NUTMEG புரடக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி, பிருத்விராஜ் தயாரிப்பில் ஜி வி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் , காளி வெங்கட், நந்தினி , ரோகினி, தலைவாசல் விஜய், நடிப்பில் ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி இருக்கும் படம்.
அப்பா இல்லாத நிலையில் அம்மாவாலும் (ரோகினி) தான் நினைத்ததே நடக்க வேண்டும் என்று என்னும் அண்ணனாலும் ( காளி வெங்கட்) வளர்க்கப்பட்ட , ஆழ்ந்த தூக்கம் தூங்கும் பழக்கமே இல்லாத – சிறு சத்தம் கேட்டாலும் முழித்துக் கொள்ளும் சுபாவம் உள்ள நபருக்கு ( ஜி வி பிரகாஷ்) , அம்மா அண்ணனால் நிச்சயிக்கப்பட்ட பெண் ( ஐஸ்வர்யா ராஜேஷ்) குறட்டை விடும் சுபாவம் உள்ளவள்.
கல்யாணத்துக்குப் பிறகு மனைவியின் குறட்டை காரணமான அவனால் தூங்கவே முடியவில்லையாம். . சோர்வு காரணமாக தான் வேலை பார்க்கும் டி வி அலுவலகத்தில் தூங்க , நிதி அமைச்சரை இன்டர்வியூ செய்யும் வாய்ப்பு பறிபோகிறது . மனம் உடைகிறது . விவாகரத்துக் கேட்கிறான் அவன் . என்ன ஆனது என்பதே படம்.
வண்ணம், அழகியல் , வரைகலை இவற்றில் சிறந்து விளங்கும் படம் டைட்டிலில் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது .
ஜகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் பிரேம்கள் ரம்மியம்.
ஜி வி பிரகாஷின் இசை இனிமை .
நிதி அமைச்சரின் வெங்காயம் குறித்த சுயநலப் பேச்சைக் கேள்வி கேட்கும் காட்சியில் கம்பீரமாக ஜொலிக்கிறார் இயக்குனர் . பாராட்டுகள் .
அதே போல நாயகனால் ஆழ்ந்து தூங்க முடியாததற்கு சொல்லப்படும் காரணமும் . ஐஸ்வர்யா கதாபாத்திரமும் ரோகினி கதாபாத்திரமும் ஒருவர் வலியை உணரும் காட்சியும் அருமை . சபாஷ் ஆனந்த் ரவிச்சந்திரன்
கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பதோடு நன்றாக நடித்தும் இருக்கிறார் ஜி வி பிரகாஷ் . ஆனால் திரைக்கதையில் அவரது கதாபாத்திரத்தின் அளவு மிகக் குறைவாக இருப்பதால் மெயின் கதை வலுவிழக்கிறது .
மிக சிறப்பாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் ஜோடிப் பொருத்தம் சரி இல்லை. அதுவும் கணவனை வாடா போடா எனு பேசும் காட்சிகளில் அக்காவும் தம்பியும் பேசுவது போலவே இருக்கு.
மிக மெதுவாக நகரும் படம் ஆரம்பத்தில் இழுத்தாலும் அதுதான் ஸ்டைல் என்று ஆன பிறகு அந்த நகர்வு கெத்துதான். ஆனால் அதுதான் ஸ்டைல் என்று ஆகி விட்டால் தேவை இல்லாமல் ஒரு காட்சி , ஒரு வசனம் , ஒரு ஷாட் கூட படத்தில் வரக் கூடாது . அங்கேதான் பலத்த அடி வாங்குகிறது படம். ரிப்பீட்டேஷன்கள் ஜாஸ்தி .
தவிர இது போன்ற கதையில் ஒரு பிரச்னைக்கு தீர்வு தேட,அதை விட பெரிய பிரச்னைகளைக் கிண்டி விடும் பாணி ஒரு பலவீனமான உத்தி. மீறி அப்படி வைத்தால் அந்தத் திரைக்கதை பரபரவென நகர வேண்டும் . இங்கே தலைகீழ்.
படத்தில் ஐஸ்வர்யா தோன்றும் முதல் காட்சியிலேயே அல்லவா அவர் குறட்டை விட்டு தெறிக்க விட்டிருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு அவர் குறட்டை விடுவார் ; நான் குறட்டை விடுவேன்; என்னது குறட்டை விடுவாரா? குறட்டை? குறட்டையா? குறட்டை தானா? என்று பேசிக் கொண்டே இருக்க,
ஏ புள்ள.. இப்ப நீ குறட்டை விடுவியா மாட்டியா? என்று கேட்கத் தோன்றுகிறது .
கணவன் மனைவி இடையிலான குறட்டை பிரச்னையில் யதார்த்தமே வேறு. குட் நைட் படத்தையே மற்ற கேரக்டர்கள் வடிவமைப்பால் மக்கள் மன்னித்தார்கள் . ஆனால் இங்கே இன்னும் மோசம் .
குறட்டை பிரச்னை மட்டுமின்றி ஓடிப் போன அப்பா (தலைவாசல் விஜய்) கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் படு செயற்கை
மொத்தப் படத்திலும் பாலைவனச் சோலையாக இருப்பது அதிகாரக் கணவனிடம் தன் ஏமாற்றங்களைக் காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்வதாகவே கற்பிதம் செய்து கொள்ளும் அண்ணி கதாபாத்திரம்தான் .
அதனாலேயே அதில் நடித்து இருக்கும் நந்தினி ஒரு தேவதை போல ஜொலிக்கிறார்.
ஆனால் அந்தக் கதாபாத்திரத்தையும் ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் பெருமை பேசப்படும் காட்சியில் அவரை அங்கேயே நிற்க வைத்து கனம் ஏற்றாமல் காட்சியை விட்டே வெளியே ஓட வைக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் DEAR… NOT SO NEAR