இயக்குனர் சேரன் ஆரம்பித்த C2H திட்டம் எல்லாவிதமான செட்டப்கள் மற்றும் கெட்டப் களோடு வரும் பொங்கல் முதல் வலிமையாக வசமாக வாகாக , களம் இறங்குகிறது
இதன்படி ‘சேரன் இயக்கிய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படம் வரும் பொங்கல் அன்று C2H முறையில் வெளியாகிறது . அதே தினம் தமிழகம் முழுக்க 75 தியேட்டர்களில் மட்டும் இந்தப் படம் வெளியாகும் . (அதிக தியேட்டர்களில் வெளியிட்டால் C2H முறையிலான சி டி விற்பனை பாதிக்கும் என்பதால் இந்தக் கட்டுப்பாடு ). ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை மட்டுமல்ல…. C2H மூலம் வெளியாகும் எல்லாம் படங்களும் இப்படி தமிழகத்தில் 75 தியேட்டர்களில் மட்டும் வெளியாகும்.
C2H முறையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் .
ஒரு சிடியின் விலை 50 ரூபாய் . பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் 75 ரூபாய் முதல் 1௦௦ ரூபாய் வரை விலை போகலாம். சில வாரங்களில் மிக எளிய படங்கள் எனில் 50 ரூபாய்க்கு இரண்டு படங்கள் வழங்கப்படும்
சேரனின் ட்ரீம் தியேட்டர் நிறுவனம் தயாரிக்க சர்வா, நித்யா , பிரகாஷ் ராஜ் , சந்தானம் நடிப்பில் சேரன் இயக்கி இருக்கும் இந்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை அடுத்து….
எஸ் எஸ் மூவி மேக்கர்ஸ் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் ஜெய் , பூர்ணா நடிப்பில் பார்த்தி பாஸ்கர் இயக்கிய ‘அர்ஜுனன் காதலி’……
நிக்கி புரடக்ஷன்ஸ் தயாரிக்க புதுமுகங்கள் நடிப்பில் பாலன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’…
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க அட்ட கத்தி தினேஷ், ஹரி பிரியா நடிப்பில் சசிதரன் இயக்கிய ‘வாராயோ வெண்ணிலாவே ‘…
சேரனின் தாமினி சினியோகிராபி தயாரிக்க பசுபதி, சேரன் , நாசர், நித்யா மேனன் நடிப்பில் நடிகை ரோகினி இயக்கிய அப்பாவின் மீசை ஆகிய படங்கள்…
இதே வரிசையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவருகின்றன.
வேற்று மாநிலங்களில் இந்தப் படங்கள் செட் டாப் பாக்ஸ் மூலம் வெளியாகும் .{” ஒரு முறை பணம் கட்டினால் 24 மணி நேரத்துக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .– சேரன்”)
அயல்நாடுகளில் ஆன் லைன் மூலம் பணம் கட்டி 5.1 தரத்தில் பார்க்கலாம்.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப விரும்புவோருக்கு படம் வெளியாகி இரண்டு வாரத்துக்கு பிறகு ‘ஒரு முறை ஒளிபரப்பு அனுமதி’ என்ற திட்டத்தின்படி படம் தரப்படும் . லோக்கல் கேபிள் சேனலில் போட விருபுவோருக்கும் அப்படியே தரப்படும். எனினும் படத்தின் உரிமை எப்போதும் தயாரிப்பாளர் வசமே இருக்கும்.
பேருந்துகளில் காட்ட விரும்புவோருக்கு நியாயமான ஒரு தொகைக்கு படம் வழங்கப்படும் . கிளப்புகளில் காட்ட அனுமதி இல்லை .
படங்கள் பற்றி தமிழகம் முழுக்க போஸ்டர் ஓட்டும் இடங்கள் நிரந்தரமாக ஒப்பந்தம் செய்யப்படும் . அங்கு C2H பட போஸ்டர்கள் மட்டுமே இருக்கும்.
