விஜய் தேவரகொண்டா , ராஷ்மிகா மந்தனா , ஸ்ருதி ராமச்சந்திரன் நடிப்பில் பரத் கம்மா இயக்கி இருக்கும் தெலுங்குப் படம் . ஒரு சில ஷாட்கள் மட்டும் தமிழ் எழுத்துக்கள் வருமாறு படமாக்கிச் சேர்த்து தமிழிலும் அதே பெயரில் கொண்டு வந்திருக்கிறார்கள் . (ஒரு நிலையில் அப்படி தமிழ்ப் படுத்துவதிலும் சறுக்கி இருக்கிறார்கள். )
கம்யூனிச சித்தாந்தப் பின்னணியில் இயங்குகிற- அநீதியை அடங்காது தட்டிக் கேட்கிற- கோபம் வந்தால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாத இளைஞன் ( விஜய் தேவரகொண்டா)
உறவை விட சிறப்பாகப் பழகும் பக்கத்து வீட்டு குடும்பம் ஒன்றின் மகள் (ஸ்ருதி ராமச்சந்திரன்) திருமணத்துக்கு வரும் அந்தக் குடும்பத்து உறவுக்காரப் பெண்ணுக்கும் (ராஷ்மிகா மந்தனா) அவனுக்கும் நட்பு ஈர்ப்பு அப்படியே ஒரு டெண்டர் காதல் . அந்த பெண் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை கூட .
நாயகனின் செயல்பாடுகள் பிரச்னைகளை உண்டாக்க ஒரு நிலையில் காதலில் பிரிவு . தேசாந்திரியாக செல்லும் நாயகன் மூன்று வருடம் சென்று வந்து பார்த்தால் விபத்தில் சிக்கி மன நோயாளியாக கிடக்கிறாள் காதலி . குணப் படுத்துகிறான் .
மகளிர் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராக உள்ள நபர் தவறாக நடந்து கொள்ள முயன்றதால்தான் அவள் பாதிக்கப் பட்டாள் என்பது நாயகனுக்கு தெரிய வர, கோர்ட்டுக்கு வந்து உண்மையை சொல்லி தண்டனை வாங்கித் தர நாயகன் வற்புறுத்த , அவமானம் கருதி நாயகியும் அவள் குடும்பத்தாரும் மறுக்க,
அந்த தேர்வுக் குழு தலைவன் , போலீஸ் அதிகாரி உதவியோடு நாயகனை கைது செய்து நையப் புடைக்க அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் படம்
படமாக்கலில் அசத்துகிறார் இயக்குனர் பரத் கம்மா . சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு பெரும்பலம் . நம்ம ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் . பாடல்களும் ஒகே .
சண்டைக் காட்சிகள் அதகளம் .
கம்யூனிஸ்டுகளிலேயே சிலர் சோரம் போய் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு வால் பிடிப்பதைசொல்லி இருப்பது சிறப்பு .
படம் முழுக்க ரிச்னஸ் .
நாயகியின் அக்காவுக்கு நாயகன் ஆரம்பத்தில் லவ் லெட்டர் கொடுத்த சம்பவமும் அதைத் தொடர்ந்து இருவருக்கும் இருக்கும் கண்ணிய நட்பும் சிறப்பான ஏரியா .
விஜய் தேவரகொண்டா ஸ்மார்ட் ஆக இருக்கிறார் . ஒகே என்ற அளவுக்கு நடிக்கிறார் .
ராஷ்மிகா கியூட் . சுருதி அழகு .
படத்தின் நீளம் பெரிய சோதனை . காட்சிகளும் கதைப் போக்கும் ராமாயண மகாபாரதமாய் நீளுகின்றன
காம்ரேட் சமாச்சாரம் காதல் சண்டை இரண்டையும் இணைப்பதில் அக்கறை கம்மி .
நாகர்ஜூனாவின் சிவா ( தமிழில் உதயம்) , பிரேமம் , ஜீவா , கனா , பை சைக்கிள் டைரி என்று ஏகப்பட்ட படங்களை திணித்து அஜீரணம் ஆக்கி விட்டார்கள் .
டியர் காம்ரேட்….. ஓவர் லோடு .