பத்திரிக்கையாளர்களைக் கேலி செய்த ராதிகா , சிம்பு

Copy of simbu rathika

சரத்குமார் அணி , விஷால் அணி ஆகிய இரண்டு அணிகளுக்குமான நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்த நிலையில் சரத்குமார் அணி சமாதானத்தை விரும்புவதாக தகவல்கள் வந்தன . 

இந்தத் தேர்தலில் தான் தோற்று விட்டால் அது தனது அரசியல் இமேஜை பாதிக்கும் என சரத்குமார் கருதுவதாகவும் , எனவே தலைவர் , செயலாளர் பதிவிகளில் ஏதாவது ஒன்றை தானும் விஷாலும் பகிர்ந்து கொண்டு தேர்தல் நடக்காமல் நியமனம் ஆகி விட வேண்டும் என்று சரத்குமார் விரும்புவதாகவும்… உண்மையோ பொய்யோ …  பலவாறு செய்திகள் பந்தடித்தன . 
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களைக் கூட்டிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு , “இரண்டு அணிகளின் மனஸ்தாபத்தையும் தீர்த்து ஒன்றுபடுத்தி,  தேர்தல் இல்லாமல் பதவிகள் பகிர்ந்து கொள்ளப்படும் வகையில் சமாதானத்துக்கு வழிவகை செய்ய,  தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் மூன்றும் சேர்ந்த கூட்டுக் குழு தீவிரமாக களம் இறங்கும் ” என்றார் .
“அவர்கள் ஊழல் குற்றச் சாட்டுகளை எல்லாம் சொல்லி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் போது சமாதானம் எப்படி சாத்தியப்படும் ?” என்று நான் கேள்வி எழுப்ப , ”அப்படி எல்லாம் எதுவும் இல்லை. காணாததைக் கண்டது போன்றது உங்கள் கேள்வி . எல்லாம் சரியாகும் ” என்றார் தாணு. 
மேற்கொண்டு சில பத்திரிக்கையளர்கள் சில கேள்விகளை எழுப்பியபோது ” அவர்களுக்குள் சமாதானம் நடக்க வேண்டும் என்பது பத்திரிக்கையாளர்களின் விருப்பமா இல்லையா ? ஆம் எனில் ஒத்துழைப்புக் கொடுங்கள் ” என்று கூறப்பட்டது .
ஆனால் சமாதானம் ஏற்படுவதில் பத்திரிகையாளர்களிடம் எதிபார்க்கப்பட்ட குறைந்த பட்ச அக்கறை கூட , சரத் குமார் அணியில் உள்ள சில முக்கியப் பிரமுகர்களுக்கு இல்லை என்பது அடுத்த சில மணி நேரங்களிலேயே தெரிந்தது. 
சரத்குமார் அணியைச் சேர்ந்த ராதிகா, சிம்பு ஆகியோர்  தங்கள் தரப்பை விளக்க,  பத்திரிக்கையாளர்களை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரெசிடன்சி டவர் ஸ்டார் ஹோட்டலில் சந்திக்கின்றனர் என்று அழைப்பு வர , எல்லா பத்திரிக்கையாளர்களும் அங்கே ஆஜர் . 
பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றாலும் சிம்புவின் ரசிகர்கள் என்று சொல்லப்பட்ட ஒரு கூட்டம்  அரங்கின் உள்ளே இருந்தது . 
முதலில் பேசிய நடிகர் வெங்கட் ராம் “தேர்தல் என்று வந்தால் சரத்குமார் அணிதான் ஜெயிக்கும் ” என்று குறிப்பிட்டாலும்,  சமாதானத்தை நோக்கியே பேசினார். மறுப்பதற்கு இல்லை . 
simbu01(1)
அடுத்துப் பேசிய நடிகை ஊர்வசி ” சரத்குமார் அணியினர்   நடக்கும் பிரச்னைகளை எல்லாம் என்னிடம் சொன்னார்கள் . ஆனால் விஷால் அணியில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை . எனவே நான் சரத்குமார் அணிக்கு ஆதரவாக இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் ” என்று சீரியஸ் காமெடி செய்தாலும் கூட , அவரும் சமாதானத்தை நோக்கியே பேசினார் .மறைப்பதற்கு இல்லை . 
