ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, கலையரசன் , ரமீஸ், காளி வெங்கட் , மாயா ஆகியோர் நடிப்பில் சதீஷ் சந்திர சேகரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் டார்லிங் 2. நேசிக்க வைக்குமா? பார்ப்போம்
நண்பர்கள் ஆறு பேர் அதில் ராம் மற்றும் கிருஷ்ணா இருவரும் சகோதரர்கள் (இரட்டை வேடம் ரமீஸ் ராஜா) . அரவிந்த் (கலையரசன்) , ரஃபி (காளி வெங்கட்) , பாலாஜி (ஜானி) ஷங்கர் (அர்ஜுன்) ஆகியோர் மற்ற நால்வர் .
அறுவரும் அடிக்கடி வால்பாறைக்கு வருவது வழக்கம் . அப்படி வருகையில் ராமுக்கும் வால்பாறையைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணுக்கும் (மாயா) காதல் வருகிறது .
அந்த காதலில் ராமின் அம்மா அப்பா மற்றும் நண்பனும் சகோதரனுமான கிருஷ்ணா, ஆகியோருக்கு உடன்பாடு இல்லை . எனவே ராம் ஆயிஷாவின் காதலை நண்பர்களை வைத்து பிரிக்க அம்மா அப்பா திட்டமிட ,
அதில் முக்கியப் பங்கு எடுக்கிறான் அரவிந்த் . உண்மையில் அரவிந்துக்கு யார் பக்கம் செயல்படுவது என்று முடிவு செய்ய முடியாத நிலை .
ராமும் ஆயிஷாவும பதிவுத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட , அதில் ஏற்படும் குழப்பம் காரணமாக ராம் தற்கொலை செய்து கொள்கிறான் .
இந்த நிலையில் மிச்சம் உள்ள ஐவரும் மீண்டும் வால்பாறைக்கு வருகின்றனர். அங்கே ஆயிஷாவை சந்திக்கின்றனர் . பங்களாவில் உள்ள ஒரு பேய் இவர்களை மிரட்டுகிறது . அது ராமின் ஆவி என்பது தெரிகிறது .
ஒரு நிலையில் அரவிந்தின் உடலில் புகுந்து கொள்ளும் ஆவி , ‘எங்கள் காதல் தோற்கக் காரணம் அரவிந்த்தான் .அவன் செய்த துரோகம்தான் எனவே இன்று இரவுக்குள் அவனைக் கொல்வேன்’ என்கிறது .
நண்பர்கள் அரவிந்தைக் காப்பாற்ற முயகின்றனர் .
அரவிந்தை காப்பற்ற முடிந்ததா ? இதில் ஆயிஷாவின் பங்கு என்ன என்பதே டார்லிங் 2.
படத்தில் முதலில் கவர்வது விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு . பனியை ஊடுருவும் ஒளிக் கசிவும் ஆவியின் கோணத்தில் காட்டப்படும் வண்ணத் தீற்றலும் அருமை .
சில இடங்களில் குபீர் என்று சிரிக்கை வைக்கிறார் காளி வெங்கட் .
ரத்தனின் இசையில் நி ச ரி கா பாடல் மிக மிக அருமை . அதை படமாக்கிய விதமும் சிறப்பு . அந்தப் பாடலிலும் பொதுவிலும் ரொம்ப அழகாக இருக்கிறார் ஆயிஷாவாக வரும் மாயா .
ராமின் ஆவி புகுந்த பிறகான நடிப்பில் கவனிக்க வைக்கிறார் கலையரசன்.
ஆயிஷாவிடம் ராம் ” நீ பூ வச்சு பொட்டு வச்சா அழகா இருப்ப . இதை நான் ராமா சொல்லல . ரசிகனா சொல்றேன் ” என்ற இடத்தில் கொடி ஏற்றுகிறார் வசனகர்த்தா ராதா கிருஷ்ணன்
அந்த காதல் பிளாஷ்பேக் ஏரியாவும் , குழந்தைத்தனமாக இருந்தாலும் கடைசியில் சொல்லப்படும் ரிஜிஸ்ட்ரர் ஆபிஸ் டுவிஸ்ட்டும் நைஸ்.
படத்தின் முதல் பாதி பங்களாவுக்குள்ளேயே சுற்றி சுற்றி வருவதை தவிர்த்து இருக்கலாம் . ஜனங்கள் தியேட்டரில் பார்ப்பதற்காக எடுக்கப்படுகிறது என்ற உணர்வே இன்றி,
சும்மா பேசிக் கொண்டு சில காட்சிகள் போவதைத் தவிர்த்து இருக்கலாம் .
காரணமே இல்லாமல் சும்மா சும்மா சவுண்டு போட்டு மிரட்டுவதை குறைத்து இருக்கலாம் . ராம் தற்கொலை செய்து கொண்டதை எல்லோரும் ஓடிச் சென்று பார்ப்பதை,
பல முறை திரும்பத் திரும்ப காட்டுவதை குறைத்து இருக்கலாம் .
ஒருவனைக் கொல்ல விரும்பும் ஆவி அவன் உடலுக்குள்ளேயே புகுந்து அவனைக் கொலை செய்ய முயல்கிறது என்பது சுவாரஸ்யமான ஏரியாதான்.
ஆனால் அவன் உடம்பில் நுழைந்த உடனேயே கொல்லாமல் நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டு இருப்பது ஏன் என்பதற்கு ஒப்புக்கு சப்பாணியாகவாவது ஒரு காரணம் சொல்ல வேண்டாமா?
ஒரு குறிப்பிட்ட விஷயம் , குறிப்பிட்ட காரணம் ஆகியவற்றால் ஒரு குறிப்பிட்ட நாளில்தான் அவனைக் கொல்ல முடியும் என்பதால் அந்த நாளுக்காக ராமின் ஆவி காத்திருக்கிறது என்பதைச சொல்லி,
அந்த நாளில் என்ன நடக்கும் என்ற பரபரப்பை ஏற்றி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்