ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராம நாராயணன் வெளியிட , மோகனா மூவீஸ் சார்பில் மு.க.தமிழரசு தயாரிக்க,
அருள்நிதி, ரமேஷ் திலக், ஷனத். அபிஷேக் ஜோசப் , மதுமிதா ஆகியோர் நடிக்க அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி இருக்கும் படம் டிமான்டி காலனி. 1900 கால கட்டத்தில் சென்னையில் வாழ்ந்த ஒரு போர்த்துகீசிய செல்வந்தரின் பெயர் டிமான்டி. அவரது பெயரில் சென்னையில் டிமான்டி காலனி என்ற பெயரில் ஒரு காலனி இன்றும் உண்டு . படத்தின் பெயரும் அதன் அடிப்படையிலேயே அமைகிறது.
படம் இயக்க கதை சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு உதவி இயக்குனர், ஒரு பிளம்பர், ஒரு ஐடி கம்பெனி ஊழியன் இவர்களோடு ஒரே அறையில் தங்கி இருக்கும் அம்மா அப்பா இல்லாத ஓர் இளைஞன் (அருள்நிதி). இவர்களின் இரண்டு நாள் திகில் அனுபவமே இந்தப் படம்.
உதவி இயக்குனராக இருப்பவன் , வித்தியாசமாக கதை தேடும் முயற்சியில் இருக்கிறான் . டிமான்டி காலனியில் உள்ள டிமான்டி வாழ்ந்த ஒரு பெரிய பங்களாவில் பேய்கள் இருப்பதாக கூறப்படும் செய்தியைக் கேட்டு அங்கு இரவில் நேரில் போய்ப் பார்த்து , அதன் பின் அந்த உணர்வின் அடிப்படையில் கதை எழுத விரும்புகிறான்.
நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓர் அடைமழை இரவில் அங்கு போகிறான். சில பல திகில் அனுபவங்கள் நண்பர்கள் நால்வருக்கும் அமைய , அங்கு இருந்த ஒரு பெரிய தங்க டாலரையும் கொண்டு வந்து விடுகிறான் அந்த உதவி இயக்குனர் இளைஞன்.
தங்கள் அறைக்குள் நால்வரும் இருக்க , டிமான்டி காலனி பற்றி இன்டர்நெட்டில் தேட, ஒரு திகில் கதை வெளிப்படுகிறது .
டிமான்டி பிரபுவின் மனைவி மன நிலை பாதிக்கப்பட்டவள் . ஒரு (இப்போது உதவி இயக்குனர் எடுத்து வந்திருக்கும் ) தங்க டாலரை கையில் வைத்துக் கொண்டே சித்தப் பிரம்மை பிடித்தவள் போல ஒரே திசையில் பார்த்துக் கொண்டு இருப்பவள் அவள்.
பிரபு வெளியூர் போய் இருந்த நேரம் அவளை யாரோ கெடுத்து கர்ப்பமாக்கி விட, யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் பொறுமை இழந்த டிமான்டி பிரபு மண்டை சூடாகி வேலையாட்கள் , மனைவி ஆகியோரைக் கொன்று விட்டு , தானும் தற்கொலை செய்து கொள்கிறார் .
அதன் பின்னர் அந்த பங்களாவுக்கு போகும் அனைவரும் யாராலும் காப்பாற்ற முடியாமல் செத்துப் போவார்கள் என்று அந்த இன்டர்நெட் தகவல்கள் கூற , நண்பர்கள் திகில் ஆகிறார்கள்.
அதன் பின்னர் அந்த சின்ன அறைக்குள் யாராலும் நண்பர்களைக் காப்பாற்ற வழி இல்லாமல், பேய்கள் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கின்றன.
கடைசியில் என்ன ஆனது என்பதே இந்த டிமான்டி காலனி .
படம் ஆரம்பித்து பத்து நிமிடம் ஆன பிறகே வருகிறார் அருள்நிதி, அந்த அளவுக்கு மற்ற கேரக்டர்களுக்கு இடம் கொடுத்து நடிக்கும் அந்த பண்புக்கு பாராட்டுகள் . முன்னிலும் இப்போது உயரமாக தெரிகிறார் . அழகாக இருக்கிறார் , சிறப்பாக நடிக்கிறார் . வாழ்த்துகள் அருள்நிதி
அருளுக்கும் மதுமிதாவுக்குமான அந்த காமெடியான ‘கள்ள’ நேசம் கல கல ஏரியா . ஆனால் அந்த பகுதியை சுருக்கி முடித்து விட்டது சோகம் .
டிமான்டி பிரபு பற்றிய பிளாஷ்பேக்கில் உடைகள் , பொருட்கள் , அலங்காரங்கள் என்று அந்த ஏரியாவில் அசத்தி இருக்கிறார் கலை இயக்குனர் சந்தானம்.
பேய் பங்களாவில் இருந்து வந்த நண்பர்கள் குழுவில் ஒருவன் பல மணி நேரங்களாக தொடர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, அவன் பேய் பங்களாவிலேயே செத்துப் போய் விட்டான் . இப்போது அவன் ரூபத்தில் படுத்து இருப்பது பேய் என்ற விவரம் தெரிய வருவது சிலீர் திகீர் திகில் .
ஒரு சுமாரான அறையில் இருக்கும் பொருட்களான டிவி , கேஸ் ஸ்டவ், கத்தி, தண்ணீர் , கரண்ட் இவற்றின் மூலம் படம் காட்டுவது, நெருப்பு பிடிப்பது, ஷாக் அடிப்பது என்று பேய்கள் ஆடும் ஆட்டம் ஒரு பக்கம் என்றால் ….
திடீரென்று ஏசி மெஷினின் குளிர்ச்சி உறைந்து கொண்டே போய் அறையே பனி மலை ஆவது…… அடடா அபாரம்! ஆங்கிலப் படங்களை நினைவூட்டுகிறது .
எதிர்பாராத கிளைமாக்ஸ் !
ஒரு பங்களா , ஒரு வீடு , கொஞ்சம் ரோடு என்று குறைவான லொக்கேஷன்களில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் குறிப்பிட்ட வட்டத்துக்குள் ஒரு பேய்ப் படம் எடுத்து இருக்கிறார்கள் .
டிமான்டி காலனி .. திக் திடுக் காலனி