுப்பி ஆட விட்டு ,
போதையில் ரகு ஆட்டக்காரிக்கு தாலி கட்டுவது போல போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் எல்லோருக்கும் அனுப்ப, ரகு – அனு கல்யாணம் நின்று போகிறது .
தொடரும் சண்டையில் நண்பர்கள் பிரிகிறார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா ? ரகு- அனு காதல்– கல்யாணம் என்ன ஆனது , கிரிக்கெட்டில் அரவிந்த் அணி என்பதே படத்தின் கதை என்று சொல்லும்போதே …
என்ன நடந்திருக்கும் என்று புரியும் அல்லவா ? அதுதான் இந்த சென்னை 28 பார்ட் டூ .
முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியும் பெயரும்ம் இரண்டாம் பாகத்துக்கு அகலமான வாசலை திறந்து வைக்கிறது . ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில் நுட்ப விஷயங்கள் அபாரம . நகர்ப் புறத்தில் நடந்த கிரிக்கெட் பற்றிய கதையை கிராமத்துக் கொண்டு போனது சாமர்த்தியம் . சிவா சில பல குபீர் சிரிப்புகளுக்கும் பிரேம்ஜி சில மென் புன்னகைகளுக்கும் காரணம் ஆகிறார்கள் .
முதல் பாகத்தில் பேட்டை தொலைத்த விஜய் வசந்தின் காமடியை இதிலும் நுழைத்து இருப்பது கல கல .
ஆனால் நண்பர்கள் குடித்து விட்டு ஆடுகிற போதே மொத்தக் கதையும் புர்ந்து விடுவதால் அதன் பிறகு படம் … ஹ்ஹ்ஹ்ஆ……வ்வ்வவ்வ்வ்!
அதே போல லீக் மேட்சை அவ்வளவு சீரியசாகக் காட்டுவதும் முடிவை யூகிக்க வைத்து விடுகிறது. அப்படி விட்டேத்தியாக போய் மூன்றாம் பாகத்துக்கு அடி போட்டு முடிகிறது படம் . என்னதான் நட்பு கிரிக்கெட் என்பவை முக்கியம் என்றாலும் , இந்தப் படத்தின் கதை எனது கல்யாணம் வரை போன காதலர்களுக்கு ஏற்படும் பிரச்னைதான்
அந்தக் காதலை ஆரம்பத்தில் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து சொல்லி இருக்கலாம் . சும்மா சம்மந்த சம்மந்தமில்லாமல் ஒரு டூயட் பாட்டை — அது என்னதான் அழகாக இருந்தாலும்
எடுத்துப் போட்டு விட்டால் போதுமா ? அந்த முக்கியத்துவம் இல்லாததால் திரைகதையில் உள்ள முக்கிய பிரச்னைக்கு அழுத்தம் கிடைக்கவில்லை . தவிர முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்லை .
மொத்தத்தில் சென்னை 28 part 2 ….. டக் வொர்த் லீவிஸ் விதி கையில் தலைவிதி.