ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கணேஷ், சுரேஷ் ஆகியோர் தயாரிக்க, சதீஷ், ரெஜினா கசான்ட்ரா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் , நாசர், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, எல்லி அவ்ரம் நடிப்பில் அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கி இருக்கும் படம்.
1930 களில் பிரிட்டிஷ் சென்னையில் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ஒரு வெள்ளையருக்கும் இருக்கும் காதலை உடைத்து அந்தப் பெண்ணைச் சிறை பிடித்து பாலியல் தொந்தரவு செய்கிறான் ஒரு பிரிட்டிஷ் ராணுவ மேஜர் .
அவனிடம் இருந்து தப்பிக்க, காதலன் ஒரு நல்ல சூனியக்காரியை அணுக , அவள் செய்து தரும் மந்திர மரச்சிற்பத்தின் உள்ள இறக்கையைப் பிடுங்குவதன் மூலம் ஒரு கனவு உலகத்துக்குப் போய் அங்கே காதல் ஜோடிகள் சந்தோஷமாக இருக்க, அதே மந்திரச் சிற்ப உள்ள இறக்கையைப் பிடுங்கி உள்ளே வரும் மேஜர் அங்கும் சித்திரவதையை தொடர்கிறான் .
ஒரு நிலையில் அவன் அதே கனவு மாளிகையில் மந்திரக் கட்டில் காட்டப்படுகிறான் .
அழிக்க்கப்பட்ட அந்த அரண்மனை போன்ற வீடு இடிக்கப்பட்டு, அங்கு உருவான வீட்டில் பிறந்த நான்காவது தலைமுறை இளைஞன் கண்ணப்பன் (சதீஷ்) கையில் அந்த மந்திரச் சிற்பம் கிடைக்க, அதில் உள்ள ஓர் இறக்கையை அவன் பிடுங்க , தூங்கும்போது கனவு வீட்டுக்குள் சிக்குகிறான் . அங்கே உள்ள காதல் ஜோடிப் பேய்கள் அவனை மிரட்டுகின்றன .
அங்கே அவனுக்கு அடி பட்டால், தூங்கி எழுந்த நிலையில் அங்கே அடிபட்ட இடத்தில் நிஜமாகவே காயம் வீக்கம் , ரத்தம் வடிதல் எல்லாம் நடக்கிறது . எக்சார்சிஸ்ட் ஏழுமலை (நாசர்) என்ற ஆவி உலக ஆராய்ச்சியாளரை அவன் சந்திக்க, ” ஒருவேளை கனவில் நீ , கொல்லப்பட்டால் நிஜத்திலும் இறந்து போவாய்” என்கிறார் வாழ்க்கையில் தூங்காமலே இருந்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்ற நிலை .
கந்து வட்டி தாதா ஒருவரை ( ஆனந்தராஜ்) இறகு பிடுங்க வைத்து மாட்டி விடுகிறான். அவன் ஆலோசனைக்குப் போன ஒரு மருத்துவர் ( ரெடின் கிங்ஸ்லி), அவனது அம்மா (சரண்யா பொன்வண்ணன் ) அப்பா (விடிவி கணேஷ்) தாய்மாமா (நமோ நாராயணன்) ஆகியோர் தாங்களாகவே இறகு பிடுங்கி மாட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு நிலையில் இவர்களைக் காப்பாற்ற ஆவி உலக ஆராய்ச்சியாளர் , அவரது உதவியாளர் ( ரெஜினா கசான்ட்ரா) ஆகியோர் இறகு பிடுங்கி பேய் மாளிகைக்கு நுழைய முடிவு செய்ய , நடந்தது என்ன என்பதே படம்
வித்தியாசமான் அட்டகாசமான கதை பிடித்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர். வாழ்த்துகள். யூ டியூப் பிரியையான அம்மா போன்ற சில கதாபாத்திர வடிவமைப்புகளும் சிறப்பு .
வசன நகைச்சுவை பிரம்மாதமாக வந்திருக்கிறது .
யுவாவின் ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான மன நிலையை அழகான விசுவல்களோடு சேர்த்து உருவாக்கி தருகிறது . யுவன் சங்கர் ராஜாவின் இசையும் அப்படியே .
மோகன மகேந்திரனின் கலை இயக்கம் அட்டகாசம் . குறிப்பாக கூச்செறிய வைக்கும் அந்த மந்திர மரச்சிற்பம். பாராட்டுகள்.
பட்டணம் ரஷீத்தின் சிறப்பு ஒப்பனையும் அருமை.
வரைகலைப் பணிகளை நன்றாக செய்யும் அளவுக்கு ஏ ஜி எஸ் நிறுவனம் தரமான தயாரிப்பைத் தந்திருக்கிறது.
பொதுவாக சதீஷ் மீது எல்லாருக்கும் “யாருப்பா இவரு ? திடீர்னு பெரிய பெரிய ஹீரோக்கள் கூட எல்லாம் நடிக்கிறாரு ?’ என்ற கேள்வியும், சக சினிமா கலைஞர்களுக்கு கொஞ்சம் பொறாமையும் கூட உண்டு . ஏனெனில் அது நோகாமல் நோம்பு கும்பிடும் வேலை.
முன்பே இது போன்ற பல நடிகர்கள் அந்த சொகுசுப் பேருந்திலேயே கடைசிவரை பயணம் செய்து… போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். சதீஷ் நினைத்து இருந்தால் அப்படி ஒரு டபுள் டெக்கர் ஏசி படுக்கை மற்றும் டாய்லெட் வசதி உள்ள மகா சொகுசு பேருந்தில் தொடர்ந்து பயணம் செய்து இருக்கலாம் .
