பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்க, ஆதி, அகன்ஷா சிங், கிரிஷா குருப், நாசர் , பிரகாஷ் ராஜ் நடிப்பில் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கி சோனி லைவ் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் கிளாப் .
தடகள ஓட்டப் பந்தய வீரன் ஒருவன் (ஆதி) மேட்டுக்குடி உயர் சாதி ஆதிக்க வெறி பிடித்த ஒருவரால் (நாசர்) திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு கால் இழந்து காதல் மனைவியோடும் (அகன்ஷா சிங் ) இயல்பாக வாழ முடியாமல் தவிக்கிறான் .
தன்னைப் போல பாதிக்கப்பட்ட ஒரு ஏழை ஓட்டப் பந்தய வீராங்கனை ஒருத்தியை ( கிரிஷா குருப்) மீண்டும் களத்தில் இறக்கி வெல்ல வைத்து மன நிம்மதி பெற முயல்கிறான் . ஆனால் அதையும் அந்த மேட்டுக்குடி சாதி ஆதிக்க வெறி பிடித்த அதிகாரி தடுக்க முயல நடந்தது என்ன என்பதே இந்த கிளாப் .
படத்தின் பிளஸ் அதன் இயல்பான எளிமையான போக்கு . சின்னச் சின்ன திருப்பங்கள் வைத்து இரண்டாம் பகுதியில் கனம் சேர்க்கிறார் இயக்குனர்.
ஆதி சின்சியராக நடித்துள்ளார் . கிரிஷா குரூப் சிறப்பாக நடித்துள்ளார் . நாசர் அசத்தி இருக்கிறார். அகன்ஷா சிங் ஒகே ரகம். இளையராஜாவின் இசை ஒகே ராகம்.
பிரித்வி ஆதித்யாவின் மேக்கிங், ஷாட்கள் , சினிமா மொழி சிறப்பு. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வீராங்கனை ஓடும்போது அதை ஆதி ஓடுவதாக காட்டும் உணர்வு வெடிப்பு அருமை.
முதல் பாதியில் இன்னும் சிரத்தை இருந்திருக்கலாம்.
விளையாட்டுத்துறைகளில் உள்ள மேட்டுக்குடி சாதி ஆதிக்கத்தைக் கதையாகக் கொண்டு வந்து விட்டு அதைப் பூடகமாக மட்டும் சொல்லி விட்டு , அதையும் பேலன்ஸ் செய்வதற்காக அதே ஆதிக்க சாதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் நாயகனுக்கு உதவுவதை நேரடியாகச் சொல்கிறார்கள்.
விளைவு?
படத்தின் முக்கிய நோக்கம் பலவீனம் ஆகி பேலன்ஸ் செய்த விஷயம் தூக்கலாக தெரிகிறது. இது படத்தில் நாயகனுக்கு நடக்கும் விபத்தை விட பெரிய விபத்தாக இருக்கிறது.
முன்பே பல முறை பார்த்த விளையாட்டுத்துறை படங்களின் புதிய – நல்ல – கலவை .
கிளாப்…. ரன்னர்ஸ் அப் .