மேடையில் இருந்த பாக்யராஜ் , பூர்ணிமா பாக்யராஜ், சிம்பு, ராதிகா , ஆகியோரில் அடுத்து பாக்யராஜை பேசச் சொல்ல,  ‘எதுவும் பிரச்னை வந்தால் சமாதானப்படுத்தும் படியாக கடைசியில் பேசிக் கொள்ளலாம்’ என்று நல்ல நோக்கில் நினைத்தோ என்னவோ “நான் அப்புறம் பேசுறேன் “என்றார் பாக்யராஜ் . திரைக்கதை மேதை அல்லவா ?
ஆனால் என்னதான்  திரைக்கதை நன்றாக இருந்தாலும்,  நடிகர்கள் அளவுக்கு மீறி சொதப்பினால் என்ன ஆகும் என்பது பற்றி,  அவருக்கு பெரிதாக கெட்ட அனுபவங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம் . ஆனால் நேற்று அவருக்கு அந்த பயங்கர திகில் அனுபவம் கிடைத்தது . (சரியா சார்?)
மூன்றாவதாக யார் பேசுவது என்ற தள்ளுமுள்ளுவை அடுத்து ராதிகா பேச வந்தார் . பிடித்தது,  சமாதானத்துக்கு சனி !
raadhi“துபாயில் ஐ சி எல் கிரிக்கெட் மேட்ச் முதல் சீசனில் ஒரு விசயத்தில் விஷால் ரெdddddddட்டி மிக அசிங்கமாக கேவலமாக கீழ்த்தரமாக நடந்து கொண்டார் . நான் அது தப்பு என்று அப்போது அவரிடம் சொன்னேன் . நான் சொல்வதை கேட்கும் ‘நிலையில்’ விஷால் ரெdddddddட்டி அப்போது இல்லை . (புரியுதுல்ல?)
நான் விட்டுவிட்டேன்”‘ என்று ஆரம்பித்து விஷாலை ஒரு பிடிபிடித்தார் மதராஸ் ராஜகோபால் ‘நாயுடு’வின் பேத்தியான ராதிகா, 
(நாத்திக நக்கல் நையாண்டி நாயகனாக  பார்த்த உங்களை மதராஸ் ராஜ கோபால் நாயுடுவின் மகனாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு வந்ததற்காக வருத்தப்படுகிறோம் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களே ! ‘என் பட்டத்தை நடிக வேள் அப்படின்னு சரியான எழுத்துல எழுதினதுக்கு நன்றிடாப்பா ..!   நிறைய பேரு என் பேரை நடிகவேல் .வேல் வேல்னே எழுதறானுங்க ! படுபாவிப் பசங்க !’)
தொடர்ந்த ராதிகா
sivakumar
“சிவகுமார் அண்ணனுக்கு ஒண்ணுமே தெரியல . தனது பிள்ளைக்காக விஷால் அணிக்கு சாதகமாக பேசறார் அவரு “என்றார் . 
கமல்ஹாசனும் தப்பவில்லை 
Thoongavanam Audio launch Stills (66)
”எங்களுக்கு எதிராக விஷால் அணி கையெழுத்து வேட்டை நடத்தப் போகும் செய்தி வந்தபோது  நான் கமல் சாரிடம் கேட்டேன்  ‘ அது என்ன என்றே தெரியாது ‘ என்று என்னிடம் சொன்ன கமல் ,மறுநாள் முதல் கையெழுத்தையே அவர்தான் போட்டார் .
இன்று எங்கள் பிரச்னையை சொன்னால் ‘அந்த அசிங்கத்தில் நான் தலையிட விரும்பவில்லை ‘ என்கிறார் கமல் . நடிகர் சங்கப் பிரச்னை அசிங்கமா அவருக்கு ?” என்று போட்டுத் தாக்கினார் . 
”நாங்கள் கமல் ரஜினி இருவரையும் உயரத்தில் வைத்துப் பார்க்கிறோம் . ஆனால் ஒரு பிரச்னை என்றால் அவர்கள் வர மறுப்பது ஏன் ?” என்று,
rajini
ரஜினிக்கும் ஒரு குண்டூசி குத்து விழுந்தது . 