ஆனால் ஒரு பொன்மயமான நேரத்தில் அது போரடிக்கும் வேலை என்பதைப் புரிந்து கொண்டு, ஏறு வெயிலில் எதிர்காற்றில் மேட்டை நோக்கி ஆயில் போடாத சைக்கிளை மிதித்து வேர்வை வழிய வழிய பயணம் செய்தாலும் அது நம்ம சொந்த வண்டியாக இருக்கணும் என்று நினைத்தார் . இந்த முடிவும் முயற்சிகளுமே நாளைக்கு அவருக்கு சொந்தமான ஒரு சொகுசு விமான நிலையமே கிடைக்க காரணம் ஆகலாம்
இதற்கு முன்பே சில படங்களில் ஹீரோவாக அவர் நடித்து உள்ளார் என்றாலும் . நகைச்சுவை, பயம் , சீரியஸ், அம்மா பாசம் என்று எல்லா வகையிலும் இயல்பாக சிறப்பாக நடித்து இந்தப் படத்தில்தான் அவர் முழுமையாக ஹீரோ ஆகியுள்ளார் . வாழ்த்துகள் .
சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் , நாசர், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி , ஒரு கியர் எக்ஸ்ட்ராவாகப் போட்டு தூக்குகிறார்.
elli avrram did the female devil character wonderfully . such a nice performance . good.
‘இறக்கையைப் பிய்த்து விட்டால் தூங்கவே முடியாது . தூங்கினால் கனவு வீட்டில் பேய்களிடம் சிக்கிக் கொள்வோம். சிக்கி, கனவில் செத்தால் நிஜத்தில் செத்துப் போவோம்’ என்பது அட்டகாசமான அரிசி .ஆனால் அந்த அரிசியே போதும் என்று முடிவு செய்து, , நகைச்சுவை என்ற சக்கரையை அள்ளிப் போட்டு ஊற வைத்துக் கொடுத்தால் போதும் என்று நின்று விட்டார்கள் . திரைக்கதை எனும் சமையலில் கவனம் இருந்திருக்க வேண்டும் .இருந்திருந்தால் இந்தப் படத்தின் லெவலே வேறு .
அந்த ஒரு சமாச்சாரத்தைத் தவிர மற்ற எல்லாம் பல படங்களில் இருந்து பார்த்தவற்றின் தொகுப்பே என்பது ஒரு பலவீனம் .
அதே போல நகைச்சுவைப் படத்தில் லாஜிக் தேவை இல்லைதான் . ஆனால் லாஜிக் மாதிரி ஒண்ணு இருக்கணும்.
அந்த மந்திரச் சொரூபம் கண்ணப்பன் கையில் கிடைப்பதற்கான காரணம் சொத்தை ! முப்பது வருடமாக கரண்ட் கட்டே ஆகாத ஊர் எது என்று படக் குழு சொன்னால், அங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டாவது போய் விடலாம்
இங்கே பேய்களுக்கும் ஒரு கதை இருக்கு. அப்படி இருக்க, அங்க உள்ள சில பேய்கள் ஏன் உள்ளே வருபவர்களை கொடுமை செய்யணும்? என்ற கேள்வி பேய்த்தனமாக எழுகிறது.
நாசர் கதாபாத்திரத்துக்கு எக்ஸார்சிஸ்ட் ஏழுமலை என்று பெயர் வைத்தது படத்துக்கு எந்த வகையில் பலம் சேர்த்தது.?
1930களின் சென்னை மர்மமானது என்று ஒரு வசனம் . தப்பு . சென்னை சிலிர்த்துக் கொண்டு எழுந்த – சென்னையை இந்தியாவே உலகமே உற்றுப் பார்க்க ஆரம்பித்த –காலம் அது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பின்வரும் கட்டுரை https://www.thehindu.com/society/history-and-culture/madras-day-what-was-chennai-like-in-the-1930s/article67193796.ece
தூங்காமல் இருக்க குடும்ப உறுப்பினர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் ஜஸ்ட் ஸ்டேட்மென்ட்களாக அணி வகுக்கிறது. காமெடியில் தெறிக்க விட வேண்டிய ஏரியா அது . அதுவும் எழவு வீட்டுக்கு போவது எல்லாம்…
ஒரு காட்சியை காமெடியாக கொண்டு போவதா ? இல்லை சீரியசாகக் கொண்டு போவதா ? இல்லை சரியான கலவை செய்வதா என்பதில் பெரிய குழப்பம் தெரிகிறது .
ஒரு நிலை வரைக்கும் சும்மா சிரிக்க வைத்து விட்டு அப்புறம் ‘டைம் ஆச்சு சீரியசா சொல்லி சித்திரத்தை முடி’ என்பது நல்ல உத்தி இல்லை. இது போன்ற திரைக்கதைகள் படம் பார்க்கும்போது நல்லா இருக்கிற மாதிரி இருக்கும் . ஆனால் பார்த்து முடித்த பிறகு பெரிதாக திருப்தியைத் தராது .
எனினும் அந்த ஆபத்தில் இருந்து இந்தப் படம் தப்பிக்க காரணம் படத்தின் அட்டகாசமான கதை
அதனால் பார்வை பெறுகிறான் காஞ்சுரிங் கண்ணப்பன்