கனெக்ட் @ விமர்சனம்

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்க, நயன்தாரா , சத்யராஜ், அனுபம் கேர், வினய் , ஹனியா நஃபீசா நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கி இருக்கும் படம். இவர் முன்பே நயன்தாரா நடிப்பில் மாயா படத்தை இயக்கியவர் . 

இடைவேளையே இல்லாமல் தொடர்ந்து 98 நிமிடங்கள் ஓடும் படம்  இது . 

வெளிநாடு சென்று இசை படிக்க விரும்புகிற மகளையும் (ஹனியா நஃபீசா), பிசியான டாக்டர் கணவனையும் (வினய்) , அம்மா இல்லாத நிலையில் தனியாக வேறு இடத்தில் வசிக்கும் அப்பாவையும் (சத்யராஜ்) குடும்பமாக கொண்ட ஐ டி நிறுவனப் பெண் ஊழியர் (நயன்தாரா) வாழ்வில்,  கொரோனா மூலம் இழப்புப் புயல் வருகிறது . கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கணவன் கொரோனாவுக்கு பலியாகிறான் . அப்பாவை மறக்க முடியாத மகள்,  ஆவிகளுடன் பேசும் நபர் மூலம் அப்பாவுடன் பேச முயல , அந்த இடத்துக்கு வந்த ஒரு கெட்ட ஆவி மகளைப் பிடித்துக் கொள்கிறது.   நடந்தது என்ன என்பதே இந்தப் படம். 

கொரோனா அலை உச்சத்தில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவு படுத்தும் ஆரம்பக் காட்சிகள் ஜஸ்ட் லைக் தட் இருந்தாலும் நம்மை சில நிமிடங்கள் மனம் கனக்க வைக்கின்றன. அடடா… நல்ல ஏரியாவாச்சே … இதை இன்னும் கூட உணர்வுப்பூர்வமாகச் சொல்லி இருக்கலாமே என்று தோன்றுகிறது . 

நமக்கு பேய்தான் சார் முக்கியம் என்பதால்தானோ என்னவோ வெகு சீக்கிரம்  கடந்து அடுத்த கட்டத்துக்கு வருகிறார் இயக்குனர் . சும்மா சொல்லக் கூடாது …

ஒலி வடிவமைப்பு… குறிப்பாக அந்த வீடியோ கால் ஓசை,  , மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் அட்டகாசமான ஒளிப்பதிவு. குறிப்பாக இருள்- ஒளிப் பயன்பாடு மற்றும் வண்ண ஆளுமை , ப்ரித்வி சந்திர சேகரின் சிறப்பான பின்னணி இசை, சில காட்சிகளில் சிவ சங்கர் மற்றும் ஸ்ரீராமனின் கலை இயக்கம் இவற்றின் மூலம் படம் பார்ப்பவர்களை திடுக்கிட்டுத் திடுக்கிட்டு அதிர வைக்கிறார்கள் . 

நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .  அவதார் the way of water படத்தில் கூட பின்னணிக் குரல்கள் நல்ல தமிழ்த் தொனியில் இருந்தன . ஆனால் இந்தப் படத்தில் வினய் , ஹனியா நஃபீசா இருவரும் பேசும் தமிழ் நாம் ஏதோ அயல் கிரகத்துப் படம் பார்க்கிற உணர்வைத் தருகிறது. 

கோவிட் காலத்தில் வீட்டுக்குள் யாரோ ஒரு பெண் நயன்தாரா கதாபாத்திரத்துகுத் தெரியாமலே வந்து மகளோடு ஒய்ஜா போர்டில் உய்யலாலா பாடுவது, தேவை  இல்லாமல் கோபப்பட்டு கெட்ட  ஆவியை இழுத்து விட்டு பிரச்னை உண்டாக்குவது, ‘உன் மகள் சேத்து ரெண்டு நாள் ஆச்சு’ என்று மீண்டும் மீண்டும் அர்த்தம் இல்லாமல் சொல்வது….

இவை எல்லாம் பேய்ப்படம் என்ற வசதியையும் மீறிய அலட்சியமான லாஜிக் மீறல்கள். கொரோனா அலையின் பாதிப்பை திரைக்கதையின் எல்லைக்குட்பட்டே இன்னும்  நெகிழ்வாக சொல்லி இருக்கலாம் . போகப் போக திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். திரையரங்கு வழி வணிகப் படத்துக்கான திரைக்கதை படத்தில் அமையவில்லை.  பேய்கள் விசயத்தில் எல்லாமே பல முறை பார்த்து விட்ட காட்சிகள்தான் . எனினும் எடுத்த விதத்தில் கவனம் கவர்கிறார் இயக்குனர் அஷ்வின் சரவணன். 

பயப்படப் பிடிப்பவர்களுக்கு பார்க்கப் பிடிக்கும் இந்த கனெக்ட் .  திரையரங்குகளை விட ஓ டி டி யில் அதிகம் ரசிக்கப்படும். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *