மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சியங்களோடு சென்னைக்கு வந்து தங்கி போராடி வரும் உதவி இயக்குனர் ஒருவர் (பாபி சிம்ஹா), நடிப்பு ஆசை உள்ள சில இளைஞர்கள் , சினிமா ஆசை மட்டுமல்லாது பிழைப்புக்காக சென்னை வரும் நபர்கள்….
இவர்களில் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் , ஊரில் மனைவி குழந்தையை விட்டு விட்டு சென்னையில் தனியாக வசிக்கும் நபர்கள் , இவர்கள் சரியான தங்கும் இடம் அமையாமல் கஷ்டப்படுவதை சொல்லும் கதை . ஒவ்வொருவருக்கும் உள்ள கிளைக் கதைகள்…. பிரச்னைகள்….. ஒன்றோடொன்று இணைந்தும் பிரிந்தும் வளர்வதே இந்தப் படம்.
இதில் படித்து வேலைக்கு செல்லும் ஒருவனின் அறையில் தங்குவதால் அவனது தவறுக்கெல்லாம் உடந்தையாகி கஷ்டப்படுகிறார்கள் சினிமா ஆசை கொண்ட இளைஞர்கள் . பெண்களை காமத்துக்கு பயன்படுத்துவது வழக்கமாக கொண்ட அந்த வசதியான இளைஞன் விவாகரத்தான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு அவள் கர்ப்பம் ஆனதும் கை விடுகிறான்.
ஒரு குடிகார மனிதர் குடும்பத்தை ஊரில் விட்டு விட்டு பிழைப்புக்காக சென்னைக்கு வந்து அவமானங்களை சந்தித்து , சேர்த்த பணத்தோடு ஊருக்குப் போகக் கிளம்பும்போது…
இப்படி சில கதைகள் ஒவ்வொன்றும் எப்படி முடிகிறது என்பதை சொல்கிறார் இயக்குனர் .
மிக இயல்பாக நடித்துள்ளார் பாபி சிம்ஹா . பெண்களை வீழ்த்தும் பாத்திரத்தில் அல்போன்ஸ் புத்திரன் நைஸ் . அவனிடம் ஏமாறும் பெண்ணாக நடித்து இருப்பவர் (சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங் என்றாலும் கூட ) நன்றாகவே நடித்துள்ளார் .
அல்போன்ஸ் புத்திரனை காட்டிக் கொடுக்கும் நண்பனாக நடித்து இருப்பவரும் படம் முழுக்க அசத்துகிறார்.
நான்கைந்து பேர் ஒன்றாக தங்கும் பேச்சிலர் ரூமில் ஏற்படும் சண்டைகள், பிரச்னைகள், நட்புகள் , சமாதானங்கள் , சின்னச் சின்ன கால்வாரல்கள் ஆகியவற்றை சிறப்பாக காட்சிப் படுத்துகிறார் இயக்குனர். நாமும் அந்த அறையில் ஒரு நபராக இருந்து வேடிக்கை பார்ப்பது போன்ற பிரம்மை .
காட்சி அமைப்புகளில் யதார்த்தத்தின் கைகளை அழுத்தமாக பற்றும் இயக்குனர் , திரைக்கதையில் யாதார்த்தத்தை வெகுவாக கோட்டை விடுகிறார் . . பேச்சலர்களுக்கு வீடோ அறையோ கிடைப்பது ஒரு காலத்தில் ரொம்ப கஷ்டம் . இப்போ பணம் மட்டுமே விஷயம் . இன்னொரு பக்கம் நல்ல பையன்கள் என்றால் பேச்சலர்களுக்கு வீடு கிடைப்பது கடந்த இருபது வருடமாகவே பிரச்னையாக இருந்ததில்லை.
அம்மா சீரியஸ் என்று தந்தி வந்து ஊருக்குப் போகையில் , போன் செக்ஸ் காதலி நிஜ செக்சுக்கு அழைக்க, அவளோடு போய் விடுகிறான் அந்த வசதியான இளைஞன். முகம் பார்க்காமலே அம்மா இறந்து போகிறார் . அதன் பின்னர் ஒரு பெண்ணை ஏமாற்றி அவளை கர்ப்பமாக்குகிறான். கடைசியில் அவனுக்கு வரும் மாற்றத்தில் அம்மா மரண சம்பவத்தை திரைக்கதையில் இணைக்க வேண்டாமா ? இப்படி எதுவும் இல்லாமல் உதிரி உதிரியாக நிற்கிறது கதைப் போக்கு.
அப்பாவிப் பெண்ணை அநியாயமாக ஏமாற்ற முயல்பவனை காட்டிக் கொடுக்கிறான் சக நண்பன் . அந்த நண்பனே பின்னர் ” நான் என் நண்பனைக் காட்டிக் கொடுத்து துரோகம் பண்ணிட்டேன் . அவன்கிட்ட மன்னிப்புக் கேட்கணும் ” என்கிறான் . அதுவும் அவனிடம் போனால் மது கிடைக்கும் என்பதற்காக . கதாபாத்திரச் சீர்குலைவு . இது போன்ற மாற்றங்கள் ரசிகனுக்கு மனோ ரீதியாக அலைக்கழிப்பையே ஏற்படுத்தும் .
சிவாஜி பாடல்களின் பின்னணியில் உருவாகும் பாபி சிம்ஹாவின் காதலும் அது சொல்லப் படாமலே போகும் விதமும் அழகிய கவிதை .
எளிமை இந்தப் படத்தின் பலம். அதை அப்படியே மனசுக்குள் கொண்டு போகிறது வினோத் ராமசாமியின் ஒளிப்பதிவு .
சென்னை உங்களை ….. வரவேற்கிறது .