விடாமல் தொடர்ந்த ராதிகா “என்னைப் பற்றி என் குடும்பம் பற்றி என் பிள்ளைகள் பற்றி கேவலமாக , கீழ்த்தரமாக  , அருவருப்பாக , அசிங்கமாகப் பேசுகிறார்கள் . இப்படி எல்லாம் என்னைப் பேச நான் என்ன கவர்ச்சி நடிகையா?” என்று….. அடித்தார் பாருங்கள், ஓர் அட்டகாசமான  சிக்சர் ! அப்புறமா பந்து கிரவுண்டுக்கே வரல !)
ஆக, இதன் மூலம்..
முகம் தெரியாத யாரோ ஒரு சாதாரண பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் கூட,  பொதுவெளியில் கவுரவமாக நடத்த வேண்டும் என்ற நாகரிகம் வலியுறுத்தப்படும் மாண்புக்கு மாறாக , கவர்ச்சி நடிகை என்றால் கேவலமாக , கீழ்த்தரமாக  , அருவருப்பாக , அசிங்கமாகப் பேசலாம் என்ற புரட்சிகரமான பேச்சுரிமையை வழங்கினார் ராதிகா . 
அதிர்ச்சியில் கல்லாய்ச் சமைந்தார் நமது மதிப்புக்குரிய பாக்யராஜ் . 
அடுத்து பேசிய சிம்பு ராதிகாவை சுண்டு விரலால் தூக்கிச்  சாப்பிட்டார் . 
எண்ணற்ற கேமராக்கள் பதிவு செய்து கொண்டிருந்த நிலையிலும் விஷாலை அவன் இவன் என்று ஏக வசனத்தில் வசை பாடினார் .
simbu02 (1)
” நான் பிறந்த ஒன்பது மாசத்துல இருந்து சினிமாவுல நடிக்கிறவன்டா. எத்தனையோ வருஷமா நடிகர் சங்கத்துல கமிட்டி மெம்பரா இருக்கேன்  .  
எத்தனையோ நடிகர் சங்க மீட்டிங்ல கலந்துக்கிட்டு இருக்கேன்டா  . நீ அதுக்கெல்லாம் ஒழுங்கா வந்தியா ?
(இதற்கு டுவிட்டரில் பதில் சொல்லி இருக்கும் விஷால் ‘நடிக்கிற படத்தோட ஷூட்டிங்குக்கே ஒழுங்கா போய்ப் பழக்கம் இல்லாத ஆட்கள் இதையெல்லாம் கேட்கறதுதான் பெரிய காமெடி என்று பதிலடி கொடுத்தது வேறு விஷயம்)
கேள்வி கேட்க உனக்கு என்னடா  யோக்கியதை இருக்கு ? என் குடும்பத்துல ஏண்டா குழப்பம் உருவாக்கப் பாக்குற ? நடிகர் சங்கம் என்பது சுமார் 3500 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள ஒரு சின்ன அமைப்பு ? நமக்குள்ள பேசித் தீத்துக்கணும்.  
இதுல வர்ற பிரச்னையை நீ ஏன்டா ஏழு கோடி மக்கள்கிட்ட கொண்டு போற? (தமிழக மக்களை — அதாவது இவர்கள் படங்களை காசு கொடுத்து பார்க்கும் மக்களை சொல்கிறார் )  நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? ” என்று ஆரம்பித்து ஆடித் தீர்த்தார் .
பிரம்மை பிடித்தது போல அமர்ந்து விட்டார் பாக்யராஜ் . மேடையில் இருந்த பூர்ணிமா பாக்யராஜ் முகத்தில் ஈ… ம்ஹும் ! கொசு கூட ஆடவில்லை . 
பூர்ணிமா பாக்யராஜின் ரியாக்ஷன்தான் ஒரு பொதுவான மனசின் ரீயாக்ஷன்!
தயாரிப்பாளர் சங்கம் , இயக்குனர்கள் சங்கம் , தொழிலாளர் சம்மேளனத்தினர் எல்லோரும் தங்களை பிரச்னைகளை எல்லாம் விட்டுவிட்டு இவர்களை சமாதானப்படுத்த முயலும்போது , சரத் அணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிற ராதிகாவுக்கும் சிம்புவும் பேசும் பேச்சுகள்,  அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறதே என்ற ஆச்சர்யம் பத்திரிக்கையாளர்கள் மனதில் !
