பேயோடு பயந்து நடுங்கும் காமெடியையும் கவர்ச்சியையும் கலந்து கச்சிதமாக கொடுத்தால் கல்லா கட்டமுடியும் என்பதை கட் அண்ட் ரைட்டாக சொன்னது, ராகவா லாரன்சின் காஞ்சனா . அதை அப்படியே வழி மொழிந்தது டீகே இயக்கிய யாமிருக்க பயம் ஏன் .
அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் டார்லிங்.
இரண்டு மாதத்துக்கு முன்பு ரிலீஸ் ஆன ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ படத்தின் கதையும் இந்த டார்லிங் படத்தின் கதையும் அடிப்படையில் ஒன்றே .
காதல் தோல்வி காரணமாக தற்கொலை முடிவுக்கு வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சினிமாவில் டைரக்டர் ஆக முடியாததை காரணம் காட்டி தானும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக சொல்லி விட்டு கூடவே வருகிறார் நண்பன் பால சரவணன் .
பாலாவுக்கு தெரிந்த இளம்பெண்ணான நிக்கி கிலானியும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருவருடனும் ஒன்று சேர, ஒரு கடற்கரை பங்களாவுக்கு போய் அங்கே தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுக் கிளம்புகிறார்கள் மூவரும் . காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயலும் கருணாசும் வழியில் அவர்களோடு இணைகிறார் .
உண்மையில் பாலாவும் நிக்கி கிலானியும் சாவதற்கு வரவில்லை. ஜீவி பிரகாஷை ஒரு தலையாக காதலிக்கும் நிக்கியை காதலனோடு சேர்த்து வைப்பதற்காக, பாலா போட்ட பிளான்படி, ஜீவி பிரகாஷின் தற்கொலை முடிவை மாற்றவே அவர்கள் வந்து இருப்பது தெரிய வருகிறது
அவர்கள் போய் தங்கும் பங்களாவில் ரவுடிகளால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவியும் அப்போது அடித்துக் கொலை செய்யப்பட்ட அவளது காதலனின் ஆவியும் இருக்கிறது.
இளம் ஜோடிகளுக்குள் காதல் வந்து ஜீவி பிரகாஷ் நிக்கியை நெருங்கும்போது நிக்கியின் உடம்புக்குள் புகுந்து விட்ட பெண்ணின் ஆவி, காதலனை அடித்து துவைக்கிறது . அடுத்தடுத்து பாலா , கருணாஸ் , பேய் ஓட்ட வரும் நான் கடவுள் ராஜேந்திரன் எல்லோருக்கும் உதை விழுகிறது .
பேயை விரட்ட எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிய, ஒரு நிலையில் ஜி வி பிரகாஷே பேயிடம் நியாயம் கேட்கிறார். தங்களை கொன்றவர்களை பங்களாவுக்குள் கொண்டு வந்தால் அவர்களை கொன்ற பிறகு கதாநாயகியை விட்டுவிடுவதாக டீல் போடுகிறது பெண்ணின் ஆவி .
அதன் படியே அந்த கொலைகாரர்களை ஹீரோ மற்றும் நண்பர்கள் பங்களாவுக்குள் கொண்டு வர, அவர்களைப் பழிவாங்கும் நேரத்தில் கதாநாயகி நிக்கி கிலானி தற்கொலைக்கு முயன்று கையை அறுத்துக் கொள்ள,
நாயகியின் உடலுக்குள் இருக்கும் ஆவியால் குற்றவாளிகளை பழிவாங்க முடியவில்லை. எனவே அந்த ரவுடிகள் ஜீவி பிரகாஷையும் அடித்துப் போட்டுவிட்டு நிக்கி கிலானியையும் கற்பழிக்கப் போக,
இறந்து போன காதலனின் ஆவி ஜீவி பிரகாஷின் உடம்புக்குள் போய் குற்றவாளிகளை பழிவாங்குவதே … இந்த டார்லிங் .
தாடி வைத்துக் கொண்டு தன்னை கேரக்டருக்கு பொருத்தமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் ஜீவி பிரகாஷ் . நடிப்பில் பரவாயில்லை எனினும் இன்னும் பல படிகள் ஏற வேண்டும்.
கதாநாயகி நிக்கி கிலானி காதலியாக வரும் காட்சிகளை விட பேயாக வரும் காட்சிகளில் பொருத்தமாக இருக்கிறார் .
பால சரவணன் மற்றும் கருணாஸ் இருவரும் பேயிடம் பயந்து நடுங்கும் காட்சிகள் சிரிப்பு மேளா.
ஜீவி பிரகாஷின் பாடல்கள் இசை ஓகே. பின்னணி இசை படத்துக்கு பலம் . கிருஷ்ணன் வசந்தின் கேமராவும் அப்படியே .
முதல் பாதியும் இரண்டாம் பாதியில் நிக்கி கிலானியின் ஜி வி பிரகாஷ் மீதான ஒருதலை காதல் பிளாஷ் பேக்கும் இழுக்கிறது .
நகைச்சுவை என்ற பெயரில் ஆண் பெண் உடலுறவை குறிக்கும் கொச்சையான வார்த்தைகளை அப்படியே படத்தில் இடம்பெற வைத்து இருப்பதால் தியேட்டரில் அந்த இடங்களில் பெண்கள் கூனிக் குறுகிப் போகிறார்கள். சென்சார் என்ன புல் பிடுங்கியது என்றே தெரியவில்லை .
சில காட்சிகளை சீரியசாக ஆரம்பித்து நகைச்சுவையாக முடிக்கும் இயக்குனர் சாம் ஆண்டனின் உத்தி பாராட்டுக்குரியது
படம் முடியும்போது கற்பழிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் இறந்து போன பேய் ஜோடி ஆடியன்சை பார்த்து முறைப்பது … குமட்டும் வரை புளித்துப் போன மாவு . பேய்ப்படங்களை அப்படி முடிக்கும் இந்த ஆதிகால ஹாலிவுட் உத்தியில் இருந்து தமிழ் சினிமாவை எந்த சாமியாவது காப்பாற்ற வேண்டும் .
டார்லிங் … லேசு பாசான காதல்