தமிழ்த் தாய் கலைக்கூடம் சார்பில் எஸ் ராஜலிங்கம் வெளியிட தர்ட் ஐ கிரியேஷன் சார்பில் எம் டி ஆனந்த் தயாரித்துப் படத் தொகுப்பு செய்ய,
அட்டு படத்தில் முழு ஈடுபாட்டோடு நடித்து இருந்த ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும்
ஆஷா பார்த்தலோம் கதாநாயகியாகவும் நடிக்க எம் டி ஆனந்த் எழுதி இயக்கி இருக்கும் படம் மரிஜுவானா.
பவர் ஸ்டார் சீனிவாசனும் நடித்திருக்கிறார்.
படம் பார்க்க டிக்கட் வாங்க நாம் டிக்கட் கவுன்ட்டருக்குள் கை விடும்போது ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டு கவுண்ட்டர் குளோஸ் செய்வார்களே..
அப்படி , மார்ச் இருபதாம் தேதி திரைக்கு வர எல்லா வகையிலும் தயாராக இருந்து லாக் டவுனில் சிக்கிய படம் இது .
எப்படிப்பட்ட படம் இந்த மரிஜுவானா? அணை உடைத்த வெள்ளம் என ஆர்வமாகப் பேசுகிறார் இயக்குனர் ஆனந்த்.
” கஞ்சாவின் அறிவியல்பூர்வமான பெயர்தான் மரிஜுவனா. கஞ்சா என்றவுடன் நமக்கு அது ஒரு ஆபத்தான போதைப் பொருள் என்று தெரியும் . அதற்குக் காரணம் கஞ்சாவில் பேட்டரி , பல்லி வால் போன்ற ஆபத்தான விஷயங்கள் அதீத போதைக்காக சேர்க்கப் படுவதுதான்.
அவை சேர்க்கப் படவில்லை என்றால் ஆபத்தான போதை இல்லையா என்று கேட்கலாம்.அளவுக்கு மீறினால் அமுதமே நஞ்சு எனும்போது போதை தரும் கஞ்சா மட்டும் எப்படி நஞ்சாக மாறாமல் போகும்?
ஆனால் அடிப்படையில் கஞ்சா ஒரு மூலிகை . போதையிலும் கூட அதற்கு ராஜ போதை என்ற பெயர் உண்டு.
மனக் கட்டுப்பாடு உள்ளவர்கள் தூய்மையான கஞ்சாவை ஆறு மாதத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட குறைந்த அளவில் எடுத்துக் கொண்டால் அதற்கு புற்று நோய் உருவாவதை தடுக்கும் சக்தி உண்டு.
கஞ்சாவை முழுக்க முழுக்க போதைப் பொருளாகவே அறிய வைத்ததன் பின்னால் பன்னாட்டு மருத்துவ சதிகள் உண்டு.
எனினும் மனக் கட்டுப்பாடு எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்பதால்தான் அதை போதைப் பொருளாக வைத்தோம்.
அடிக்கடி பயன்படுத்தி அளவுக்கு மீறி உடம்பில் ஏறினால் பிரவுன் சுகர் போன்ற போதைப் பொருட்களைப் போலவே மனிதனை மிருகம் ஆக்கும் சக்தி சைக்கோ ஆக்கும் சக்தி கஞ்சாவுக்கும் உண்டு.
அப்படி அதிக அளவு போதை மனிதனை ஒரு மனிதனை எந்த அளவுக்குத் தள்ளும் என்பதையும்,
இப்படி அதீத கஞ்சா போதைக்கு ஆளாகும் மனிதன் தன்னிலை மறந்து பல குற்றங்கள் செய்யும்போது அது மற்ற மனிதர்கள் பெண்கள், குழநதைகள் ஆகியோரை எப்படி பாதிக்கப் படுகிறது என்பதையும்,
குறிப்பாக போதைக்கு ஆளானவர்களால் பெண்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள், போதைப் பழக்கம் பெண்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறேன்.
ஒரு வகையில் பெற்றோருக்குப் பாடம் சொல்லும் படமாகவும் இது இருக்கும்.
அதோடு போதைக்கு ஆளாக்கி தீமை செய்பவர்கள் பணக்காரர்களாக இருந்தால் அவர்கள் எப்படி தப்பித்து தொடர்ந்து கெடுதல்களை செய்கிறார்கள். அதே நேரம் அவர்கள் ஏழைகள் என்றால் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதை எல்லாம் சொல்லி இருக்கிறேன் ” என்கிறார் நம்பிக்கையோடு .
படத்தின் நாயகன் ரிஷி ரித்விக் ” அட்டு படத்தில் பல சிரமங்களை எதிர் கொண்டு முழு ஈடுபாட்டோடு நடித்த என்னை பத்திரிக்கைகள் கொண்டாடியதை மறக்க முடியாது.
ஆனால் இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டர். அவனும் ஒரு சைக்கோதான் . ஆனால் இவன் கஞ்சா அடித்து சைக்கோ ஆனவன் அல்ல. வேறு மாதிரியானவன். ஆரம்பத்தில் இந்த கேரக்டர் எனக்கு சரியாக வருமா என்ற கேள்வி எழுந்தது . ஆனால் இயக்குனர் முழு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார் . ஓரிரு நாட்களிலேயே நம்பிக்கை வந்து நடித்து முடித்தேன் . வழக்கம் போல உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.
சரி படம் எப்போ ரிலீஸ்?
அதுதான் தலைப்பிலேயே இருக்கிறதே.
“வி பி எஃப் கட்டணங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளால் தீபாவளிக்கு புது படங்கள் ரிலீஸ் இல்லை என்று நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இயக்குனர் பாரதிராஜா கூறி இருக்கிறாரே?” என்று கேட்டால்,
திட்டவட்டமாகவும் தீர்மானமாகவும் பேசுகிறார், படத்தை வெளியிடும் தமிழ்த் தாய் கலைக்கூடம் எஸ் ராஜலிங்கம்.
“சார், நான் அவர்களை எல்லாம் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் சொல்வதும் நன்மைக்குத்தான் என்பதை உணர்கிறேன். ஆனால் நிலைமை அதற்கு ஏற்றவாறு இல்லை . படத்துக்கு பெரும் செலவில் விளம்பரம் செய்து எல்லாம் தயாராகி ரிலீஸ் ஆகும் நாள் நெருங்கிய நிலையில் லாக் டவுனில் சிக்கினோம். எட்டு மாசம் ஆகி விட்டது .
இப்போது திரையரங்குகள் திறக்கும் நேரத்திலும் நாங்கள் ரிலீஸ் பண்ணாமல் சும்மா இருந்தால் அப்புறம் எல்லா பெரிய படங்களும் வரும் சமயத்தில் ரிலீஸ் செய்யவே முடியாது .
எனவே தீபாவளிக்கு புதுப் படங்களை வெளியிட அனுமதி கொடுக்கப்படும் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் வேறு வழியின்றி தீபாவளிக்கு ரிலீஸ் செய்து விடுவேன்.
எப்படிப் பார்த்தாலும் தீபாவளிக்கு சுமார் நூற்று ஐம்பது திரையரங்குகளில் வெளியாகிறது எங்கள் மரிஜுவனா”