C2H திட்டத்துக்காக தமிழகம் முழுக்க 154 விநியோகஸ்தர்களும் 5000 முகவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
விற்பனை செய்ய வரும் ஒவ்வொருவரிடமும் C2H அளித்த அடையாள அட்டை , நிறுவனத்தின் பிரத்யேக கைப்பை இருக்கும் . இது அல்லாத யாரிடமும் மக்கள் படம் வாங்கத் தேவை இல்லை .
மக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு சி டி யும் சீல் செய்யப்பட்டு பார் கோடுடன் இருக்கும் . பிரிக்கப்பட்ட சிடிக்களை மக்கள் வாங்க வேண்டாம் .
குடுயிருப்புகள் , நிறுவனங்கள் ஆகியவற்றில் முகவர்கள் நுழைவதற்கான அனுமதியை C2H நிறுவனமே வாங்கித் தரும்.
முகவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் விண்ணப்பக் கடிதம் அளிக்கப்படும்.
தியேட்டர் கிடைக்காமல் இருக்கும் எல்லா படங்களையுமே C2H நிறுவனம் வெளியிடப்போவது இல்லை.
தயாரிப்பாளர் ஞானவேலு, வழக்கறிஞர் ராஜவேலு, இயக்குனர்கள் சமுத்திரக்கனி , சசி , சுப்பிரமணிய சிவா, அகத்தியன், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் , நடிகை அனுபமா குமார் கொண்ட குழுவால் தரமானது என்று தேர்ந்தெடுக்கும் படங்களை மட்டுமே C2H நிறுவனம் வாங்கி வெளியிடும் . தரமில்லாத படங்கள் வராது.
C2H நிறுவனம் நிறுவனத்தின் சிடியை வாங்கி அனுமதி பெறாமல் யாராவது காட்டும்போது அவர்களை சட்டப்படி எதிர்கொள்ளவும் முகவர்களுக்கு பாதுகாப்பு தரவும் வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர பாண்டியன் , ஹரி ஷங்கர் ஆகியோர் தலைமயில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன ‘
— பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் தெளிவாக திட்டவட்டமாக சொன்ன சேரன் , ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை பற்றிய ஒரு ஈர்ப்பான முன்னோட்டத்தையும் C2H நிறுவனம் பற்றிய– சென்ட் ராயன் நடித்த — இரண்டு விளம்பரப் படங்களையும் திரையிட்டுக் காட்டினார்.
ஒரு விளம்பரப்படத்தில் திருட்டு விசிடி விற்கும் ஒருவனின் மகளை பள்ளிக் கூடத்தில் எல்லோரும் திருடன் மகள் என்று சொல்ல, அவமானப்படும் அவள் கண்ணீரோடு தனது தந்தையிடம் வந்து முறையிட்டு சாமி படங்களின் முன்னாள் ”இனி திருடாதே அப்பா” என்று சத்தியம் வாங்க,
அவன் மனம் திருந்தி சேரனின் C2H நிறுவனத்தில் இணைவது போன்ற படம்…. ம்ம்ம்ம்ம்ம் ……. சைக்காலஜிகல் டச் !
”எங்கள் C2H நிறுவனம் தமிழகம் முழுக்க நடத்திய ஆய்வில் 64 சதவீதம் பேர் எங்களின் நிறுவனத்துக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
அவர்களுக்கு எந்த மனக்குறைவும் வரக் கூடாது என்பதற்காக, ‘வாடிக்கையாளர்களிடம் பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்வது/’ என்பது பற்றிய ஒரு பயிற்சி முகாமை எங்கள் முகவர்களுக்கு சென்னை கோவை சேலம் விழுப்புரம் திருச்சி மதுரை ஆகிய இடங்களில் நடிகர் கிட்டியைக் கொண்டு நடத்துகிறோம் . இது போன்ற பல பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துய அனுபவசாலி அவர்” என்று குறிப்பிடும் சேரன்,
தொடர்ந்து “ஐம்பது ரூபாய் மதிப்புள்ள 25 லட்சம் சிடிக்களை ஒவ்வொரு வாரமும் விற்பனை செய்வது எங்கள் ஆரம்பகட்ட இலக்கு ” என்கிறார் .
இலக்கு விரியட்டும் ! வாழ்த்துகள் !!