தெய்வமச்சான் @ விமர்சனம்

உதய் புரடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், மற்றும் எம் பி வீரமணி தயாரிப்பில்  விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், பால சரவணன், வத்சன் வீரமணி  தீபா சங்கர், நடிப்பில் வத்சன் வீரமணியோடு சேர்ந்து திரைக்கதை எழுதி- தான் மட்டும் கதை வசனம் எழுதி மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கி இருக்கும் படம்.

 
அம்மாவை இழந்த , அப்பா ( பாண்டியராஜன்) , அண்ணன் – அண்ணி அவர்களது பிள்ளைகள், இவர்களோடு , தன் தங்கை  (அனிதா சம்பத் ) மீது  அளவற்ற பாசமும் கொண்ட – ஒரு நல்ல நண்பன் ( பால சரவணன்) இருக்கிற -ஓர் இளைஞனுக்கு ( விமல்) அடிக்கடி கனவில் வரும் ஒரு வேட்டைக்காரன் ( வேல. ராமமூர்த்தி) சொல்வது எல்லாம் நடக்கிறது. 
 
தனது தங்கையின் திருமணம் அடிக்கடி தடைபட்டு வரும்   நிலையில் பக்கத்து ஊர் ஜமீன்தார் ( ஆடுகளம் நரேன்) , வயதான தன் தம்பிக்கு தங்கையை பெண் கேட்டு வர , அதனால் வரும் சண்டையில் ” பொண்ணைத் தூக்கி  தாலி கட்டறோம் ” என்று சவால் விட்டு விட்டு போகிறது ,  தன் மகள் வயது பெண்ணை மனைவியாகவும் தங்கை வயது பெண்ணை மாமியாராகவும் கொண்ட அந்த ஜமீன்தாரின், குடும்பம் 
இந்நிலையில் தங்கைக்கு பிடித்த ஒரு மாப்பிள்ளை (வத்சன் வீரமணி)  அமைய , ஜமீந்தார் அனுப்பிய ஆட்களால் சேலையில் தீப்பிடிப்பது போன்ற அப சகுனங்கள் நடக்க, மாப்பிள்ளையின் அம்மா கல்யாணத்தை நிறுத்த , நாயகன் வீட்டார் நொந்து போக, மாப்பிள்ளை தலையிட்டு ‘இதெல்லாம் தப்பு இதே பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று கூற , கல்யாணம் நடக்கிறது . 
 
இந்த நிலையில் கல்யாணத்துக்கு முதல் நாள் நாயகன் கனவில் வரும் வேட்டைக்காரன், ” உன் தங்கச்சி புருஷன் … மச்சான் .. ரெண்டு நாளில் செத்து விடுவான் “என்று கூற , கல்யாணத்தை நிறுத்த நாயகனே முயல, ஜமீந்தார் ஆட்கள் நாயகனை கட்டையால் அடித்து வீழ்த்த, அவன் மயங்கிய நிலையில் நாயகன் இல்லாமலே கல்யாணம் நடக்க,  மயக்கம் தெளிந்து எழும் நாயகன் கல்யாணம் முடிந்ததை எண்ணி அதிர , அடுத்த இரண்டு நாளில் என்ன நடக்கிறது என்பதே இந்தப் படம். 
முதலில் இது ஒரு  நல்லுணர்வு திரைப்படம் ( feel good movie) . படத்தின் முதல் பலம் இதுதான் . மேடை நாடகம் போல ஆரம்பக் காட்சிகள் நகர்ந்தாலும் அதிலும் சில பல இடங்களில் சிரிக்கவோ புன்னகைக்கவோ வைப்பதில் வெற்றி பெறுகிறார்கள். 
 
வீட்டில் எது விசேஷம் என்றாலும் வந்து ஒப்பாரி வைத்து சிண்டு முடிந்து போகும்போது மளிகை சாமான்களை கட்டிக் கொண்டு தன் வீடு போகும் வழக்கமுள்ள நாயகனின் அத்தை கேரக்டர் (அப்பாவின் தங்கை) அபாரம் . தீபா சங்கரின் எரிச்சலூட்டும் ஓவர் ஆக்டிங்கையும் மீறி அந்தக் காட்சிகள் கவர்கிறது என்றால் காரணம் மிக இயல்பான யதார்த்தமான அந்த கதாபாத்திர வடிவமைப்பும் செயல்களும்தான் . அந்த கதாபாத்திரம் இன்னும் இயல்பான நடிப்பில் வெளிப்பட்டு இருந்தால் அந்தக் காட்சிகள் பட்டையைக் கிளப்பி இருக்கும். 
 
விமல், பால சரவணன், பாண்டியராஜன், வத்சன் வீரமணி நடிப்பில் அவ்வளவு இயல்பு. முதிர்கன்னி தங்கை கேரக்டருக்கு சிறப்பாகப் பொருந்துகிறார் அனிதா சம்பத். வேட்டைக்காரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி வழக்கம் போல . 
கேமில் ஜே அலெக்சின் ஒளிப்பதிவு, இளையராஜா எடிட்டிங் , அஜீஸின் இசை ஆகியவை திரைக்கதையின் பின்னால் ஒளிந்து விட்டன . 
 
”உன் தங்கச்சி புருஷன் … மச்சான்” என்பதற்கு அர்த்தம் தங்கச்சி புருஷன் என்கிற மச்சானா ?  இல்லை தங்கச்சி புருசனின் மச்சானா ?  பழைய மச்சானா ? புது மச்சானா?  என்ற  டுவிஸ்டுகளில் அசத்தி இருக்கிறார்கள் . இது தவிர கிளைமாக்சில் சில  தெறி  காமெடிகளும் உண்டு . 
 
சகுனம் பார்த்து கல்யாணத்தை நிறுத்த முயலும் அம்மாவை கண்டித்து பெண் வீட்டார் நிலையை எண்ணிப் பார் என்று புரிய வைத்து கல்யாணத்தை நடத்தும் புது மாப்பிள்ளை போன்ற எவர் கிரீன் காட்சிகளும் படத்தில் இருப்பது பலம்தான்.
 
இவ்வளவு இருந்தும் படம் மிக சுமாராகப் போய்விடக் காரணம் , இந்த நல்ல விசயங்களுக்கு இடையே எல்லாம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் வளவள என்று பேசிக் கொண்டு சவ சவ என்று காட்சிகள் நகர்வதுதான் . அவற்றைக் கடப்பது என்பது இந்தப் படத்தில் வரும் மெதுவாக நகரும் மினி பஸ் பயணக் காட்சியில்  கதாபாத்திரங்களுக்கு வரும் சோதனையை விடப் பெரிய சோதனையாக இருக்கிறது 
 
தவிர 1980 களில்  வந்த படங்கள் போல மிகப் பழைய பாணி படமாக்கல் ஒரு பலவீனம் . 
 
ஒட்டு மொத்த படத்திலும் இன்னும் கதை திரைக்கதை வசனம் , இயக்கம் இன்னும் ஒரு படி மேலே இருந்து இருந்தால் படம்  தெய்வ மச்சனாகவே இருந்திருக்கும் . 
 
அது இல்லாத காரணத்தால் இந்தப் படம் இப்போது , பி அண்ட் சி ஏரியாகளில் மட்டும் சூடம் காட்டும் வாய்ப்புள்ள ,  ‘பூசாரி மச்சான்’ 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *