ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் , கவுதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன் நடிப்பில் முத்தையா இயக்கி இருக்கும் படம் தேவராட்டம் . சதிராட்டமா?தள்ளாட்டமா ? பேசுவோம் .
ஐந்து பெண் பிள்ளைகள் பிறந்த நிலையில் இருபது வருடம் கழித்து மூத்த அக்காவும் (வினோதினி) அம்மாவும் மாசமாக இருந்த போது, ஆறாவதாக ஒருவன் பிறந்த தம்பி (கவுதம் கார்த்தி). பாசமுள்ள மூத்த மாமன் ( போஸ் வெங்கட்) .
மற்ற அக்காக்களின் மாமன்கள் நால்வர் ( சூரி, சக்தி சரவணன் , முனீஸ்காந்த், ஆறு பாலா)
ஆண்பிள்ளை பிறக்காத குறை மாற கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வீடுகள் மற்றும் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் நேர்த்திக் கடனை நிறைவேற்றி ஓர் ஆண் பிள்ளைக்கு அப்பனான மதுரை தாதா ( ஃபெப்சி விஜயன்) .

வக்கீலுக்கு படிக்கும் தம்பியை வம்பு தும்பு வேண்டாம் என்று சிவில் லாயராக ஆக்க நினைக்கிறார்கள் . மதுக்கடைக்கு எதிராக போராடும் வக்கீல் மாணவிக்கும் (மஞ்சிமா மோகன்) அவனுக்கும் காதல் வருகிறது .
மூத்த அக்காளின் மகளை அரசியல்வாதியின் மகன் ஒருவன் தவறாக படம் எடுக்க, அதை தட்டிக் கேட்கும் அவளின் தோழி அரசியல்வாதி மகனை செருப்பால் அடிக்க, அந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரல் ஆகிறது. அந்த தோழியை கடத்தும் அரசியல்வாதி மகன் அவளை போதை மருந்துக்கு அடிமையாக்கி பலபேரை சீரழிக்க விட்டு வீடியோ எடுத்துப் போட்டு தன் பங்குக்கு வைரல் ஆக்குகிறான் .

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க, பெண்ணை சீரழித்தவன், தாதாவின் தவப்புதல்வனிடம் தஞ்சம் அடைகிறான் . தஞ்சம் கொடுக்கும் புதல்வன் , பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைக் கொல்ல, கோபப்படும் நாயகன் வெறி கொண்டு , பெண்ணை சீரழித்தவனையும் தாதாவின் மகனையும் வகுந்து தள்ள,
கொந்தளித்துக் கிளம்பும் தாதாவின் அதிராட்டம் என்ன ?, நாயகனின் எதிராட்டம் என்ன? என்பதே தேவராட்டம் .
நிறைய செண்டிமெண்ட், அதை விட நிறைய சண்டை, கொஞ்சம் காதல் என்று திரைக்கதை அமைத்து கமர்சியல் கதகளி ஆடுகிறார் இயக்குனர் முத்தையா . மதுரையின் மண் வாசனை , சமூகக் கூறுகளோடு சில காட்சிகள் .

நாயகன் வில்லன் எல்லாரும் ஒரே சாதியினர் என்று கதை போவதால் வேறு வில்லங்கம் இல்லை . அண்ணி தாயாகும் தருணம் நெகிழ்வு . ஆனால் நாயகன் அவ்வளவு வளர்ந்த பின்னும் அண்ணி இளமையாகவே இருக்கிறார் .
தமிழக போலீசின் அராஜகத்தை சித்தரிப்பாக அல்ல, நிஜ காட்சிகளையே எடுத்துப் போட்டு நேரடியாக சாடுகிறார் முத்தையா . சபாஷ் !
கவுதம் கார்த்திக் உற்சாகமாக ஆடுகிறார். அடிக்கிறார் . மஞ்சுமா மோகன் சும்மா ஒப்புக்கு சப்பாணி .
நாயகனுக்கு ஐந்து அக்காக்கள் , ஐந்து மாமன்கள் என்று அந்த குடும்ப ஏரியா நிறைவு . ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் சூரி . மண் மணம் மாறாத முகங்களில் அக்காக்களாக நடித்திருப்போர் கவர்கிறார்கள். சூரி, சக்தி சரவணன் , முனீஸ்காந்த், ஆறு பாலா ஆகியோரும் குறை வைக்கவில்லை.

முக்கியமான ஆபத்துக் காட்சியில் அட்டகாசமான நடிப்பால் அசத்துகிறார் வினோதினி . மிக சிறப்பு .
நிவாஸ் பிரசன்னா இசையில் சத்தம் மிகுதி . மாமன்களில் ஒருவராக நடித்தும் இருக்கும் சக்தி சரவணின் ஒளிப்பதிவு இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறது.
அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிய ரசிகன் கூட முழுக்க கணிக்க முடிவது ஒரு குறை . விளைவு? கிளைமாக்ஸிலும் நடந்ததை சொல்லிவிட்டு அப்புறம் காட்டும் உத்தி பெரிதாக பலன் தரவில்லை .

ஆனாலும் என்ன… ‘பொம்பளப் புள்ளைங்கள அசிங்கப்படுத்துனா , வெட்டிப் பொலி போடு’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்வதன் மூலம் ,
‘ படத்தைப் பார்த்துட்டு எவனும் வந்துடப் போறான்’ என்ற பயத்தை குற்றவாளிகளுக்கு படம் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு .
அந்த வகையில் கம்பீர ஆட்டம் ஆடுகிறது படம் !
மொத்தத்தில் தேவராட்டம்…. சமூக அக்கறை ஜதியில் நடக்கும் சென்டிமன்ட் மற்றும் கமர்ஷியல் கலந்த கலப்பாட்டம்