ஆர் கே என்டர்டைன்மென்ட் சார்பில் ரமேஷ் குமார் தயாரிக்க, சந்தானம் , சுரபி, மாறன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஃபெஃப்சி விஜயன், மசூம் சங்கர், பிரதீப் ராவத் , தீனா, முனீஸ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் சந்தானத்தோடு சேர்ந்து கதை திரைக்கதை எழுதி பிரேம் ஆனந்த் இயக்கி இருக்கும் படம்.
1960களில் பாண்டிச்சேரியில்… வென்றால் ஐம்பது மடங்கு பணம் இல்லை எனில் மரணம் என்ற ஆபத்தான சூதாட்ட விடுதி நடத்தும ஒரு ஃபிரான்ஸ் குடும்பம்(பிரதீப் ராவத், மசூம் சங்கர், சிறுமி மானஸ்வி) போட்டியை வஞ்சகமாக – தவறாக நடத்தி எல்லோரையும் கொலை செய்ய, ஊர் மக்களே அவர்களை அடித்துக் கொல்கிறார்கள். அந்த விடுதி பங்களா அமானுஷ்ய பங்களா ஆகிறது .
பாண்டிச்சேரியின் பெரிய தாதா ( ஃபெஃப்சி விஜயன்), தன் பேக்கு மகனுக்கு ( ரெடின் கிங்ஸ்லி ) ஓரு பிரஞ்சு குடியுரிமை பெற்ற குடும்பத்துத் தமிழ்ப் பெண்ணைக் கட்டி வைத்தால் அவனுக்கு பிரான்ஸ் குடியுரிமையும் பெற்றுத் தந்து விடலாம் என முடிவு செய்து , ஒரு பெண் பார்த்து முடிவு செய்கிறார்கள். பெண் வீட்டுக்கு இருபத்தைந்து லட்ச ரூபாய் பணமும் தருகின்றனர் .
கல்யாணத்தன்று தாதாவின் வீட்டில் கொள்ளை அடிக்க ஒரு கூட்டம் ( பிபின், முனீஸ் காந்த்) முயல, போட்டியாக இன்னொரு கூட்டமும் (மொட்டை ராஜேந்திரன் தங்கதுரை) முயல்கிறது
கல்யாணத்தன்று மணப்பெண் ஓடி விட , அவளது தங்கையை (சுரபி) கல்யாணத்துக்கு வற்புறுத்துகிறார் தாதா .
அவளைக் காதலிக்கும் ஒருவன் ( சந்தானம் ) அவளைக் காப்பாற்ற பணத்துக்கு அலைகிறான். அதே நேரம் தாதா வீட்டில் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. கொள்ளை அடித்த பல கோடி பணம், விபத்தாக காதலன் கையில் சிக்க , அவன் அதில் இருந்து இருபத்தைந்து லட்சத்தை எடுத்து காதலியிடம் கொடுக்க, அதை அவள் தாதாவிடம் கொடுக்க, அது தமது பணம் என்று தாதா கண்டுபிடித்து விடுகிறான் .
காதலியைப் பிடித்து வைத்துக் கொண்டு மொத்தப் பணத்தோடு வராவிட்டால் காதலி குளோஸ் என்று சொல்கிறான் .
மொத்தப் பணத்தையும் காதலனின் நண்பர்கள் அந்த ஆபத்தான அயோக்கிய சூதாட்ட விடுதிக்குள் போலீசுக்கு பயந்து தூக்கிப் போட்டு விட்டு வந்தது தெரிய வர, எல்லோரும் பேய் பங்களாவுக்குள் ஒருவர் பின் ஒருவராக வர , அப்புறம் நடக்கும் கலாட்டாக்களே படம் . ஆனால் பேய்க் குடும்பம் எப்படி எல்லாம் சூதாட்டம் ஆடுகிறது என்பதுதான் படத்தின் முக்கிய விஷயம் .
எம்ஜிஆர் நடித்த குலேபகாவலி (1955) படத்தின் கதையை (தஞ்சை ராமையா தாஸ்?) எடுத்துக் கொண்டு , அதில் வரும் சூதாட்ட விடுதித் தலைவி என்பதை சூதாட்ட விடுதி நடத்திக் கொல்லப்பட்ட பேய்க் குடும்பம் என்று மாற்றி , எம் ஜி ஆருக்குப் பதில் சந்தானத்தை மட்டுமின்றி கதாநாயகி உட்பட பலரையும் நிறுத்தி, காட்சிகளை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு கொஞ்சம் நவீனமாக்கி இருக்கிறார்கள் .
ஆனால் ஓ பி அடிக்காமல் , சுவாரஸ்யமான காட்சிகளால் நகைச்சுவை மற்றும் திகில் அனுபவம் இரண்டுமே தருகிறார்கள். அதுதானே சார் முக்கியம் படம் ஆரம்பித்து இருபது நிமிடம் கொடுத்து என்ட்ரி கொடுக்கிறார் சந்தானம் . அதற்குப் பிறகும் ஏழு நிமிடங்கள் வரை படம் காமா சோமா ரகம்தான். சிக்கிட்டமோ என்ற பயம் வரத்தான் செய்தது .
ஆனால் இருபத்தெட்டாவது நிமிடத்தில் ஜி பி முத்துவை வைத்து முதல் காமெடி வெடி வெடிக்கிறார் மாறன். அப்புறம் படம் தேறி, இரண்டாம் பகுதியில் கெத்து காட்டுகிறது. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்கவும் , குழந்தைகள் திகிலடையவும் பல காட்சிகள் .
சிரத்தையாக எழுதப்பட்ட திரைக்கதை. கடைசி ஐந்து நிமிடத்தில் ஹாரர் அனுபவமும் உண்டு
சந்தானம், மாறன் , ரெடின் கிங்ஸ்லி காம்பினேஷன் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மொட்டை ராஜேந்திரன் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். பெப்சி விஜயனே காமெடியில் கலகலக்க வைக்கிறார் .
கொடூரப் பேயாக வரும் சிறுமி மானஸ்வி கவனிக்க வைக்கிறார்
தீபக் குமார் பதியின் அருமையான ஒளிப்பதிவு, ஏ ஆர் மோகனின் கவனிக்க வைக்கும் கலை இயக்கம் , பாண்டிச்சேரியின் விண்டேஜ் பின்னணி இவையும் படத்துக்குப் பலம்
ஒரிஜினல் டிடி .. அதாவது சிரிக்க வைத்த தில்லுக்கு துட்டு முதல் பாகம் .. நிஜமாகவே ரிட்டர்ன்டு.