இதை ஒரு பத்திரிக்கையாளர் கேள்வியாக எழுப்ப , சிம்பு எதோ பதில் சொல்ல முயன்றார்  .
simbu rathika
பிரச்னை வரப்போவதை உணர்ந்த பாக்யராஜ் மைக்கை வாங்கி புத்திசாலித்தனமாக எதோ சொல்ல முயல , தனது அப்பாவின் சம காலத்து சீனியர் திரைப் பிரமுகர் என்ற மரியாதை  கூட இல்லாமல் அவரிடம் வலுக்கட்டாயமாக மைக்கைப் பிடுங்க முயன்றார் சிம்பு . 
சில நொடிகள் மறுத்த பாக்யராஜ், ஒரு நிலையில்  வெறுப்படைந்து மைக்கை சிம்புவிடம் தள்ளி விட்டு , ‘எப்படியோ போ!’  என்பது போல கையை ஆட்டிவிட்டு முகம் திரும்பிக் கொண்டார் .
மைக்கை வாங்கிய சிம்பு ..ஒரு மாதிரி சிரித்துக் கொண்டு  கிண்டலாக கேலியாக ”’ சூப்பர் .. சூப்பர் .. செம கேள்வி.சொப்பர்  சூப்பரா கேள்வி எல்லாம் கேட்கறீங்க .. ” என்ற வார்த்தைகளை,  நக்கலாக நையாண்டியாக சொன்னார். (என்னா ஒரு எக்ஸ்பிரஷன்! ஒன்பது மாசத்துல இருந்தே நடிக்கிறவர் இல்லையா ?)…
உடனே சிம்புவின் ஏற்பாட்டில் அங்கு வந்திருந்த — பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு சம்மந்தம் இல்லாத அந்த கூட்டத்தில் பலர் , சிம்புவைப் பின் தொடர்ந்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை கிண்டல் செய்யும் விதமாக குரல் எழுப்பி சிரித்துக் கைதட்டினர் . 
உடனே கோபப்பட்ட பத்திரிகையாளர்கள் “அவர்கள் எப்படி எங்களை கிண்டல் செய்யலாம் ? அவர்களுக்கு இங்கே என்ன வேலை ? அவர்களை வெளியே போகச் சொல்லுங்கள் ” என்று கூற , மறுத்தார்கள் சிம்புவும் ராதிகாவும் .
ஆஃப்டர் ஆல் பத்திரிக்கையாளர்களுக்காக , தனது ரசிகர்கள் என்று சொல்லப்படுவோரை கண்டிப்பதோ வெளியே போகச் சொல்வதோ , சிம்புவால் முடியாமல் இருக்கலாம் . தப்பே இல்லை . அவரது நிலைமையை உணர முடிகிறது .
 2021லோ  3021லோ தமிழக முதல்வராகவோ இந்தியப் பிரதமராகவோ அமெரிக்க அதிபராகவோ ஆகத் துடிக்கும் சிம்புவின் லட்சியக் கனவுக்கு அது பெர்ர்ர்ரர்ரும் ஆபத்தாக வந்துவிடலாம் .
rajini kamal
ஆனால் “அவர்கள் செய்த செயலுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் ” என்று ஒரு வார்த்தை சொல்லக் கூடிய பக்குவம் கூட…
எத்தனையோ இரட்டை மலைகளுக்குப் போனபிறகு இப்போது விந்திய மலை , பர்வத மலை, இமய மலைக்கு எல்லாம் போய்க் கொண்டிருக்கும் ஆண்மீகவாதியான (எழுத்துப் பிழை அல்ல !) சிம்புவுக்கு இல்லை . 
இவர்தான் நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி சார்பாக முக்கியப் பொறுப்புக்கு போட்டியிடுபவர் . என்ன கொடுமை !
நடிகர் சங்கத்தின் சீனியர் உறுப்பினர் என்று தன்னை பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளும் ராதிகாவாவது,  இந்த சூழ்நிலையிலாவது நிலைமையை உணர்ந்து செயல்படுவார் என்று பார்த்தால் அவர் பங்குக்கு அவரும் ” இப்ப என்ன அவங்க கைதட்டக் கூடாது அவ்ளோதான ? சரி . ஒகே ! இனிமே யாரும் கைதட்டாதீங்கப்பா ..! இனிமே கைதட்ட மாட்டங்க . போதுமா? ” என்றார் தனக்கே உரிய பாணியில் . 
உடல் ரீதியாக உட்கார்ந்து இருந்தாலும் , பாக்யராஜ் மானசீகமாக அந்த இடத்திலேயே இல்லை . !
“பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரசிகர்களுக்கு என்ன வேலை ?” என்று  ராதிகாவிடம் மீண்டும்  பத்திரிக்கையாளர்கள் கேட்க, ” இத பாருங்க .. இது பொது இடம் . பப்ளிக் பிளேஸ் .(தி. நகரில் உள்ள ரெசிடன்சி டவர் ஸ்டார் ஹோட்டல்! ) இங்கே யார் வேண்டுமானலும் வருவாங்க. யாரும் கண்ட்ரோல் பண்ண முடியாது ” என்று கூறி முடித்து விட்டார் . 
”நடிகர் சங்கத்துக்குள் நடக்கும் பிரச்னையை பொது மக்களிடம் ஏன் சொல்றீங்க ?” என்று கேட்பதன் மூலம்  தங்களை வாழ வைக்கும் மக்களிடம் சொல்வதே குற்றம்  என்று கொந்தளித்த சிம்புவுக்கும்….
”என்னைப் பற்றி கேவலமாக , கீழ்த்தரமாக  , அருவருப்பாக , அசிங்கமாகப்  பேச நான் என்ன கவர்ச்சி நடிகையா?” என்று குமைந்த  ராதிகாவுக்கும் …
ஒரு பத்திரிக்கியாளர் சந்திப்பில் சம்மந்தமில்லாத மூன்றாம் தரப்பை வைத்து பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்துவது மட்டும் தவறு என்று தெரியாததுதான்…. மில்லியன் டாலர் ஆச்சர்யம் !
பத்திரிக்கையாளர்கள் அவமானப்படுதத்தப் பட்டார்கள் என்பது இங்கு முக்கிய விசயமே இல்லை . சாதாரண மனிதன், பிரபலங்கள், இடைப்பட்ட மீடியா மனிதர்கள் என்று யாராக இருந்தாலும் சரி…
நியாயமான சரியான அவமானங்களே உண்மையான அவமானம் . 
இது போன்ற அநியாயமான அவமானங்கள் அவர்களை இன்னும் கம்பீரமாக்கும். 
பத்திரிக்கையாளர்கள் ஒன்றும் கொம்பு முளைத்தவர்கள் அல்ல . புனித – புண்ணிய – ஆத்மாக்கள் அல்ல. எல்லா ஊரிலும் பூக்கடையும் உண்டு . சாக்கடையும் உண்டு. 
அதே போல இது எதோ விஷால் அணிக்கு ஆதரவான வாதமும் அல்ல . அவர்கள் எந்த அளவுக்கு சரியானவர்கள் என்பது இப்போது யாருக்குத் தெரியும்.?  
எனவே இதில் எந்த அணியையும் ஆதரிப்பது நடிகர் சங்கம் அல்லாத யாருக்கும் தேவையும் அல்ல . . 
ஆனால்….
 பொதுவில் பத்திரிக்கையாளர்களை மதிக்கிறோம் என்று  அடிக்கடி சொல்லும் சினிமாக்காரர்களில் உள்ளடங்கிய சிம்புவும் ராதிகாவுமே .. அந்த பத்திரிக்கையாலார்களுக்கு தங்கள் தரப்பால் ஏற்பட்ட ஒரு சிறு சுண்டைக்காய் பிரச்னையில்கூட …
 நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள் எனும்போது …
இவர்கள் பதவிக்கு வந்து, நாளை ஒரு நடிகன் தனக்கு ஒரு பிரச்னை என்று இவர்களிடம் போய் நின்றால் எப்படி நியாயம் செய்வார்கள்? அதற்கான வாய்ப்பே இல்லை போலிருக்கிறதே . 
— என்ற புரிதலோடுதான் பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்தார்கள் என்பதை பதிவு செய்வது இங்கு நியாயமான கடமை ஆகிறது . 
தட்ஸ் ஆல் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →